சமூகம்
Published:Updated:

இந்தத் தேர்தலில் உங்கள் நினைவில் நிற்பது எது?

இந்தத் தேர்தலில் உங்கள் நினைவில் நிற்பது எது?
பிரீமியம் ஸ்டோரி
News
இந்தத் தேர்தலில் உங்கள் நினைவில் நிற்பது எது?

ஓவியங்கள்: அரஸ்

பிரியங்கா சர்மா பாவம்... வசமாக சிக்கிக்கொண்டார். மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பி.ஜே.பி பிரமுகரான இவர், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை மோசமாகச் சித்திரித்து மீம்ஸ் வெளியிட்டதற்காகக் கைது செய்யப்பட்டார். ‘இது என் பேச்சு மற்றும் கருத்துரிமையைப் பறிக்கும் செயல்’ என்று அவர் பிணை கேட்டு உச்ச நீதிமன்றம் வந்தார். ‘‘அடுத்தவரின் உரிமையில் தலையிட்டு நீங்கள் வரம்பு மீறும்போது, உங்கள் பேச்சு சுதந்திரம் முடிவுக்கு வந்துவிடுகிறது. பேச்சு சுதந்திரம், மற்றவர்களை அவமதிப்பதற்கு அல்ல!’’ என்றார்கள் நீதிபதிகள். இதே விதி எல்லோருக்கும் பொருந்தும் என்றால், அநேகமாக 2019 தேர்தல் காலம் முழுவதுமே நம் பெரும்பாலான தலைவர்கள் சிறையில்தான் இருந்திருப்பார்கள். இவ்வளவு மோசமான தனிநபர் தாக்குதல்களை இந்தியா இதற்குமுன் கண்டதில்லை.

இந்தத் தேர்தலில் உங்கள் நினைவில் நிற்பது எது?

நம் நாடாளுமன்றத் தேர்தல் ஒவ்வொன்றும் ஒரு மைல்கல் தருணம். தேசத்தின் பாதையில் ஒரு திருப் பத்தை ஏற்படுத்திய நிகழ்வு. ஒவ்வொரு தேர்தலும் ஏதோ ஒரு விஷயத்துக்காகக் காலம் முழுக்க நினைவு கூரப்படும். கடந்த தேர்தலில், ஊழலையும் பணவீக்கத்தையும் பிரதான விஷயங்களாகப் பேசி, காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராகவும் தனக்குச் சாதகமாகவும் ஓர் அலையை உருவாக்கி ஆட்சிக்கு வந்தார் நரேந்திர மோடி. அதுதான் காலம் கடந்தும் நினைவில் நிற்கிறது. இந்தத் தேர்தலில், உங்கள் நினைவில் நிற்பது எது? டாஸ்மாக் கடை சண்டையில் பேசுவதைவிட தரம் தாழ்ந்த வார்த்தைகளில் தலைவர்கள் திட்டிக் கொண்டதுதான்!   

இந்தியாவில், தேர்தல் என்பது ஒரு திருவிழா போன்றது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இங்கு, வாக்காளர்களின் எண்ணிக்கை மட்டுமே ஒட்டு மொத்த ஐரோப்பாவின் மக்கள்தொகையைவிட அதிகம். உலகமே வியப்புடன் பார்க்கும் இந்தத் திருவிழாவை, குழாயடி சண்டைபோல மாற்றியிருக்கிறார்கள் நம் தலைவர்கள். தேர்தல் நடைமுறைகள் தொடங்குவதற்கு முன்பாக நிறைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின. அப்போது, ‘இந்தத் தேர்தலில், பிரதான பிரச்னையாக எது இருக்கும்?’ என்று பல கணிப்புகள் செய்தார்கள். ‘வேலையின்மை, விவசாயிகள் பிரச்னை, விலைவாசி போன்றவைதான் முக்கிய பிரச்னைகளாக இருக்கும்’ என்று மக்கள் கருத்து தெரிவித்திருந்தார்கள். ஆனால், எளிய மக்களின் அன்றாட வாழ்வைப் பாதிக்கும் கல்வி, சுகாதார வசதி, குடிநீர் பற்றாக்குறை, வாழ்க்கைச்சூழல் போன்றவை உள்ளிட்ட எந்தப் பிரச்னைகளும் இந்தத் தேர்தலில், பிரதிபலிக்காதபடி அரசியல் கட்சிகள் பார்த்துக்கொண்டன. மதவாதம், சாதியவாதம், ஊழல், வெறுப்பு, அச்சம், கோபம், தலைவர்களின் குடும்பம் பற்றிய தனிப்பட்ட தாக்குதல் ஆகியவையே மேடைக்கு மேடை நாற்றம் எடுத்தன.

இதிலும் பி.ஜே.பி மற்றவர்களை முந்திக்கொண்டது. ‘‘இந்தத் தேர்தல், அலிக்கும் பஜ்ரங் பாலிக்கும் நடக்கும் மோதல்’’ (இஸ்லாமியர்களின் இறைவனுக்கும் இந்துக் கடவுள் அனுமனுக்குமான மோதல்) என்று சொல்லி ஆரம்பித்து வைத்தார், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத். ‘‘இஸ்லாமியர்கள், இந்த தேசத்தைச் சூழ்ந்திருக்கும் பச்சை வைரஸ்கள்’’ என்றார். பிரசாரம் செய்ய மூன்று நாள்கள் தேர்தல் ஆணையம் தடை விதிக்கும் அளவுக்கு அவரது பேச்சில் விஷம் ஏறியிருந்தது.

மத்திய அமைச்சர் மேனகா காந்தி, ‘‘முஸ்லிம்கள் எனக்கு ஓட்டு போடாவிட்டால், அவர்களுக்கு நான் எந்த வேலையும் செய்துதர மாட்டேன்’’ என்றார். அவருக்கும் பிரசாரம் செய்ய இரண்டு நாள்கள் தடை விதிக்கப்பட்டது. மத்திய அமைச்சரான கிரிராஜ் சிங்கும் முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசி, தேர்தல் நெறிமுறைகளை மீறிய வழக்கில் சிக்கினார். மாயாவதியும், ‘‘உத்தரப் பிரதேசத்தில், முஸ்லிம்கள் எங்கள் கூட்டணிக்கே வாக்களிக்க வேண்டும். காங்கிரஸுக்குப் போட்டு உங்கள் ஓட்டை வீணாக்க வேண்டாம்’’ என்றார். அவருக்கும் பிரசாரம் செய்ய 48 மணி நேரம் தடை விதிக்கப்பட்டது. 

இந்தத் தேர்தலில் உங்கள் நினைவில் நிற்பது எது?

இவர்கள் சிக்கியவர்கள் என்றால், சிக்காதவர்களும் உண்டு. நாக்பூரில் பேசிய பி.ஜே.பி தலைவர் அமித் ஷா, ‘‘முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் வயநாடு, பாகிஸ்தான் போன்றது’’ என்றார். மேற்கு வங்காளத்தில் அவர் ஒவ்வொரு கூட்டத்திலும், ‘‘இந்த முறையும் மம்தா பானர்ஜிக்கு ஓட்டுப் போட்டால், இங்கே இந்துக்கள் துர்கா பூஜை கொண்டாட முடியாதபடி தடை செய்துவிடுவார்கள்’’ என்றார். ‘‘ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டால், என்னைக் கைது செய்வீர்களா?’’ என்று மேற்கு வங்க போலீஸாருக்கு சவால்விட்டார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது உத்தரப் பிரதேசத்தில் உணர்ச்சிகரமாகக் கட்டியெழுப்பிய மதவாதத்தை இம்முறை மேற்கு வங்காளத்தில் உருவாக்க முயன்றார் அவர்.

சரி, இவர்களைக் கட்டுப்படுத்த வேண்டிய மோடி என்ன செய்து கொண்டிருந்தார்? மகாராஷ்டிர மாநிலம் வார்தாவில் ஒரு பொதுக் கூட்டத்தில், ‘‘பெரும்பான்மை இந்துக்கள் சிறுபான்மையாக இருக்கும் வயநாடு தொகுதிக்கு ராகுல் காந்தி அடைக்கலம் தேடிப் போயிருக்கிறார்’’ என்றார். காங்கிரஸ் சார்பில், தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டது. ஐந்து நாள்கள் கழித்து மோடி மீண்டும் இதையே பேசினார்.

உண்மையில், இந்தத் தேர்தல் பிரசாரத்தின் மையப் புள்ளியாக எது இருக்கும் என ஆரம்பத்தில் யாருக்குமே தெரியவில்லை. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலத் தேர்தல்களில் கிடைத்த தோல்வியுடன் நாடாளுமன்றத் தேர்தல் களத்துக்கு வந்தது பி.ஜே.பி. ரஃபேல் விவகாரத்தைக் கையில் எடுத்து, முழங்கிக்கொண்டிருந்தார் ராகுல் காந்தி. காஷ்மீரின் புல்வாமாவில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மீது தீவிர வாதிகள் நிகழ்த்திய தாக்குதலும், பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் தீவிரவாதிகள் முகாம்களை அழிக்க இந்திய விமானப்படை நிகழ்த்திய சர்ஜிகல் ஸ்ட்ரைக்கும் அப்படியே தேர்தலை திசை மாற்றிவிட்டன. தேசபக்தி முழக்கத்தை எழுப்பிய உற்சாகத்துடன் களமிறங்கியது பி.ஜே.பி.

‘ராணுவத்தின் தாக்குதலை அரசியலுக்குப் பயன்படுத்தக் கூடாது’ என்று முன்னாள் ராணுவ அதிகாரிகள் 150 பேர் குடியரசுத் தலைவ ருக்கு கடிதம் எழுதும் அளவுக்கு நிலைமை மோசமானது. தேர்தல் ஆணையம் விதித்த தடையையும் மீறி மோடி அதையே பேசினார். ‘‘முதல் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் ஓட்டுகளை புல்வாமாவில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு அர்ப்பணிக்க வேண்டும்’’ என்றார். ‘‘நாங்கள் என்ன அணுகுண்டுகளை தீபாவளிக்கு வெடிக்கவா வைத்திருக் கிறோம்?’’ என்று கேட்டார். பிரதமரே தேர்தல் நடத்தை விதி களை மீறும்போது தேர்தல் ஆணையம் என்ன செய்யும்? தேர்தல் ஆணையர்களுக்குள் கருத்து வேறுபாடு எழும் அளவுக்கு ஆணையத்தின் நம்பகத்தன்மை சந்தேகத்துக்கு உள்ளானது.

மோடியின் 35 தேர்தல் உரைகளை ஆய்வுசெய்த ஓர் சமூக அமைப்பு, அவற்றில் அதிகம் இடம்பெற்ற வார்த்தை ‘மோடி’ என்றது. எதிர்க்கட்சித் தலைவர்களின் உரைகளிலும் ‘மோடி’யே அதிகம் இடம் பெற்றிருந்தார். நிஜமான பிரச்னைகளை கானல் நீர் போல கரையச்செய்து விட்டு, தனிநபர் தாக்குதலாகவே தேர்தல் களம் அமையுமாறு பார்த்துக்கொண்டதில் வெற்றி பெற்றிருக்கிறார் மோடி.    
            
வரலாற்றில் மோடிக்கு முன்பு தனிப் பெரும்பான்மை பலத்துடன் பதவியில் அமர்ந்த பிரதமர் ராஜீவ் காந்தி. அவர்தான் தேர்தலின்போது மாநிலக் கட்சிகளின் தலைவர்கள்மீது தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபட்டார். அதன் பின் பிரதமர்கள் இப்படிச் செய்யவில்லை. ராஜீவ் வழி யைப் பின்தொடர்ந்தார் மோடி. இது எந்த அளவுக்கு மோசமாக இருந்தது என்பதற்கு சரத் பவாரே சாட்சி. பொதுவாகத் தனிநபர் தாக்குதல்களில் ஈடுபடாத தலைவர் என சரத் பவாரைச் சொல்வார்கள். அவரே இம்முறை மோடியின் தாக்குதல் பொறுக்க முடியாமல் பொங்கிவிட்டார். ‘‘மோடி ஏன் என் குடும்பத்தைப் பற்றியே பேசுகிறார் என்று யோசித் தேன். அப்புறம்தான் உணர்ந்தேன். எனக்கு மனைவி, மகள், மருமகன் என எல்லோரும் இருக்கிறார்கள். அவருக்கு யாரும் இல்லை. ஒரு குடும்பம் எப்படி இயங்குகிறது என்பது அவருக்குத் தெரியாது. அதனால்தான் அவர் மற்றவர்களின் வீடுகளையே எப்போதும் பார்க்கிறார். அடுத்தவர் வீட்டை எட்டிப் பார்ப்பது நாகரிகம் இல்லை மோடி’’ என்றார்.

இந்தத் தேர்தலில் உங்கள் நினைவில் நிற்பது எது?

மாயாவதி மிகவும் அநாகரிகமாக மோடியை விமர்சனம் செய்தார். ‘‘பெண்கள் யாரும் மோடிக்கு ஓட்டுப் போடக்கூடாது. அவர் இளம் வயதிலேயே மனைவியைக் கைவிட்டுவிட்டு ஓடியவர். மற்றவர்களின் மனைவியையும் சகோதரிகளையும் எப்படி மதிப்பார்?’’ என்று கேட்டார் மாயாவதி. இதே தொனியில் மம்தா பானர்ஜியும், ‘‘தன் அம்மாவையும் மனைவியையும் புறக்கணித்த ஒரு மனிதர், எப்படி குடிமக்களின் நலனைப் பற்றிக் கவலைப்படுவார்?’’ என்று மேடைக்கு மேடை கேட்டார்.

இதில் காங்கிரஸ்தான் பெரும் குழப்பத்தில் இருந்தது. ‘‘மோடி ஒரு திருடர் என உச்ச நீதிமன்றமே சொல்லிவிட்டது. தேர்தல் முடிந்ததும் அவரைச் சிறைக்கு அனுப்புவேன்’’ என்று ஆரம்பத்தில் கொக்கரித்தார் ராகுல் காந்தி. ஆனால், இந்தப் பேச்சுக்காக உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டிய சூழல் ஏற்பட்டதும் அவர் போதி மரத்தடியில் ஞானம் பெற்ற புத்தராக மாறினார். ‘‘மோடி வெறுப்பை வெளிப்படுத்தினாலும், நான் அன்பையே பொழிவேன்’’ என்றார். காங்கிரஸைச் சேர்ந்த சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், ‘‘மோடிக்கு மனநல சிகிச்சை தேவைப்படுகிறது’’ என்றார். மணிசங்கர் அய்யர் வேறு, ‘‘மோடி இழிபிறவி என்று ஏற்கெனவே நான் சொன்ன கருத்தில் உறுதியாக இருக்கிறேன்’’ என்று சூடு கிளப்பினார்.

பெண்களைப் பற்றிய இழிவான விமர்சனங்களுக்கும் குறைவில்லை. கிழக்கு டெல்லி தொகுதியில், ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட அதிஷி பற்றி மிக மோசமான பிரசாரத்தை பி.ஜே.பி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. காங்கிரஸில் சேர்ந்து மும்பையில் போட்டியிட்ட நடிகை ஊர்மிளா மடோன்கரையும் பி.ஜே.பி பிரமுகர்கள் சிலர் மோசமாக விமர்சனம் செய்தார்கள். பி.ஜே.பி வேட்பாளரான நடிகை ஹேமமாலினியின் உள்ளாடை பற்றி மோசமாக கமென்ட் அடித்தார் சமாஜ்வாடி கட்சி சீனியர் தலைவர் ஆசம் கான்.

கண்ணியத்தை எல்லோரும் சவப்பெட்டியில் தள்ளியபிறகு, அந்தப் பெட்டியின் கடைசி ஆணியை அடித்தார் பிரக்யா சிங் தாக்கூர். இவருக்காகவே பேசியதுபோல திடீரென்று ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து’ என்று திரியைக் கொளுத்தினார் புதிய அரசியல்வாதி கமல்ஹாசன். மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில், சிறைக்கே சென்றவராயிற்றே பிரக்யா சிங். மத்தியபிரதேச மாநிலம், போபால் தொகுதியின் பி.ஜே.பி வேட்பாளரான பிரக்யா, ‘‘காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தர். அவரைத் தீவிரவாதி என்பவர்களுக்கு இந்தத் தேர்தல் முடிவுகளில் பதிலடி கிடைக்கும்’’ என்றார். மத்திய அமைச்சர் ஆனந்த் குமார் ஹெக்டே, பி.ஜே.பி எம்.பி நளின் குமார் கடீல் ஆகியோர் இவரைவிட பெரிய கோட்சே பக்தர்கள் ஆனார்கள்.

‘‘மோடி ஏன் உண்மையான மக்கள் பிரச்னைகளைப் பேச வில்லை? வேலைவாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் தவிப்பது அவருக்குத் தெரியவில்லையா? விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது தேசியப் பிரச்னை இல்லையா?’’ என்று ராகுல் காந்தி ஒரு பேட்டியில் கேட்டார். ‘‘நான் எல்லாவற்றையும் பேசியிருக்கிறேன். 50 நிமிடங்கள் நான் பேசும் உரையில், பத்து நொடிகள் சொல்லும் ஒற்றை வாக்கியத்தை வைத்தே 24 மணி நேரமும் மீடியாவும் எதிர்க் கட்சிகளும் விவாதிப்பது ஏன்?’’ என்று கேட்கிறார் மோடி. ஒரு குடம் பாலைக் கெடுக்க ஒரு துளி விஷம் போதாதா?

இந்தத் தேர்தலில், ஜெயிப்பது யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால், ஜனநாயக அரசியல் மீதான எளிய மக்களின் நம்பிக்கை மிக மோசமாகத் தோற்றிருக்கிறது.

தி.முருகன் - ஓவியங்கள்: அரஸ்