நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டலத்திற்குட்பட்ட பகுதியில், பொக்காபுரம் பகுதியில் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் இக்கோயிலில் நடைபெறும் தேர்த்திருவிழாவை ஏராளமான பக்தர்கள் கண்டுகளிப்பார்கள். இக்கோயில், அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஆண்டுக்கான பொக்காபுரம் மாரியம்மன் கோயில் தேர் திருவிழா, கடந்த 8 -ம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேர்த் திருவிழா இன்று நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை 1.30 மணியளவில் காட்டு யானை ஒன்று மாரியம்மன் கோயிலுக்குள் நுழைய முயன்றது. திருவிழாவை முன்னிட்டு அப்பகுதியில் முகாமிட்டிருந்த சிங்காரா வனச்சரகர் காந்தன் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து சென்று, பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் வனத்திற்குள் யானையை விரட்டினர்.
திருவிழாவை முன்னிட்டு, நாளை சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் வரக் கூடும் என்பதால், யானை உள்ளிட்ட வன விலங்குகளால் பக்தர்களுக்கு பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல, நீலகிரி வன கோட்டத்தில் இருந்து அதிவிரைவுப் படையினரும் வரவழைக்கப்பட்டு, பொக்காபுரம் பகுதியில் முகாமிட்டுள்ளனர். இவர்கள், இரண்டு நாள்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கிருஷ்ணகுமார் கௌசல் கூறுகையில், ``பொக்காபுரம் மாரியம்மன் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். திருவிழாவை சுமுகமாகக் கொண்டாட, வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வனவிலங்கு - மனித மோதல்களைத் தடுக்கும் வகையில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நீலகிரி கோட்டத்தில் இருந்து அதிவிரைவுப் படையும் வரவழைக்கப்பட்டுள்ளது. கல்லட்டி முதல் பொக்காபுரம் வரை 70 -க்கும் மேற்பட்ட இடங்களில் வன விலங்குகள் எச்சரிக்கை குறித்தும், பிளாஸ்டிக் குப்பைகளை வனத்திற்குள் வீசக் கூடாது உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன” என்றார்.