அரசியல்
அலசல்
Published:Updated:

ஆட்சிக்கவிழ்ப்பு புகழ் ஆஸ்திரேலியா... மீண்டும் பிரதமரானார் ஸ்காட் மோரிசன்!

ஆட்சிக்கவிழ்ப்பு புகழ் ஆஸ்திரேலியா... மீண்டும் பிரதமரானார் ஸ்காட் மோரிசன்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆட்சிக்கவிழ்ப்பு புகழ் ஆஸ்திரேலியா... மீண்டும் பிரதமரானார் ஸ்காட் மோரிசன்!

ஆட்சிக்கவிழ்ப்பு புகழ் ஆஸ்திரேலியா... மீண்டும் பிரதமரானார் ஸ்காட் மோரிசன்!

ட்சிக் கவிழ்ப்புக்குப் பெயர்போன நாடு, ஆஸ்திரேலியா. அங்கு பதவிக்கு வருவதைவிடப் பதவியில் தொடர்வதுதான், குதிரைக்கொம்பு.

தற்போது அங்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில், கருத்துக் கணிப்புகளை எல்லாம் அடித்து நொறுக்கிவிட்டு மகத்தான வெற்றி பெற்றுள்ளது, லிபரல் கட்சி - தேசியக் கட்சி கூட்டணி. அதனால், தற்போதைய பிரதமர் ஸ்காட் மோரிசன், மீண்டும் பதவியைத் தக்கவைத்திருக்கிறார்.

கடந்த மே 18-ம் தேதி, ஆஸ்திரேலியாவில் 151 இடங்களுக்கான பொதுத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்குப் பிந்தையக் கருத்துக்கணிப்புகள், ‘தொழிலாளர் கட்சிதான் வெற்றி பெறும்’ எனத் தெரிவித்திருந்தன. பெரும்பாலான அரசியல் நிபுணர்களும் அதையே ஆமோதித்திருந்தனர். ஆனால், ஆட்சி அமைக்கத் தேவையான 76 இடங்களை வென்று, அனைவரை யும் அதிரவைத்துள்ளது லிபரல் கட்சி - தேசியக் கட்சி கூட்டணி. நாட்டின் 30-வது பிரதமராக ஸ்காட் மோரிசன் பதவி ஏற்கவிருக்கிறார். லிபரல் கட்சிக்கு இது ஹாட்ரிக் வெற்றி.

ஆட்சிக்கவிழ்ப்பு புகழ் ஆஸ்திரேலியா... மீண்டும் பிரதமரானார் ஸ்காட் மோரிசன்!

எப்படியும் ஆட்சியைப் பிடித்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரதான எதிர்க் கட்சியான தொழிலாளர் கட்சி, 65 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. தோல்விக்குப் பொறுப்பேற்று அந்தக் கட்சியின் தலைவர் பில் ஷார்டென் பதவி விலகியுள்ளார். பசுமைக் கட்சி, ஒரே தேசம் கட்சி, ஒருங்கிணைந்த ஆஸ்திரேலியக் கட்சி போன்ற சிறிய கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும் சுயேச்சை வேட்பாளர்களும் ஆறு இடங்களைக் கைப்பற்றியுள்ளனர். ஆனாலும், லிபரல் கட்சிக்கும் சில பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன. லிபரல் கட்சியைச் சேர்ந்தவரான முன்னாள் பிரதமர் டோனி ஆபாட், தனது சொந்தத் தொகுதியில், சுயேச்சை வேட்பாளர் சாலி ஸ்டெகாலிடம் தோற்றிருக்கிறார். 

இந்தியாவைப் போலவே, ஆஸ்திரேலியாவிலும் வடக்கு - தெற்கு பிளவு உண்டு. வடக்கில் இருப்பவர்கள், லிபரல் கட்சியை எப்போதும் ஆதரிப்ப தில்லை. தெற்கின் ஆதரவால்தான், லிபரல் கட்சி மீண்டும் வெற்றிவாகை சூடியுள்ளது. தொடர் ஆட்சிக் கவிழ்ப்பு களால், கட்சிக்குப் பெரிய களங்கம் ஏற்பட்டிருந்தபோதும் மோரிசனின் தனிப்பட்ட செல்வாக்குதான் கட்சியின் வெற்றிக்கு அடித்தளமிட்டுள்ளது. மோரிசனின் எதிர்பாராத வெற்றியை ஆஸ்திரேலியா கொண்டாடினாலும் ஆட்சியின் ஸ்திரத்தன்மை குறித்த கேள்விகளும் எழுகின்றன. ஏனெனில், ஆட்சிக் கவிழ்ப்பும் பிரதமர் பதவிப் பறிப்பும் ஆஸ்திரேலியாவில் சர்வ சாதாரணம். சொல்லப்போனால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம்தான் மோரிசனும் பிரதமரானார். 

ஆஸ்திரேலியாவில் பெரும்பாலும் ஆட்சிக்கவிழ்ப்புகளுக்குக் காரணமாக அமைகின்றன உட்கட்சிப்பூசல்கள். இதனால், கடந்த எட்டு ஆண்டுகளில் ஐந்து பிரதமர்கள் அங்கு மாறிவிட்டார் கள். ஒருவர்கூடப் பதவிக் காலம் முடியும் வரை பதவியில் இருக்கவில்லை. ஆனால், கடந்த முப்பது ஆண்டுகளாக ஆட்சிக் கவிழ்ப்புகள் அங்கு தொடர் கின்றன. 1983-ம் ஆண்டில் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த பாப் ஹாக், அப்போதைய பிரதமர் ஹைடனைக் கவிழ்த்து பிரதமர் பதவியைக் கைப்பற்றினார். பிறகு, அவரைக் கவிழ்த்து, கீட்டிங்க் பிரதமரானார். அவருக்குப் பிறகு பதவியேற்ற ஜான் ஹாவர்ட், நான்கு முறை தொடர்ந்து பிரதமராக இருந்தார். 2007-ம் ஆண்டுவரை ஆட்சிக்கவிழ்ப்பு இல்லை. அதற்குப் பிறகுதான், ஆட்சிக்கவிழ்ப்பு அதிகரித்தது. ஹாவர்டுக்குப் பிறகு, மிகவும் பிரபலமாக இருந்த கெவின் ரட்டால்கூட தனது பிரதமர் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள முடியாமல் பதவி இழந்தார்.

ஆட்சிக்கவிழ்ப்பு புகழ் ஆஸ்திரேலியா... மீண்டும் பிரதமரானார் ஸ்காட் மோரிசன்!

கடந்த 2010-ம் ஆண்டில் ஜூலியா கில்லர்ட், கெவின் ரட்டை பதவியிலிருந்து தூக்கியெறிந்து, பிரதமரானார். இவர்தான் ஆஸ்திரேலியா நாட்டின் முதல் பெண் பிரதமராவார். ஆனால், 2013-ம் ஆண்டில், கெவின் ரட், ஜூலியாவிடம் இருந்து பதவியைப் பறித்து, மீண்டும் பிரதமரானார். அடுத்து கெவின் ரட்டின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, டோனி ஆபோட் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2015-ம் ஆண்டில் டோனியைப் பதவியிலிருந்து தூக்கியெறிந்து, மால்கம் டர்ன்புல் பிரதமரானார். சிறிது காலத்தில், டர்ன்புல்லுக்கும் அதே நிலை ஏற்பட்டது. கடந்த ஆகஸ்டில் டர்ன்புல் பதவியிலிருந்து இறக்கப்பட்டு, மோரிசன் பிரதமர் ஆக்கப் பட்டார். ஆட்சிக்கவிழ்ப்பைத் தடுக்க, சட்டம் கொண்டுவர முயன்றும் தோற்றுப்போனது, லிபரல் கட்சி. இவ்வளவுக்கும் தேர்தல் ஜனநாயகத்தில், ஆஸ்திரேலியா முன்னணி நாடாகத் திகழ்கிறது. அங்கு வாக்களிப்பது கட்டாயம். தவறினால், 20 டாலர்கள் வரை அபராதம் செலுத்த நேரிடும். அதனால், நடந்து முடிந்த பொதுத்தேர்தலில், 96.8 சதவிகித ஓட்டுகள் பதிவாகியுள்ளன.

தற்போது வெற்றி பெற்றுள்ள கூட்டணி, ‘பொருளாதார ஸ்திரத்தன்மை, வேலைவாய்ப்பு, குடியேற்றத்தைக் குறைப்பது, பருவநிலை, சூழல் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது...’ உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துள்ளது. இவை நிறைவேற்றப்படுமா என்பது அரசின் ஸ்திரத்தன்மையைப் பொறுத்துத்தான் இருக்கிறது. ‘எனக்கு அற்புதங்களில் நம்பிக்கை உள்ளது’ என்று சொல்லியிருக்கிறார், பிரதமர் மோரிசன். ஆஸ்திரேலியாவில் ஒருவர் பிரதமர் பதவியில் நீடிப்பதும்கூட அற்புதமாகத்தானே இருக்கிறது!

- கே.ராஜூ