
சேவை - 20ஓவியம்: பாலகிருஷ்ணன்
‘நானும் கடவுள்... நீயும் கடவுள்... நம் பக்கத்து வீட்டுக்காரர்களும்கூட கடவுளே. ஆம், நாம் எல்லோருமே கடவுள்தாம்!’

சிறுவயதில் எலெனின் தந்தை அடிக்கடி சொன்ன வார்த்தைகள் இவை. சக மனிதர்மீது கனிவும் கருணையும் எப்போதும் தேவை என்பதே அவர் தம் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்த அன்பான பாடம். ‘நமக்கு நிறைய அன்பு கிடைக்கிறது. நாம் அதைவிட நிறைய அன்பைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்’ என்பதை எலென், சிறு வயதிலேயே தன் மனதில் உணர்ந்துகொண்டார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் பிறந்த `எலென் ஐன்டெர்ஸ்’ (Ellen Einterz), மருத்துவராகும் கனவுடன் வளரவில்லை. தன் வாழ்வின் திசையைத் தீர்மானிக்கும் தருணம் எலெனுக்கு அவரது 19-வது வயதில் நிகழ்ந்தது. 1974-ம் ஆண்டு ஆப்பிரிக்காவின் நைஜர் பகுதியில் கடும் பஞ்சம்; அப்போது, `பீஸ் கார்ப்ஸ்’ (Peace Corps) என்ற அமெரிக்க சேவை அமைப்பின் தன்னார்வலராக எலென், நைஜருக்குச் சென்றார். ஆப்பிரிக்காவின் அலங்கோல முகம் எலெனுக்குப் புரிந்தது. தான் ஒரு மருத்துவராக இருந்தால், இந்த மக்களுக்கு இன்னும் அதிகமாக உதவலாம் என்பதை உணர்ந்துகொண்டார். `இந்த உலகத்துக்கு, சக மனிதர்களுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன. `என்னால் முடியாது’ என்று ஒதுங்குவது அர்த்தமுடையதல்ல’ என்றபடி அமெரிக்கா திரும்பினார்.

எலென், தன் கடும் முயற்சியால் கனடாவில் அமைந்திருக்கும் மெக்கில் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்க இணைந்தார். வெற்றிகரமாகப் படிப்பை முடித்தார். நைஜீரியாவின் மிஷன் மருத்துவமனையில்தான், தனது மருத்துவச் சேவையைத் தொடங்கினார். ஆறு ஆண்டுகள் அங்கே பணியாற்றினார். ஆப்பிரிக்க மக்களைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொண்டார். அந்த மக்கள் எலெனை ஒரு தேவதையைப்போலவே பார்த்தனர். ஆனால், அதைவிட மோசமான ஒரு பகுதிக்குத் தன் மருத்துவச் சேவை தேவைப்படுகிறது என்பதை எலென் உணர்ந்ததும், நைஜீரியாவை விட்டுக் கிளம்பினார். வந்து சேர்ந்த இடம், நைஜீரியாவின் வடகிழக்கு எல்லை மற்றும் கேமரூனின் வடக்கு எல்லையில் அமைந்திருக்கும் சிறு கோலோஃபாடா. மிகக் குறைந்த மருத்துவ வசதிகளே அங்கு இருந்தன. காலரா அங்கே நிரந்தரமாகக் கடைவிரித்திருந்தது. மலேரியா தாண்டவமாடிக்கொண்டிருந்தது. பாம்புக்கடியால் தினமும் பலர் பாதிக்கப்பட்டுக்கொண்டிருந்தனர். ஒரு நோயாளிக்குப் பயன்படுத்திய ஊசியைத்தான், அடுத்த நோயாளிக்கும் பயன்படுத்தினார்கள். அதைச் சுடுநீரிலிட்டு தூய்மையாக்குவதுகூட இல்லை. எய்ட்ஸ் நோயாளிகளுக்குப் பஞ்சமே இல்லை. ஆரம்பத்தில் கோலோஃபாடா மக்கள், டாக்டர் எலெனை அந்நியமாகப் பார்த்தார்கள். ஆனால், எலெனின் அன்பான அணுகுமுறையும், கனிவான மருத்துவச் சேவையும் அந்த மக்களை அவர் பக்கம் ஈர்த்தன. அடுத்த சில வருடங்களில் அந்த மக்களுக்கென மருத்துவமனை ஒன்றை உருவாக்கினார். பிரசவங்கள் மருத்துவமனைகளில் நிகழ ஆரம்பித்தன. மலேரியாவும் காலராவும் கட்டுக்குள் வந்தன. கோலோஃபாடா மக்களின் `காட்மதர்’ ஆக உயர்ந்து நின்றார் எலென்.

`போகோ ஹராம்’ என்பது நைஜீரிய இஸ்லாமியத் தீவிரவாத இயக்கம். மேற்கத்திய நாடுகளின் கலாசாரம் மற்றும் கல்விமுறையை எதிர்க்கும் இந்த அடிப்படைவாதிகளுக்கு, மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்களைக் கண்டாலே ஆகாது. கோலோஃபாடாவிலும் இந்த இயக்கத்தினரின் நிழல் படர்ந்திருந்ததால் எலெனும் போகோ ஹராமால் குறி வைக்கப்பட்டார். கேமரூன் அரசு, எலெனை அங்கிருந்து வெளியேறச் சொல்லிக் கேட்டுக்கொண்டது. எலென் மறுத்துவிட்டார். 2013-ம் ஆண்டில் `போகோ ஹராம்’ இயக்கத்தினர், வெளிநாட்டவர்கள் சிலரைக் கடத்தினர். எனவே, `நீங்கள் தயவுசெய்து இங்கிருந்து கிளம்பிவிடுங்கள்’ என்று எலெனைப் பலரும் வற்புறுத்தினார்கள். `நான் இங்கிருந்து கிளம்புவது, என்னுடன் பணிபுரியும் மற்றவர்களை அவமதிப்பது போன்றது’ என்று சொல்லிவிட்டு, தன் மருத்துவப் பணிகளைத் தொடர்ந்தார். 2014-ம் வருடம், டாக்டர் எலென், உடல் நலிவுற்ற தன் தந்தையைக் காண்பதற்காக கோலோஃபாடாவிலிருந்து கிளம்பினார். அமெரிக்காவின் இண்டியானா போலீஸில் சில மாதங்கள் தந்தையுடன் தங்கினார். டாக்டர் எலெனைத் தேடிவந்த போகோ ஹராமினர், பலரைக் கடத்திச் சென்றனர். அவர்களில் 17 பேர் கொல்லப்பட்டனர். உடனே கோலோஃபாடாவுக்குத் திரும்ப வேண்டும் என்று எலென் துடித்தார். ஆனால், இயலவில்லை.
கோலோஃபாடா மக்களுக்கு தான் உதவ இயலவில்லை. எனவே, ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் எபோலாவின் தாக்குதல் தீவிரமாக இருந்ததால், அங்கே செல்லலாம் என்று முடிவெடுத்து, 2014, நவம்பர் மாதம் லைபீரியா சென்றார். தற்போது அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள `மரியான் கன்ட்ரி பப்ளிக் ஹெல்த் டிபார்ட்மென்ட்’ (Marion County Public Health Department) சார்பில் அகதிகளுக்கான மறுவாழ்வு மையத்தில் மருத்துவராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அங்கே சூடான், மியான்மர், சோமாலியா, காங்கோ, ஈராக்கைச் சேர்ந்த அகதிகளுக்குத் தன் சேவையைத் தொடர்கிறார்.
டாக்டர் எலென், தனது 24 வருட கோலோஃபாடா அனுபவங்களை, `லைஃப் அண்ட் டெத் இன் கோலோஃபாடா’ (Life and Death in Kolofata) என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். மீண்டும் எந்தத் தருணத்திலும் கோலோஃபாடாவுக்குச் செல்லத் தயாராக இருக்கிறார். ‘கடவுளின் கரங்கள்தாம் என் வாழ்க்கை முழுவதும் என்னைப் பிடித்து அழைத்துக்கொண்டு செல்கின்றன. அந்தக் கரங்களின் அன்பான பிணைப்பில் நான் உணர்வது ஒன்று மட்டுமே. நான் எங்கும் வீழ்ந்துவிட மாட்டேன்.’
சேவை தொடரும்...