சமூகம்
Published:Updated:

“சின்னம்மா தலைமையில் அ.தி.மு.க!” - சசிகலா ஆதரவாளர்களின் புதுக்கணக்கு!

“சின்னம்மா தலைமையில் அ.தி.மு.க!” - சசிகலா ஆதரவாளர்களின் புதுக்கணக்கு!
பிரீமியம் ஸ்டோரி
News
“சின்னம்மா தலைமையில் அ.தி.மு.க!” - சசிகலா ஆதரவாளர்களின் புதுக்கணக்கு!

“சின்னம்மா தலைமையில் அ.தி.மு.க!” - சசிகலா ஆதரவாளர்களின் புதுக்கணக்கு!

‘மே 23-ம் தேதி, தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி தொடருமா, தொடராதா...’ என்கிற விவாதம்தான் தமிழகம் முழுக்க எதிரொலிக்கிறது. ஒருவேளை ஆட்சிக் கவிழ்ப்பு நிகழ்ந்தால், அடுத்து என்ன செய்வது என்பது குறித்துத்தான் அ.தி.மு.க-வின்  முக்கியஸ்தர்கள் பலரும் யோசித்து வருகிறார்கள். இந்தநிலையில், சிறையிலிருக்கும் சசிகலா, பரோல் கேட்டு விண்ணப்பித்திருப்பது, அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

“சின்னம்மா தலைமையில் அ.தி.மு.க!” - சசிகலா ஆதரவாளர்களின் புதுக்கணக்கு!

ஒரு கைதி ரத்த சம்பந்தம் கொண்ட உறவினர்களை மருத்துவமனையில் பார்ப்பதற்கும், தனக்குச் சிகிச்சைப் பெறுவதற்கும்தான் உடனடியாக பரோல் பெற முடியும். தற்போது சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனம், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சசிகலா அவரைப் பார்க்க வருவதாக இருந்தால், ஐந்து நாள்கள் மட்டுமே பரோல் கிடைக்கும். அதேநேரத்தில், தன் சிகிச்சைக்காக ஒரு மாதம் வரை அவர் பரோல் பெற முடியும். தற்போது, சசிகலாவுக்கு உடல் நிலை பாதிப்புகள் அதிகமாக இருப்பதால், ‘தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று சிறை மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். அதனால், ‘தனக்குச் சிகிச்சை தேவை’ என்று சசிகலா பரோலுக்கு விண்ணப்பித்துள்ளார். இதனால், அவருக்குக் கணிசமான நாள்கள் பரோல் கிடைக்க வாய்ப்புள்ளது. அநேகமாக ஜூன் முதல் வாரத்தில் பரோல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதான் தற்போது தமிழக அரசியல் சூழலில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், ‘தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும்’ என்று உறுதியாக நம்புகிறது, சசிகலா தரப்பு. அதனால், ‘சசிகலா மூலம் அ.தி.மு.க-வுக்குள் சலசலப்புகள் உண்டாக நிச்சயம் வாய்ப்பிருக்கிறது’ என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

இதுகுறித்து சசிகலா ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம். “நாடாளுமன்றத் தேர்தலுக்காக அ.தி.மு.க அமைத்திருக்கும் கூட்டணி படுமோசமான தோல்வியைச் சந்திக்கும். ஏற்கெனவே சில அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள், கூட்டணி குறித்த எடப்பாடி பழனிசாமியின் தவறான முடிவால், கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். அவர்கள், தேர்தல் முடிவுக்குப் பிறகு, கூட்டாகவோ அல்லது தனித் தனியாகவோ முதல்வருக்கு எதிராகக் கலகம் செய்ய இருக்கிறார்கள். அத்துடன், ‘அ.தி.மு.க-வுக்கு சசிகலா என்ற ஆளுமை தேவை’ என்று அழுத்தமாகக் குரல் கொடுக்கப்போகிறார்கள். அது தமிழகம் முழுவதும் எதிரொலிக்கும். அதனால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்குச் சிக்கல் ஆரம்பமாகும்.

அப்படியொரு நிலை ஏற்பட்டால், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மீது அதிருப்தியில் உள்ள நிர்வாகிகள் சசிகலாவுக் குத்தான் ஆதரவு கொடுப்பார்கள். பெரும்பாலான நிர்வாகிகள் சசிகலா பக்கம் சாய்ந்தால், தானாகவே அ.தி.மு.க சசிகலாவின் கைகளுக்கு வந்துவிடும். எடப்பாடிக்கும் பன்னீருக்கும் இடையே உரசல் நிலவுவதால், அவர்கள் தங்களைக் காத்துக்கொள்ள தனித்தனி அணியாகப் பிரியலாம். அப்படியொரு சூழ்நிலை உருவாகும்போது, ஆட்சி கலைக்கப்படும். அதனால், தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்படலாம். சசிகலா அணிக்கு, இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டாலும் 234 தொகுதிகளிலும் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்” என்றனர்.

சட்டமன்ற உறுப்பினராக இருந்து தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், சசிகலா குடும்பத்தினரிடம் நெருக்கமாக இருக்கும் ஒருவரிடம் பேசினோம். “எடப்பாடி பழனிசாமி முதல்வரான பிறகு, அவர் எடுத்த முடிவுகள் அனைத்துமே அ.தி.மு.க-வின் கொள்கைகளுக்கு எதிரானவை. தன் சுயநலத்துக்காக 18 சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதிநீக்கம் செய்துள்ளார். பி.ஜே.பி மற்றும் பா.ம.க ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது, அம்மாவின் கொள்கை களுக்கே எதிரானவை. அதனால், தேர்தலில் அந்தக் கட்சி படுதோல்வி அடையப்போவது உறுதி. அதன் பிறகுதான் அ.தி.மு.க-வில் ‘ஸ்லீப்பர் செல்’களாக உள்ள நிர்வாகிகள் பலரும் சின்னம்மாவுக்கு ஆதரவாக வெளியே வருவார்கள்” என்றார் உறுதியாக.

தினகரன் அணியினரின் கர்நாடக மாநிலச் செயலாளர், ‘பெங்களூரு’ புகழேந்தியிடம் இதுதொடர்பாகப் பேசினோம். “சொந்த சகோதரன்போல நினைத்துத்தான் எடப்பாடியிடம் ஆட்சியை ஒப்படைத்தார், சின்னம்மா. ஆனால், மிகப் பெரிய துரோகத்தைச் செய்துவிட்டார், எடப்பாடி. அதற்கு மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பு, வருகிற மே 23-ம் தேதி, அறிவிக்கப்படவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும். தமிழகத்தில் ஆட்சியிலும், அ.தி.மு.க-விலும் பல அதிரடி மாற்றங்கள் ஏற்படும். அப்போது சின்னம்மாவின் கைகளில், அ.தி.மு.க என்ற கட்சி தானாக வந்து சேரும். அதன் பின்பு தமிழகத்தில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்று தற்போதைய சூழ்நிலையில், என்னால் வெளிப்படை யாகச் சொல்ல முடியாது” என்றார்.

இவர்களின் கணிப்பு பலிக்குமா? விரைவில் தெரிந்துவிடும்!

- எம்.வடிவேல்