சட்டம் பெண் கையில்! - இந்து அல்லாதவர்களுக்கான தத்தெடுப்புச் சட்டங்கள்! - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி

சட்டம் பெண் கையில்! - இந்து அல்லாதவர்களுக்கான தத்தெடுப்புச் சட்டங்கள்! - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி
இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியோ, ஆண் பெண் தனித்தோ தத்தெடுக்கும்போது அவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைச் சென்ற இதழ்களில் பார்த்தோம். இந்த இதழில், இந்து அல்லாதவர்களுக்கான தத்தெடுப்புச் சட்டங்கள் பற்றி விளக்குகிறார் வழக்கறிஞர் வைதேகி பாலாஜி.
இந்துவானவர் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க வேண்டும் எனில் தத்தெடுப்பவரும் அந்தக் குழந்தையும் இந்துவாக இருந்தால்தான் தத்தெடுக்க முடியும். ஜெயின் மதத்தினரும் இந்துப் பிரிவுக்குள் வருகின்றனர். மற்ற மதத்தினர் தத்தெடுக்க அவர்கள் மதச் சட்டங்கள் அனுமதிப்பதில்லை. இந்துவல்லாத ஒருவர், ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க வேண்டுமென்று விரும்பினால், அவர்கள் கார்டியன்ஸ் அண்டு வார்ட்ஸ் ஆக்ட் 1890-ன்படி தத்தெடுக்கலாம்.
அதாவது, மைனர் குழந்தைக்குப் பாதுகாவலராக இருக்கும் உரிமை மட்டுமே குழந்தையை வளர்ப்பவருக்குக் கிடைக்கும். அந்தக் குழந்தைக்கு 18 வயதாகும்போது, அவர் கார்டியன் பொறுப்பிலிருந்து தானாகவே நீக்கம் பெறுவார். வளர்ப்புப் பிள்ளை மேஜர் ஆனவுடன், அவர் தன் விருப்பப்படி சுதந்திரமாகச் செயல்படலாம். அவரை யாரும் கட்டுப்படுத்த முடியாது. இந்தச் சட்டத்தை பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

கார்டியன்ஸ் அண்டு வார்ட்ஸ் ஆக்ட், 1890 (The Guardians and Wards Act, 1890)
• இந்துவல்லாத பிற மதத்தினர் இன்னொருவருடைய குழந்தையைத் தங்கள் குழந்தையாக வளர்க்க விரும்பினால், அந்தக் குழந்தையின் விவரங்களுடன் நீதிமன்றத்தில் விண்ணப்பிக்க வேண்டும். குழந்தை என்பது 18 வயதுக்குட்பட்ட ஆண் பெண் இருபாலரையும் குறிக்கும்.
• கார்டியன்ஸ் அண்டு வார்ட்ஸ் ஆக்ட் சட்டப்பிரிவு 9-ன்படி, வளர்ப்புக் குழந்தைக்கு கார்டியனாக இருக்க விரும்பினாலோ, பெற்றோர் இல்லாத குழந்தையின் சொத்தைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்கவோ, வளர்ப் புக் குழந்தை மற்றும் அவரின் சொத்து இரண்டுக்கும் கார்டியனாகச் செயல்பட வேண்டுமென்றாலோ, அந்த நபர் வளர்ப்புக் குழந்தையின் வசிப்பிடம்/அக்குழந்தையின் சொத்து அமைந்துள்ள இடத்தின் எல்லைக்குட் பட்ட மாவட்ட நீதிமன்றத்தில் விண்ணப்பித்து நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற வேண்டும்.
• பொதுவாக இந்துத் தத்தெடுப்புச் சட்டத்தின்படி தத்தெடுப்பவரின் பயலாஜிக்கல் (பெற்றெடுத்த) குழந்தைக்கு உண்டான அத்தனை உரிமைகளும், தத்தெடுக்கப்படும் நாளிலிருந்தே தத்துக்குழந்தைக்கும் உண்டு... இனிஷியல், சொத்து உட்பட. ஆனால், கார்டியன்ஸ் அண்டு வார்ட்ஸ் சட்டப்படி, வளர்ப்புக் குழந்தைக்கு எந்தவிதமான உரிமை யும் கிடைப்பதில்லை. குறிப்பாக, சொத்துரிமை இல்லவே இல்லை. அந்த வளர்ப்புக் குழந்தை தன் பயலாஜிக்கல் பெற்றோர் (பெற்றெடுத்தவர்கள்) மற்றும் அவர்களின் குடும்பத்தில் மட்டுமே சொத்துரிமையைப் பெற முடியும்; தன் கார்டியனின் சொத்துமீது உரிமை கோர முடியாது.
• கார்டியனாகப் பொறுப்பேற்றுக் கொள்பவர் அந்த வேலைக்குச் சன்மானம் பெற்றுக்கொள்ளலாம்; அவர் கார்டியனாக இருக்க விரும்பாவிட்டால் அந்தப் பொறுப்பிலிருந்து நீதிமன்றத்தின் மூலம் விலகிக்கொள்ளலாம். அவரது கடமையைச் செய்யத் தவறும்பட்சத்தில் நீதிமன்றமே அவரை கார்டியன் பொறுப்பிலிருந்து விலக்கி வைக்கலாம்.
கார்டியனும் வளர்ப்புக் குழந்தையின் சொத்தும்!
வளர்ப்புக் குழந்தையின் சொத்து பற்றி இந்தச் சட்டம் சொல்லும் வரையறைகளைப் பார்ப்போம்.
• இந்துவான மைனருக்கு கார்டியனை நியமிக்க வேண்டுமென்றால் அதற்கு இந்து மைனாரிட்டி மற்றும் கார்டியன்ஷிப் ஆக்ட் 1956 என்னும் மதம் சார்ந்த சட்டமும், கார்டியன்ஸ் அண்டு வார்ட்ஸ் சட்டமும் பொருந்தும். மைனரையும் அவருடைய சொத்துகளையும் பராமரிக்க நீதிமன்றத்தின் மூலம் கார்டியன் பொறுப்பை ஏற்பவர், அந்த மைனரின் வளர்ப்பு, கல்வி, பாதுகாப்பு போன்ற அனைத்துக்கும் பொறுப்பாவார்.
• மைனரைப் பராமரிக்க அந்த மைனரின் சொத்தை விற்றுத்தான் ஆக வேண்டும் என்கிற நெருக்கடியான நிலையிலும்கூட, மைனருக்கு உரிமையான சொத்தை விற்கும் அதிகாரம் கார்டியனுக்கு இல்லை. நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்ற பிறகே அதை அவர் செய்ய முடியும்.
• ஒருவேளை, மைனரின் பெயரில் உள்ள சொத்துகள், மைனரின் பராமரிப்புச் செலவுக்கு என்று காரணம் சொல்லப்பட்டு அவரின் கார்டியனால் விற்கப்பட்டிருந்தால்... மைனர் மேஜரான பிறகு, தனது சொத்தைத் தன் கார்டியனாக இருந்த நபர் மோசடியாக விற்பனை செய்துள்ளார் என்று தெரியவந்தால், தன் கார்டியன் மேற்கொண்ட சொத்துப் பரிவர்த்தனையை அவரால் ரத்து செய்ய முடியும்.

ஆம்... அவர் மேஜரான பிறகு 18 வயதிலிருந்து 21 வயது பூர்த்தி அடைவதற்குள், தன் கார்டியன் விற்ற தன் சொத்தின் பரிவர்த்தனையை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடரலாம். 18 - 21 வயதுக்கு இடைப்பட்ட இந்த மூன்று வருட காலத்திலேயே இதைச் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில், இந்து மதத்தைச் சேராதவர்கள் கார்டியனாக இருந்து ஒரு குழந்தையை வளர்த்தெடுக்கும்போது, அந்தக் குழந்தை 18 வயதை அடைந்த பின்னர் தன்னிச்சை உரிமையைப் பெற்றுவிடும். அந்த மேஜருக்கும் அவரை வளர்த்தவருக்கும் இடையிலான உறவு, கார்டியன் - வார்டு உறவு மட்டுமே. இதற்கிடையே, இந்துத் தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம், கார்டியன்ஸ் அண்டு வார்ட்ஸ் ஆக்ட் ஆகிய இரண்டு சட்டங்களுடன், ஜுவனைல் ஜஸ்டிஸ் ஆக்ட் என்னும் இளம் சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டமும் தத்தெடுப்பதற்கான விதிமுறைகளைப் பற்றி விளக்குகிறது. அதைப் பற்றிப் பார்ப்போம்.
இளம் சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 1986 - இதன் திருத்தச் சட்டம் மற்றும் விதிமுறைகளை விளக்கும் 2000, 2006 மற்றும் 2007 சட்டங்கள்:
• பெற்றோரால் புறக்கணிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் குற்றவாளியாக தண்டனை பெற்ற குழந்தைகளுக்கான நீதி மற்றும் பராமரிப்புச் சட்டமாகத்தான் இந்தச் சட்டம் ஆரம்பத்தில் இருந்தது. இந்துக்களைத் தவிர மற்ற மதத்தினர் தத்தெடுப்பு நடைமுறையில் ஈடுபட முடியாது என்றிருந்த நிலையில், இனம், மதம், சாதி, மொழி இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு எந்த ஓர் இந்தியரும் தத்தெடுப்பதற்கான வழியை இச்சட்டம் உறுதிப்படுத்துகிறது.
• இச்சட்டப்படி எந்த மதத்தைச் சேர்ந்தவரும் தத்தெடுக்கலாம் என்ற நிலை இருந்தாலும், சட்டப்பிரிவு அதற்குக் கைகொடுத்தாலும், இஸ்லாமியரைப் பொறுத்தவரையில் இஸ்லாமிய அமைப்புகள் இதற்கு அனுமதிப்பதில்லை. ஏனென்றால், இஸ்லாமியர் தத்தெடுப்பதற்கு ‘kafala’ என்ற முறையைத்தான் பின்பற்றி வருகின்றனர்.
அதன் அடிப்படையில் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஒருவர் பிறருடைய குழந்தையை, கைவிடப்பட்ட அல்லது ஆதரவற்ற குழந்தையை வளர்க்கலாம். ஆனால், பயலாஜிக்கல் பெற்றோருக்கு உரிய உரிமைகளை அவர் அடைய முடியாது.
இன்னொரு பக்கம், இளம் சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2000 பிரிவு 2(aa)-ன்படி தத்துக் குழந்தையின் பயலாஜிக்கல் பெற்றோருக்கு அக்குழந்தையின் மீதுள்ள உரிமைகள் அறுபட்டு, வளர்ப்புப் பெற்றோருக்கு அத்தனை உரிமைகளும் வந்தடைந்துவிடுகின்றன. இந்த நிலையில், இஸ்லாமியர் தாங்கள் தத்தெடுத்து வளர்க்கும் குழந்தைக்கான உரிமையைத் தெளிவுபடுத்தும் விதமாகவும், அது தொடர்பான சட்டத் திருத்தத்துக்கும் காரணமாக அமைந்தது சப்னம் ஹாஷ்மி என்பவரின் வழக்கு.
சப்னம் ஹாஷ்மி வழக்கு
சட்டப்பிரிவுகள் வலியுறுத்தும் ஒன்றைச் செயல்படுத்தும் அதிகாரம் மட்டுமல்ல, நிராகரிக்கும் அதிகாரமும் நீதிமன்றத்துக்கு உண்டு. அந்த வகையில், சப்னம் ஹாஷ்மி என்பவர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு, தத்தெடுப்பு தொடர்பாக இருந்த சட்டத் தடையை உடைக்கும் வகையில் அமைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பாக மாறியது.
இஸ்லாமியரான சப்னம் ஹாஷ்மிக்கு ஏற்கெனவே ஒரு மகன் இருந்த நிலையில் பெண் குழந்தை வேண்டுமென்று ஒரு வயதுப் பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்தார்.
அந்தக் குழந்தை மேஜரானபோது, அதற்கும் சப்னம் ஹாஷ்மிக்கும் இடையேயான கார்டியன் - வார்டு உறவு முடிவுக்கு வந்துவிடும் என்ற நிலையில், சப்னம் உயர் நீதிமன்றத்தில் ரிட் வழக்கு தொடர்ந்தார்.
நீதியரசர் சதாசிவத்தைக் கொண்ட அமர்வு, ‘ஆரம்பகாலத்தில் கொண்டுவரப்பட்ட இளம் சிறார் நீதி சட்டத்தில், பெற்றோரால் கைவிடப்பட்ட அல்லது குற்றச் செயலில் ஈடுபட்ட குழந்தைகளைப் பற்றியும் அவர்களின் நலன் பற்றியும் மட்டுமே அலசப்பட்டது. அதன் பின்னர் அந்தச் சட்டங்களில் பலமுறை திருத்தங்கள் செய்யப்பட்டன. 2006-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட திருத்தச் சட்டத்தின்படி எந்த மதத்தைச் சேர்ந்தவரும் தத்தெடுக்கலாம்.
ஒவ்வொருவரின் தனிப்பட்ட மதநம்பிக்கையை மதிக்கும் அதே வேளையில் மதத்துக்கு அப்பாற்பட்டு இளம் சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தில் விளக்கப்படுவதைப்போல, தத்தெடுப்பது யாராக இருந்தாலும் அவருக்கு அந்தக் குழந்தையின் பயலாஜிக்கல் பெற்றோருக்கு உரிய உரிமை வந்தடைகிறது. இதை வலியுறுத்தும் சட்டப்பிரிவானது `யூனிபார்ம் சிவில் கோடு' என்னும் அனை வருக்கும் ஒரே சட்டம் என்கிற அரசியலமைப்பு சாசனம் ஷரத்து 44 கூறுவதை நோக்கி அடியெடுத்து வைப்பதாக உள்ளது’ என்று தன் தீர்ப்பில் கூறியது.
இந்தத் தீர்ப்பின் மூலம், இஸ்லாமியருக்குத் தாங்கள் தத்தெடுக்கும் குழந்தையிடம் பயலாஜிக்கல் பெற்றோருக்கான அனைத்து உரிமைகளும் உள்ளன என்றும், வளர்ப்புக் குழந்தையும் அவர்களுக்குப் பிறந்த குழந்தையைப் போலத்தான் என்றும் உறுதி செய்யப்பட்டது.
இன்னொரு பக்கம், ‘இஸ்லாமியரின் தனிச்சட்டத்தில் தலையிட முடியாது’ என `ஆல் இந்தியா முஸ்லிம் பர்சனல் லா போர்டு' இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறது.
தத்தெடுப்புக்கான சட்டங்கள்... ஒரு ரீகேப்!
மொத்தத்தில், இந்துத் தத்தெடுப்புச் சட்டங்களில் தெளிவு இன்னும் தேவைப் படுகிறது. இந்துக்களுக்கு இந்துத் தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம் 1956 உள்ளது.
மற்ற மதத்தினர் தத்தெடுக்க அவர்களின் மதச்சட்டங்கள் அனுமதிப்பதில்லை. அதனால் வளர்ப்புக் குழந்தைக்கு கார்டியனாக இருக்கும் உரிமை மட்டுமே அவர்களுக்கு வழங்கப்படுகிறது (கார்டியன்ஷிப் அண்டு வார்ட்ஸ் ஆக்ட் 1890). இதற்கிடையே இளம் சிறார் சட்டம் 1986 மற்றும் அதனுடைய திருத்தச் சட்டங்கள், இளம் சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) திருத்தச் சட்டம் 2000, 2006, 2011, 2015 என இந்தச் சட்டங்கள் எல்லாம் அனைத்துத் தரப்புக்கான தத்தெடுப்பு பற்றி விளக்குகின்றன.
ஆதரவற்ற நிலையிலிருக்கும் லட்சக் கணக்கான குழந்தைகளுக்கு ‘தத்தெடுப்பு’ என்ற மாபெரும் வாய்ப்பின் மூலம் குடும்பங்கள் கிடைக்கப்பெறுவதில், இந்தச் சட்டங்கள் விதித்திருக்கும் கட்டுப்பாடுகள் தடையாக அமைகின்றனவா என்றால், இல்லை.
காரணம், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் கீழ் வரும் ‘காரா (CARA - Central Adoption Resource Authority)’ அமைப்பு, இதில் பரந்து விரிந்த ஒரு பாதையைக் காட்டுகிறது. ‘காரா’ பற்றி விளக்கமாக... அடுத்த இதழில்!
ஓவியம்: கோ.ராமமூர்த்தி