பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

அவர் இல்லாத அந்த நாள்!

அவர் இல்லாத அந்த நாள்!
பிரீமியம் ஸ்டோரி
News
அவர் இல்லாத அந்த நாள்!

அவர் இல்லாத அந்த நாள்!

வ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் பிறக்கப்போகிறது என்றாலே, தி.மு.க-வினருக்கு கொண்டாட்டம்தான். ஜூன் 3-ம் தேதி கருணாநிதியின் பிறந்தநாளைக் கொண்டாட அறிவாலயமும் கோபாலபுரமும் தயாராகிவிடும்.

அவர் இல்லாத அந்த நாள்!


கருணாநிதி இல்லாமல், அவரின் பிறந்தநாள் கொண்டாடப்படும் முதலாமாண்டு இது. வழக்கமாக, கருணாநிதியின் பிறந்தநாள் வருவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே தி.மு.க-வைத் தனி உற்சாகம் தொற்றிக்கொள்ளும். பட்டிமன்றம், கருத்தரங்கம், கவியரங்கம் என்று தி.மு.க-வின் ஒவ்வோர் அணியின் சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவார்கள்.

இரு தினங்களுக்கு முன்பாகவே கோபாலபுரம், சி.ஐ.டி நகர் இல்லங்கள் விழாக்கோலம் பூண்டுவிடும். பூக்களாலும், இளநீர், பாக்கு போன்ற பலவிதமான தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு கலகலப்பான சூழல் வந்துவிடும். சி.ஐ.டி நகர் வீட்டில் இரவு தங்கும் கருணாநிதி, காலை 4 மணிக்கெல்லாம் எழுந்து தயாராகிவிடுவார். டி.ஆர்.பாலு உள்ளிட்ட தி.மு.க-வினர் அங்கு போய், கருணாநிதிக்கும் ராஜாத்தியம்மாளுக்கும் பட்டு வேட்டி, பட்டுச் சேலை பரிசளித்து ஆசீர்வாதம் பெறுவார்கள். பிறகு, அங்கு மரக்கன்று நட்டுவிட்டு, அதிகாலை 5:30 மணிக்கெல்லாம் கோபாலபுரம் வந்து, தன் தாய் தந்தையின் புகைப்படங்களுக்கு மாலைகள் அணிவிப்பார் கருணாநிதி. அவர் முன்னிலையில் ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து கேக் வெட்டி மகிழ்வார்கள். பிறகு அப்போது வந்திருக்கும் முக்கியப் பிரமுகர்களைச் சந்தித்துவிட்டு, காலை ஏழு மணி அளவில் அண்ணா நினைவிடத்துக்கும், பெரியார் நினைவிடத்துக்கும் சென்று வணங்குவார். அங்கிருந்து எட்டரை மணி அளவில் அவர் கோபாலபுரம் திரும்பும்போது, அவரைச் சந்திப்பதற்காக கோபாலபுரமே வி.ஐ.பி-க்களால் நிரம்பியிருக்கும். தெருமுனைவரை மிக நீண்ட வரிசையில் காத்திருப்பார்கள்.

தி.மு.க-வின் முன்னணித் தலைவர்கள், எம்.பி., எம்.எல்.ஏ-க்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள், திரைப்படத்துறையினர், தொழிலதிபர்கள் என முக்கியப் பிரமுகர்கள் பலரும் வந்துவிடுவார்கள். தா.பாண்டியன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பீட்டர் அல்போன்ஸ், கோபண்ணா,
இல.கணேசன், தொல்.திருமாவளவன், ரவிக்குமார் என்று பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் வந்து வாழ்த்துவார்கள்.

இன்னொருபுறம், தமிழகம் முழுவதிலுமிருந்து தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் முதல் கடைக்கோடி தொண்டர்கள்வரை குடும்பம் குடும்பமாகத் திரண்டுவந்து, அண்ணா அறிவாலயத்தில் காத்திருப்பார்கள். பலாப்பழம், ஆட்டுக்குட்டி, முயல்குட்டி, ரூபாய் நோட்டு மாலை என்று பலவிதமான அன்பளிப்புகளைக் கையில் வைத்துக்கொண்டு அவர்கள் வரிசையில் நின்றுகொண்டிருப்பார்கள். கருணாநிதி வந்து மேடையில் அமர்ந்தவுடன், ஒவ்வொருவராக மேடைக்கு வந்து சால்வையையும் மாலையையும் அணிவிப்பார்கள். அன்பளிப்புகளை வழங்குவார்கள். அப்போது கருணாநிதியிடம் உற்சாகம் கரைபுரளும். எல்லோரையும் கிண்டலடித்து, அந்தச் சூழலை கலகலப்பாக மாற்றுவார்.

அவருக்குப் பக்கத்தில் கட்சி நிதிக்காக ஓர் உண்டியல் வைப்பட்டிருக்கும். கட்சியினர் அதில் பணம் போடுவார்கள். ‘எவ்வளவுய்யா போட்டே…’ என்று அந்தக் கரகரப்பான குரலில் கிண்டலாகக் கேட்பார். ஒருமுறை, கண்டோன்மென்ட் சண்முகம் என்ற எம்.எல்.ஏ அந்த உண்டியலில் பணம் போட்டார். ‘எவ்வளவுய்யா போட்டே?’ என்று கருணாநிதி கேட்க, ‘ஐம்பதாயிரம் போட்டேன் தலைவரே…’ என்றார் சண்முகம். உடனே, ‘எனக்கு என்ன வயசு?’ என்று கேட்டார் கருணாநிதி. ‘எம்பத்தெட்டு வயசாகுது தலைவரே’ என்று சண்முகம் சொல்ல, ‘அப்ப… மீதிப் பணத்தைப் போட்டுட்டு போ’ என்றார் கருணாநிதி. அவர் வேகமாக கீழே இறங்கி ஓடிச்சென்று, அங்கிருந்த நண்பர்களிடம் பணத்தைப் புரட்டி உண்டியலில் போட்டுவிட்டு, ‘போட்டாச்சு தலைவரே..’ என்று சொல்ல, கருணாநிதி உட்பட அங்கிருந்த அனைவரும் கலகலவென்று சிரித்தனர்.

  அந்த நிகழ்ச்சிக்குப்  பின், செய்தியாளர்களைச் சந்தித்துவிட்டு சி.ஐ.டி நகர் சென்றுவிடுவார். அங்கு ஒரு பெரிய கூட்டம் காத்திருக்கும். எல்லோருக்கும் மதிய உணவு தயாராகும். சாப்பிட்டுவிட்டு சற்று நேரம் உறங்கும் கருணாநிதி, சரியாக மாலை 4 மணிக்கு எழுந்து கீழே இறங்கி வருவார். 5:30 மணிவரை வரிசையாக நின்று, சால்வை அணிவித்து, அவரிடம் எல்லோரும் வாழ்த்துப் பெறுவார்கள். பிறகு, மாலை 5:30 மணிக்கு கோபாலபுரம் வந்துவிடுவார்.

இப்படியாகத்தான், ஒவ்வோர் ஆண்டும் கருணாநிதியின் பிறந்தநாள் உற்சாகத்துடன் கடந்து செல்லும். ஆனால், அவர் உடல்நிலை சரியில்லாமல் போனதால், 2018-ம் ஆண்டு அவரது பிறந்தநாள் கொண்டாடப்படவில்லை. கோபாலபுரம் வந்த வி.ஐ.பி-க்கள் அனைவரும் மு.க.ஸ்டாலினை மட்டும் பார்த்துவிட்டுச் சென்றனர். அவர் மறைந்த பிறகு வரும் முதல் பிறந்தநாள் இது. பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தி.மு.க-வினர் திட்டமிடுகிறார்கள். ஆனாலும், தலைவர் இல்லையே என்கிற ஏக்கத்தையும் சோகத்தையும் உடன்பிறப்புகளிடம் பார்க்க முடிகிறது.

‘என் பிறந்த நாளில்  நீ ஊரில் இல்லையா?’

ருணாநிதியின் பிறந்தநாள் அனுபவம் குறித்த நினைவுகளை அவருடன் நெருங்கிப் பழகிய திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

அவர் இல்லாத அந்த நாள்!

“தலைவர் கலைஞரின் பிறந்தநாள் என்பது தி.மு.க-வினருக்கு பெரிய திருவிழா. அன்றைய தினம் தலைவரைப் பார்ப்பதற்கு பத்து மணிகூட ஆகலாம் என்கிற நிலையில், காலை 5 மணியிலிருந்தே தொண்டர்கள் காத்துக்கொண்டிருப்பார்கள். தி.மு.க-வை நான் ஆதரிக்கத் தொடங்கிய பிறகு, பெரும்பாலான ஆண்டுகளில் கலைஞரின் பிறந்தநாளுக்குச் சென்று அவரிடம் வாழ்த்துப் பெற்றிருக்கிறேன். காலையில் கோபாலபுரம் சென்றால், தொண்டர்களின் நெரிசலில் சிக்கிக்கொண்டுதான் வீட்டுக்குள் நுழையவே முடியும். அதனால், காலை 5:30 மணிக்கெல்லாம் கோபாலபுரம் போய்விடும் வழக்கத்தை வைத்துக்கொண்டேன். காலையிலேயே பெரியார் நினைவிடத்துக்கும், அண்ணா நினைவிடத்துக்கும் புறப்படுவதற்கு முன்பாக தலைவரைப் பார்த்துவிடுவேன்.

நினைவிடங்களுக்குப் போய்வந்த பிறகுதான், தொண்டர்களை அவர் சந்திப்பார். அன்றைய தினம் கட்சியின் மூத்த தலைவர்கள், தலைவருடன் சேர்ந்து அமர்ந்து காலை உணவு சாப்பிடுவார்கள். தலைவரின் பிறந்தநாளில் இரண்டு மூன்று முறை அவருக்கு அருகில் அமர்ந்து காலை உணவு சாப்பிடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது.

2012-ம் ஆண்டு டெசோ மாநாடு. அதையொட்டி கிட்டத்தட்ட 40 நாள்கள் அவர்கூடவே இருந்தேன். அதன் பிறகு லண்டனுக்கு என் பிள்ளைகள் வீட்டுக்கு செல்லத் திட்டமிட்டிருந்தேன். அதைக் கேள்விப்பட்டு, ‘என் பிறந்த நாளுக்கு நீ ஊரில் இல்லையா?’ என்று கேட்டார். நான் தயக்கத்துடன், ‘ஆமாம் அய்யா… லண்டன் போகிறேன்’ என்று சொன்னேன். உடனே அவர், ‘உன்னோட பிறந்தநாளுக்கு நான் வாழ்த்துகிறேன். என் பிறந்தநாளுக்கு நீ வாழ்த்த மாட்டியா?’ என்று கிண்டலாகக் கேட்டார்.

கடும் தோல்வியைச் சந்தித்த 2014-ம் ஆண்டும்கூட, எப்போதும்போல அதே மகிழ்வோடுதான் பிறந்தநாளைக் கொண்டாடினார். நான் அறிவாலயம் சென்றபோது, ‘தலைவர் சி.ஐ.டி நகர் போய்விட்டார்’ என்று சொன்னார்கள். உடனே, சி.ஐ.டி நகர் போனேன். ‘அறிவாலயத்தில் ரொம்பக் கூட்டமாக இருந்தது. அதான் பார்க்க முடியவில்லை’ என்று சொன்னேன். சிரித்துகொண்டே, ‘வா… சாப்பிடுவோம்’ என்று சொல்லி என்னைச் சாப்பிடவைத்தார்.

கடைசியாக, 2016-ம் ஆண்டு, ஜூன் 3-ம் தேதி பெரியார், அண்ணா நினைவிடங்களுக்குச் சென்றுவிட்டு, காலை உணவு உண்பதற்காக வந்தபோது அவரைச் சந்தித்தேன். மஞ்சள் துண்டு எதுவுமில்லாமல் கைபனியனுடன் இருந்தார். ‘வா… வந்து படம் எடுத்துக்கொள்’ என்று அன்போடு சொன்னார். அப்போது அவரருகே நின்று படம் எடுத்துக்கொண்டேன். அதுதான், அவருடன் நான் எடுத்துக்கொண்ட கடைசிப்படம். புன்னகையோடு என்னை அவர் அழைத்த அந்தக் காட்சி, இன்னும் என் மனக்கண்ணில் தேங்கிநிற்கிறது. அதன் பிறகு, 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் அய்யாவின் பிறந்தநாளில் அவரைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.”

ஆ.பழனியப்பன், படம்: க.பாலாஜி