பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

``உன் பொண்ணு செத்தாபோயிட்டா?”

``உன் பொண்ணு செத்தாபோயிட்டா?”
பிரீமியம் ஸ்டோரி
News
``உன் பொண்ணு செத்தாபோயிட்டா?”

``உன் பொண்ணு செத்தாபோயிட்டா?”

மக்குத் தெரியாத உலகங்களை நாம் அறியும்போதெல்லாம் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால் உண்மை என்பதே அதிர்ச்சியானதுதான்.

சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே வீரடிப்பட்டி கிராமத்தில் உள்ள கரும்புத் தோட்டத்தில், பத்து வருடங்களுக்கும்மேல் கொத்தடிமைகளாக வேலைபார்த்து வந்த 17 குழந்தைகள் உட்பட 39 பேர் மாவட்ட நிர்வாகத்தால் மீட்கப்பட்டு, அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் பேசியபோது ஒவ்வொரு வார்த்தையிலும் வலியின் பாரமும் வாழ்க்கையின் துயரமும்...

``உன் பொண்ணு செத்தாபோயிட்டா?”

``கொஞ்ச நாளுக்கு முன்னால சித்தப்பா இறந்துபோயிட்டாரு. என் மேல ரொம்பப் பாசமா இருப்பாரு. அவரோட ஈமச்சடங்குக்குப் போகணும்னு ஓனர்கிட்ட சொன்னேன். ஊருக்குப் போக, அவர் என்னை அனுமதிக்கலை. அவர் பேச்சை மீறி நான் போயிட்டேன். நான் ஊர்ல இருக்கிற தகவலைத் தெரிஞ்சுக்கிட்ட எங்க ஊர்க் கங்காணி, அடியாள்களை வெச்சு என்னைச் சாவடி அடிச்சு திரும்பவும் கரும்புக் காட்டில கொண்டுவந்து போட்டுட்டார். கொஞ்ச நாளுக்கு முன்னால என் மகள் செவ்வந்தி, வயசுக்கு வந்திருச்சு. `வீட்டுக்குப் போய் சடங்கு சம்பிரதாயம் பண்ணணும். மூணு நாளைக்கு எங்களுக்கு விடுதலை குடுங்க’ன்னு கேட்டுப்பார்த்தோம். `உன் பொண்ணு வயசுக்குத்தானே வந்திருக்கா. செத்தாபோயிட்டா? கரும்புக்காட்டுக்குள்ளே வெச்சு எல்லா சடங்குகளையும் முடிச்சிடு’ன்னு சொல்லிட் டாங்க” என்று கடந்த 17 வருடங்களாக தினம் தினம் அனுபவித்த துன்பங்களை, கண்ணீருடன் அடுக்குகிறார் சிவா.

``பண்ருட்டிக்குப் பக்கத்துல மேலகவரப் பட்டுதான் எனக்கு சொந்த ஊர். நான் பொறந்த கொஞ்ச நாள்லயே அப்பாவைவிட்டு, அம்மா பிரிஞ்சு போயிடுச்சு. பொறந்ததுல இருந்தே குடும்பத்துல கஷ்டம். பத்து வயசுலயே கூலிவேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டேன். அதைவெச்சு பிழைப்பு நடத்திக்கிட்டு இருந்தோம். திடீர்னு அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமப்போச்சு. அப்பா ஆபரேஷனுக்காக முதல்ல 3,000 ரூபாய் கடன் வாங்கினோம். `அதை நீதான் கழிக்கணும்’னு சொல்லி, என்னை 15 வயசுலேயே கரும்பு வெட்டுற வேலைக்கு அனுப்பிட்டாங்க. `வாங்கிய கடனுக்கு, ஒரு வருஷம் வேலை பார்த்தா போதும்’னுதான் சொன்னாங்க. ஆனா, அஞ்சு வருஷம் வரையிலும் வேலைபார்த்திருப்பேன். இன்னமும் கடன் அடையலைன்னு சொல்லிட்டாங்க.

மனசு வெறுத்துப்போய் அங்கேயிருந்து தப்பிச்சு வெளியூருக்குப் போயிட்டேன். அங்கேயிருந்து கொஞ்ச நாள்ல ஊருக்கு வந்து வள்ளியைக் கல்யாணம் கட்டிக்கிட்டேன். ஊர்ல சின்னச் சின்ன கூலி வேலையைப் பார்த்துக்கிட்டு இருந்தேன். நான் ஊர்ல இருக்கிறதைத் தெரிஞ்சுக்கிட்ட கங்காணி, நான் வேலை பார்த்தப்போ அப்பப்ப 50, 100-ன்னு கொடுத்த பணத்தையெல்லாம் தினக்கூலி கொடுத்ததா கணக்கு எழுதி, `கடன் இன்னும் முடியலை. மேற்கொண்டு ஒரு வருஷத்துக்கு வேலை பார்க்கணும்’னு சொல்லி திரும்பவும் அனுப்பிவிட்டாங்க. வேற வழியில்லாம மனைவியோடு கரும்புக்காட்டுக்கு வந்துட்டேன்.

`கடன் முடிஞ்சு விடுதலையாகிடலாம்’னு நினைச்சுக்கிட்டு இருந்த நேரத்துலதான் மனைவிக்குப் பிரசவம். அதுக்காக 5,000 ரூபாய் கடன் வாங்கவேண்டியதாப்போச்சு. ஒருவழியா, செவ்வந்தி பொறந்தா. அடுத்தடுத்து ரெண்டு பிள்ளைங்க. வள்ளிக்கு உடம்பு முடியாமப் போனதால, பிள்ளைங்களைப் பார்த்துக்கிறதுக்காக, ரெண்டாவதா லட்சுமியைக் கல்யாணம் கட்டிக்கிட்டேன். தினக்கூலி கிடைக்காது. 25 ரூபாயும் ஒரு படி அரிசியும் கிடைக்கும். மூணு பேருக்கும் கிடைக்கிறதை வெச்சுதான் மனைவி மற்றும் குழந்தைகளைப் பார்த்துக்கிட்டோம். மனைவி, குழந்தைகளை ஏதும் செஞ்சுடுவாங் களோன்னு பயந்தே பத்து  வருஷத்துக்கும்மேல கொத்தடிமையா வேலை செஞ்ச எங்களுக்கு, இப்போ நிரந்தரமா விடுதலை கிடைச்சிருக்கு.

``உன் பொண்ணு செத்தாபோயிட்டா?”

இதுவரைக்கும் ஒரு தகப்பனா, பிள்ளைங்க பசியை மட்டும்தான் என்னால போக்க முடிஞ்சது. மற்ற எந்த விஷயமும் செய்ய முடியலை. `ஆறு பிள்ளைங்க இருந்தும் ஒரு பிள்ளையைக்கூடப் படிக்கவைக்க முடியலையே’ன்னு பல நாள் கவலைப் பட்டிருக்கேன். கூலி வேலை பார்த்தாவது, என் குழந்தைகளைப் படிக்கவைக்கணும்” என்றார் நம்பிக்கையுடன்.

பண்ருட்டியில் இருந்து முதன்முதலில் பூமாவின் குடும்பம்தான் புதுக்கோட்டையில் கரும்பு வெட்ட அழைத்துவரப்பட்டதாம். தனக்குப் பிறகுதான் அதே ஊரைச் சேர்ந்த குடும்பத்தினர் தொடர்ச்சியாக வந்ததாகக் கூறுகிறார்.

 ``மூத்த மகள் கல்யாணத்துக்காகக் கைநீட்டிக் கடன் வாங்கிட்டேன். `வாங்கிய கடனை அடைச்ச பிறகு, தினசரி கூலியும் அரிசியும் தருவோம்’னு சொல்லித்தான் கூட்டிவந்தாங்க. ஆனா, கூலி கொடுக்கலை. அரிசி மட்டும் கிடைக்கும். ஒரு நாள் உடம்பு சரியில்லாம வேலை பார்க்க முடியாமப்போனாலும் அந்த அரிசியும் கிடைக்காது. அன்னைக்கு முழுக்கப் பட்டினிதான். `யாராவது கடன் அடைக்காம தப்பிக்க நினைச்சா, குழிதோண்டிப் புதைச்சுடுவோம்’னு சொல்லியே மிரட்டுவாங்க. அதுக்கு பயந்தே காலத்தைக் கழிச்சிட்டோம்.
 
`இதை விட்டா என்கிட்ட ஒரே ஒரு மாத்து சேலைதான் இருக்கு. புதுத்துணி எடுக்கணும்’னு கங்காணிகிட்ட காசு கேட்டேன். அதுக்கு `கரும்புக் காட்டுக்குள்ள இருக்கிற நீ என்ன கலெக்டர் ஆகிக் கையெழுத்து போடப்போறீயா, உனக்கு எதுக்கு புதுத் துணியெல்லாம்?’னு சொல்லி, கடைசிவரைக்கும் பணமே தரலை. இப்ப வரைக்கும் என்கிட்ட மாத்து சேலைன்னு ஒண்ணுதான் இருக்கு.

``உன் பொண்ணு செத்தாபோயிட்டா?”

கரும்பு வெட்ட வந்த கொஞ்ச நாள்ல எனக்கு அல்சர் வந்திருச்சு. எங்க கஷ்டத்தைப் புரிஞ்சுக்கிட்ட  ஊர்க்காரங்க சிலர், எங்களுக்கு உதவுவதா விசாரிப்பாங்க. அப்பெல்லாம் யார்கிட்டயும் பேசாம வந்துடுவோம். பேரு தெரியாத ஒருத்தர், என்னைத் தொடர்ந்து விசாரிச்சார். `உங்களை மீட்டு, வீட்டுக்கு அனுப்பிவைக்க முடியும்’னு சொன்னார். அவர் சில விஷயங்களைச் சொல்லிக்கொடுத்தார். அதுக்கு அப்புறம்தான், மீட்கப்படுறதுக்குச் சில தினங்களுக்கு முன்பு, `எங்க குடும்பக் கடன் முடிஞ்சிட்டுதா?’ன்னு கங்காணிகிட்ட கேட்டேன். 20 ஆண்டுகள்ல நான் தைரியமா கேள்வி கேட்டதே அன்னைக்குத்தான். எங்களை யெல்லாம் எப்படி ஏமாற்றியிருக்காங்கன்னு காலம்போன கடைசியிலதான் எங்களுக்குத் தெரியவருது. எங்களைப்போல இனி யாரும் கொத்தடிமைகளாக இருக்கவே கூடாது” என்றார்.

இப்போதுதான் அவர்கள் கண்களில் தெரிகிறது விடுதலையின் ஒளி.

- இரா.மணிமாறன்; படங்கள்: ஆர்.வெங்கடேஷ்