
ஜார்கண்டில் ஆறு பேருக்கு ஆயுள் தண்டனை - பின்னணியில் ‘பதல்காடி’ பயங்கரவாதம்!
வீதி நாடகம் நிகழ்த்திய ஐந்து பெண்கள் ஒரு கொடூர கும்பலால் கடத்திச்செல்லப்பட்டு, துப்பாக்கிமுனையில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், ஒரு பாதிரியார் உட்பட குற்றவாளிகள் ஆறு பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது, ஜார்கண்ட் நீதிமன்றம். ‘பாலியல் இச்சைகளைத் தாண்டி, வேறு காரணங்களுக்காக அந்தக் கொடுமை நிகழ்த்தப்பட்டது’ என்கிற அதிர்ச்சிக்குரிய விஷயத்தை, தீர்ப்பில் கூறியுள்ளது நீதிமன்றம். இதன் பின்னணியைத் தோண்டினால், அதிரவைக்கும் பல்வேறு விவகாரங்கள் வெளியே வருகின்றன.

ஜார்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியிலிருந்து 90 கி.மீ தொலைவில் உள்ளது குந்தி மாவட்டம். அங்குள்ள கோச்சங் என்கிற கிராமத்தில் ஆர்.சி மிஷன் பள்ளி என்கிற கிறிஸ்துவப் பள்ளி இயங்கிவருகிறது. 2018 ஜூன் 19-ம் தேதி அன்று அங்கு, தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஐந்து இளம் பெண்கள் வீதி நாடகம் நிகழ்த்தினர். இளம் பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தப்படும் பிரச்னை குறித்த விழிப்பு உணர்வு நாடகம் அது.
திடீரென மோட்டார் சைக்கிள்களில் பள்ளிக் குள் நுழைந்த ஒரு கும்பல், அந்த ஐந்து பெண்களை யும் கடத்திச்சென்று, ஒரு காட்டுப் பகுதியில் வைத்துக் கூட்டாக வல்லுறவுகொண்டனர். அதை செல்போனில் வீடியோவும் எடுத்தனர். அந்தப் பெண்களை சிறுநீர் குடிக்கவைத்தனர். கொடும் சித்ரவதைகளுக்குப் பிறகு, மூன்று மணி நேரம் கழித்து அவர்களை விடுவித்த அந்தக் கயவர்கள், காவல்துறையில் புகார் அளித்தால், அந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டு விடுவோம் என்று எச்சரித்தும் அனுப்பினர்.
தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை அந்தப் பெண்கள் தங்கள் உறவினர்களிடம் தெரிவித்த பிறகு, தேசிய அளவில் தலைப்புச் செய்தியாகி, அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தாமாக விசாரிக்க முன்வந்த தேசியப் பெண்கள் ஆணையம், இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு ஜார்கண்ட் மாநில காவல்துறை டி.ஜி.பி-க்குக் கடிதம் எழுதியது.
தொடர்ந்து, தேசிய பெண்கள் ஆணையத்தால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு, ‘இது, திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட குற்றம்’ என்று அறிக்கை அளித்தது. மேலும், ஆர்.சி மிஷன் பள்ளியின் நிர்வாகியான பாதிரியார் அல்போன்சோவின் நடவடிக்கைகள் குறித்தும் அந்தக் குழு சந்தேகங்களை எழுப்பியது. அங்கிருந்த இரண்டு கன்னியாஸ்திரிகளையும் சேர்த்து அந்தக் கும்பல் கடத்தியிருக்கிறது. அப்போது பாதிரியார் அல்போன்சோ தலையிட்டு இரு கன்னியாஸ்திரிகளையும் அவர்களிடமிருந்து விடுவித்து, ஐந்து பெண்களைக் கடத்திச்செல்ல மட்டும் அனுமதித்திருக்கிறார். கடத்தல் குறித்து காவல்துறைக்கு அவர் தகவல் தெரிவிக்கவில்லை என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. மேலும், ‘‘பாதிரியார் அல்போன்சோ குற்றச்சதியில் ஈடுபட்டதாகத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது’’ என்று அரசு வழக்கறிஞர் சுஷில்குமார் ஜெய்ஸ்வால் கூறுகிறார்.

குந்தி மாவட்டக் கூடுதல் மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி கடந்த வாரம் அளித்த தீர்ப்பில், பாதிரியார் அல்போன்சோவையும் சேர்த்து ஆறு பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார். 204 பக்கங்கள் கொண்ட அந்தத் தீர்ப்பில், ‘‘இந்தக் கொடிய குற்றமானது, வெறும் பாலியல் இச்சைக்காக மட்டும் நிகழ்த்தப்படவில்லை. இதன் பின்னணியில் ‘பதல்காடி’ இயக்கத்தினர் இருக்கிறார்கள். மனிதக் கடத்தல் செயலுக்கு எதிரான விழிப்பு உணர்வை ஏற்படுத்த அந்தப் பெண்கள் கிராமத்துக்குள் நுழைந்தார்கள். அதனாலேயே அவர்களுக்கு இந்தக் கொடுமை இழைக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
ஆரம்பம் முதலே, இந்தச் சம்பவத்தின் பின்னணியில், பதல்காடி இயக்கத்தினர் இருக்கிறார்கள் என்று காவல்துறை குற்றம்சாட்டிவந்தது. “அந்தப் பெண்கள் நிகழ்த்திய வீதி நாடகத்தில், ‘பதல்காடி’ இயக்கத்துக்கு எதிரான சித்திரிப்புகள் இருந்தன. அதனால், அந்தப் பெண்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று அவர்கள் நினைத்தனர்” என்று காவல்துறையினர் கூறியிருந்தனர். சரி... அதென்ன ‘பதல்காடி’?
ஜார்கண்ட், பழங்குடி மக்கள் நிறைந்த ஒரு மாநிலம். முண்டா என்ற பழங்குடியினர் தங்கள் முன்னோருக்குக் நடுகல் நடுவது வழக்கம். பதல்காடி நடுகல்லைக் குறிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக குந்தி, கும்லா, சிம்டெகா, மேற்கு சிங்பம் உட்பட நூற்றுக்கணக்கான பழங்குடி கிராமங்களில் பதல்காடி என்கிற கல் பலகைகள் நடப்பட்டுள்ளன.
கிராமங்களின் நுழைவுப் பகுதிகளில் நடப்பட்டிருக்கும் கல் பலகைகள், 15 அடி உயரம் கொண்டவை. பச்சை வர்ணம் பூசப்பட்ட அந்தக் கல் பலகையில், கிராம சபையின் அதிகாரம் குறித்து எழுதப்பட்டுள்ளது. ‘பெசா’ எனப்படும் ‘பஞ்சாயத்துகள் (பட்டியல் பகுதிகளுக்கு விரிவாக்கம்) சட்டம், 1996’ என்கிற சட்டத்தில் கிராம சபைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் தொடர்பான அம்சங்களை அந்த மக்கள் வரவேற்கிறார்கள். அதைத்தான், அந்தக் கல் பலகையில் எழுதிவைத்துள்ளார்கள். நல்ல விஷயம்தான். ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷம்தானே. அதீத தேசபக்தி எப்படி மோசமான விஷயமாக, ஜனநாயகத்துக்கு விரோதமானதாக மாறுகிறதோ... அப்படியே அதீத பிராந்திய பக்தியும் மோசமான விஷயமாக இங்கு மாறியது. அதன் வெளிப்பாடாக அந்தப் பலகைகளில், ‘அரசு அதிகாரிகள் உட்பட வெளியாட்கள் யாரும் அனுமதியின்றி கிராமத் துக்குள் நுழையக்கூடாது’ என்கிற எச்சரிக்கை வாசகமும் இடம்பெற்றுள்ளது.
இந்தப் பகுதியை மாவோயிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த பகுதி என்று குறிப்பிடுகிறது, ஜார்கண்ட் மாநில காவல்துறை. துணை ராணுவப்படையினர், காவல்துறையினர், பத்திரிகையாளர்கள் என யாரும் இந்தக் கிராமங்களுக்குள் நுழைவதில்லை என்கிறார்கள், உள்ளூர் பத்திரிகையாளர்கள். குந்தி மாவட்டக் காவல்துறை எஸ்.பி அலுவலகம், வழக்கமாக மாலை 5 மணிக்கெல்லாம் வெறிச் சோடி காணப்படும் என்றும், குந்தி காவல் நிலையம் மாலை 7 மணிக்கெல்லாம் மூடப்பட்டு விடும் என்றும் சொல்கிறார்கள், உள்ளூர் பத்திரிகையாளர்கள்.
“நாங்கள்தாம் பாரத் சர்க்கார். மத்திய அரசு, மாநில அரசுகள், குடியரசுத் தலைவர், பிரதமர், கவர்னர் என யாரையும் நாங்கள் அங்கீகரிக்கவில்லை. எங்கள் கிராம சபைதான் உண்மையான அரசியல் சாசன அமைப்பு. அனுமதி இல்லாமல், யாரையும் எங்கள் பகுதிக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம். யாரும் சுரண்ட அனுமதிக்க மாட்டோம். நாங்கள்தான் இந்த நாட்டின் உண்மையான பூர்வகுடிகள். தண்ணீரும், காடும், நிலமும் எங்களுடையவை. அவற்றை எங்களிடமிருந்து யாரும் அபகரிக்க முடியாது. இந்திய நாட்டின் சட்டம் எங்கள் பகுதிக்குள் செல்லுபடி யாகாது” என்கின்றனர் அந்த மக்கள். இதன் வெளிப்பாடுதான், ‘பதல்காடி’ இயக்கம்.
மரணமடைந்த தங்களின் முன்னோர்களைக் குறிப்பதற்கான கல் பலகை நடும் முண்டா பழங்குடி மக்கள் இப்போது, தங்கள் உரிமைகள் பற்றிய விழிப்பு உணர்வை தங்களின் சமூக மக்கள் மத்தியில் பரப்புவதற் காகவும் கல் பலகை நடுகிறார்கள். வாக்காளர் அடையாள அட்டையும், ஆதார் அட்டையும் ஆதிவாசிகளுக்கு எதிரான ஆவணங்கள் என்கிறார்கள். தேர்தல்களில் பங்கேற்காத இவர்கள், ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை யும், ஜனவரி 26 குடியரசு தினத்தையும் கொண்டாடுவதில்லை. பள்ளிக்கூடங்களுக்குத் தங்கள் குழந்தைகளை அனுப்புவதில்லை. நூறு சதவிகிதம் அரசு வேலை உறுதி என்றால் மட்டுமே, எங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவோம். வேலை இல்லை என்றால், கல்வியும் வேண்டாம் என்கிறார்கள் இந்த மக்கள்.
எழுபது ஆண்டு சுதந்திர இந்தியாவில் ஆட்சியாளர்களால் தொடர்ந்து புறக்கணிக்கப் பட்டுவரும் பகுதிகளில் இதுவும் ஒன்று. அதன் விளைவுகள்தான் இவை. அதேசமயம் தவறுகள் இரு தரப்பிலும் இருக்கின்றன. ஆனால், முதல் தவறு இந்திய அரசினுடையது. எனவே, இறங்கி வந்து, பேச்சுவார்த்தைகள் மூலம் தன் குடிமக்களை அரவணைக்க வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு இருக்கிறது.
- ஆ.பழனியப்பன்