தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

எதிர்க்குரல்: உங்களில் பாவம் செய்யாதவர்! - ஷிர்லி ஹார்டி ஜாக்சன்

எதிர்க்குரல்: உங்களில் பாவம் செய்யாதவர்! - ஷிர்லி ஹார்டி ஜாக்சன்
பிரீமியம் ஸ்டோரி
News
எதிர்க்குரல்: உங்களில் பாவம் செய்யாதவர்! - ஷிர்லி ஹார்டி ஜாக்சன்

ஓவியம்: கார்த்திகேயன் மேடி

ஆறு நாவல்கள், இரண்டு சுயசரிதைகள், 200 சிறுகதைகள் எழுதியிருக்கிறார் என்றாலும், `ஷிர்லி ஜாக்சன் தெரியுமா?' என்று கேட்டால், `ஓ... `லாட்டரி' எழுதியவர்தானே... நன்றாகத் தெரியும்' என்று அவருடைய அந்த ஒரேயொரு சிறுகதையை நினைவுகூர்ந்து இன்னமும் நடுங்குபவர்கள் கோடிக்கணக்கில் இருப்பார்கள்.

ஷிர்லி ஹார்டி ஜாக்சன் (1916-1965), ஓர் அமெரிக்க எழுத்தாளர். புத்தகமும் கையுமாக எப்போதும் அறையில் அடைந்து கிடக்கும் தன் மகளைக் கண்டு, ஜாக்சனின் பெற்றோர் பெரிதும் கவலைப்பட்டுத் தீர்த்திருக்கிறார்கள். பள்ளிப்படிப்பை முடித்ததும், ``என்ன படிக்கப்போகிறாய்?'' என்று கேட்டபோது, `இதழியல்' என்றார் ஜாக்சன். கல்லூரி இலக்கிய ஏட்டில் முதல் சிறுகதை வெளிவந்தது. தன்னுடன் படித்த ஸ்டான்லி எட்கர் ஹைமன் என்பவரை ஜாக்சன் மணந்துகொண்டார். இந்த ஹைமன், நாடறிந்த இலக்கிய விமர்சகராகப் பிறகு மாறினார்.

நான்கு குழந்தைகள். கணவனும் மனைவியும் போட்டிபோட்டுக்கொண்டு வீட்டு நூலகத்தில் குவித்த புத்தகங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டும். கிடைக்கும் நேரங்களிலெல்லாம் ஜாக்சன் எழுதிக்கொண்டே இருந்தார். திகில் கதைகள், மர்மக் கதைகள் அல்லது பேய்க் கதைகள் என்று அவருடைய படைப்புகள் பொது வாசகர்களால் எளிமையாக அழைக்கப்பட்டன. அவற்றை நெருங்கிச் சென்று ஆராய்ந்தவர்களோ நதானியல் ஹாதோர்ன், எட்கர் ஆலன் போ போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களின் வரிசையில் ஜாக்சனை நிறுத்தி, அவருடைய இலக்கியத் தரத்தை உயர்வாக மதிப்பிட்டனர். `ஜாக்சனின் எழுத்தை மேலோட்டமாக எடை போட்டுவிடாதீர்கள். அதில் பலவிதமான அடுக்குகள் இருக்கின்றன. கவனமாக ஆராயுங்கள்' என்றும் அவர்கள் ஆலோசனை வழங்கினர்.

எதிர்க்குரல்: உங்களில் பாவம் செய்யாதவர்! - ஷிர்லி ஹார்டி ஜாக்சன்

ஒரு நாள், தன் குழந்தையை பள்ளிக்கு அனுப்பிவிட்டு ஒரு கதையை எழுதத் தொடங்கிய ஜாக்சன், மதியம் குழந்தை திரும்பி வருவதற்குள் அதை எழுதி முடித்து, அனுப்பியும் வைத்தார். `மிக எளிமையான கதை என்பதாலோ என்னவோ, எளிதாக முடிந்தும்விட்டது' என்று பிறகு நினைவுகூர்ந்தார். `தி லாட்டரி' 1948-ம் ஆண்டு நியூயார்க்கரில் வெளிவந்தது. வழக்கத்தைக் காட்டிலும் ஏன் இந்தக் கதைக்கு மட்டும் மூன்று மடங்கு அதிக சன்மானம் அளித்திருக்கிறார்கள் என்று ஜாக்சனுக்குப் புரியவில்லை.

எதிர்வினைகள், அவர் குழப்பத்தை அதிகரித்தன. மோசமான வசவுகளும் கடும்சொற்களும் வெள்ளம்போல் புறப்பட்டு வந்தன. `ச்சீய், நீயெல்லாம் ஒரு பெண் தானா? இதயம் இருக்கவேண்டிய இடத்தில் உலோகத்தை வைத்துவிட்டானா கடவுள்? மர்மம், திகில் என்றெல்லாம் எழுதி, இறுதியில் உன்னை முழுக்கவே சாத்தானிடம் ஒப்புக்கொடுத்துவிட்டாயா? பெண்களை இப்படியா காட்சிப்படுத்துவது? குழந்தைகள் என்ன செய்தார்கள், பாவம்! இப்படியொரு வன்மத்தை அவர்கள்மீது காட்டுவதற்கு? நீயும் ஒரு தாய்தானே... நியூயார்க்கருக்கும் கடிதங்கள் பறந்தன. `உங்கள் இதழ் வாங்குவதை இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். எங்கள் மதிப்பை நீங்கள் இழந்துவிட்டீர்கள்.'

னி, கதை...

அது ஓர் அமைதியான அமெரிக்கக் கிராமம். திரும்பும் திசையெல்லாம் பச்சைப்பசேலென்று புல்வெளிகள்; பூத்துக்குலுங்கும் வண்ண மலர்கள். குளிர்காலம் முடிவுக்கு வந்து, இளஞ்சூரியனின் கதிர்கள் மெள்ள மெள்ள கீழே இறங்கி வர ஆரம்பித்திருந்தன. கீச்சுக்கீச்சென்று பறவைகள் உற்சாகமாகக் குரல்கொடுத்து அன்றைய பொழுதைத் தொடங்கிவைத்தன.

கிராமத்து மக்கள் வீட்டைப் பூட்டிக் கொண்டு மைதானத்தை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள். அதற்குள் கூட்டம் கூட்டமாக வந்துவிட்ட குழந்தைகள், அங்கும் இங்கும் துள்ளிக்கொண்டு கூழாங்கற்களைச் சேகரித்துக்கொண்டிருந்தார்கள். சிலர் மணலில் அமர்ந்து வழுக்கி வழுக்கி விழும் கற்களை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கிவைத்து வீடு கட்ட முயன்றுகொண்டிருந்தார்கள். பள்ளிக்கூடம் முடிந்து அப்போதுதான் விடுமுறை தொடங்கியிருந்தது என்பதால், கூச்சலும் அதிகமாகவே இருந்தது.

எல்லோருக்கும் உகந்த நேரம் அது என்பதால்தான், அன்றைய தினம் லாட்டரிக்குத் தேர்வுசெய்யப்பட்டிருந்தது. மைதானத்தின் மையத்தில் இருந்த மேஜையில் கறுப்புப்பெட்டி கனத்த அமைதியோடு காத்திருந்தது. அங்கு இருப்பவர்களிலேயே மிகவும் மூத்தவரான வார்னர் பிறப்பதற்கு முன்பே பெட்டி கிராமத்துக்கு வந்து சேர்ந்து விட்டது. எங்கிருந்து, எப்போது என்று ஒருவருக்கும் நினைவில்லை. ஆனால், வந்ததிலிருந்து அவர்களுடைய வாழ்வோடு அது கலந்துவிட்டது. ஒரு குழந்தை தன் பொம்மையை நேசிப்பதைப்போல அதை அவர்கள் நேசித்தார்கள்.

அரிதாக, சிலர் சஞ்சலம் கொள்வதுண்டு. பக்கத்து ஊரைப்போல் லாட்டரியை நாமும் கைவிட்டுவிடலாமா... ஆனால், மறுநொடியே அவ்வாறு சிந்தித்ததற்காக அவர்கள் வெட்கப்பட்டுக்கொள்வார்கள். ஆயிரமிருந்தாலும் லாட்டரி நம் மரபு. கறுப்புப் பெட்டி வெறுமனே ஒரு பொருளா என்ன? நம்மை நம் மூதாதையரோடு ஒன்றிணைக்கும் தொப்புள் கொடியல்லவா இது?

விடிந்த பிறகும் நீண்ட நேரம் உறங்குபவர்கள் கூட போர்வையை உதறித் தள்ளிவிட்டு உற்சாகமாக நடந்துகொண்டிருந்தனர். `சீக்கிரம், சீக்கிரம் கதை பேசாமல் நடங்கள்!'

என்று தாத்தா, பாட்டிகள் அவசரப்படுத்திக் கொண்டிருந்தார்கள். எல்லோரும் வந்துவிட் டார்களா என்பதை எல்லோரும் திரும்பித் திரும்பி பார்த்து உறுதிசெய்துகொண்டனர். விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள், அப்பா அம்மாவைக் கண்டதும் அவர்களை நோக்கி ஓடினார்கள். இப்போது எல்லோரும் குடும்பம் குடும்பமாகக் குழுமி இருந்தனர். மைதானம் நிறைந்துவிட்டது.

`ஐயோ, இன்னிக்கு லாட்டரி என்பதையே மறந்துவிட்டேன்' என்று முணுமுணுத்தபடி கட்டக்கடைசியாக ஓடிவந்தார், டெஸ்ஸி ஹச்சின்சன். ``கவலைப்படாதே டெஸ்ஸி, நீ இல்லாமல் தொடங்குவோமா?'' என்று அருகில் இருப்பவர்கள் டெஸ்ஸியின் கையைப் பிடித்துக்கொண்டனர். தன் கணவனையும் குழந்தையையும் கண்டுபிடித்து, அவர்களோடு சேர்ந்த பிறகுதான் மூச்சே வந்தது டெஸ்ஸி.

அமைதி, அமைதி என்று கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார் மிஸ்டர் சம்மர்ஸ். லாட்டரியை நிர்வகிக்கும் பொறுப்பை அவர் தானே முன்வந்து ஏற்றுக்கொண்டாரா அல்லது ஊர் மக்களால் அவர் நியமிக்கப்பட்டாரா என்று தெரியவில்லை. ஆனால், இரு கைகளையும் கூட்டத்தைப் பார்த்து அசைத்தபடி, பெட்டிக்கு அருகில் நின்றுகொண்டிருந்த சம்மர்ஸை மக்கள் அனைவரும் நேசித்தனர். அவரது மிருதுவான சுபாவமே அதற்குக் காரணம்.

உங்கள் எல்லோருக்கும் நடைமுறை தெரிந்திருக்கும். இருந்தாலும் அதை ஒருமுறை விளக்கவேண்டியது என் கடமை என்று தொண்டையைக் கனைத்துக்கொண்டார் சம்மர்ஸ். லாட்டரிக்காக கறுப்புப்பெட்டி எவ்வாறு பாதுகாக்கப்பட்டது (ரகசியமான ஓரிடத்துக்குக்கொண்டுசென்று பெட்டியை முந்தைய இரவே பூட்டி வைத்துவிட்டார்கள்). அதில் உள்ள சீட்டுகள் எவ்வாறு சரிபார்க்கப் பட்டன என்பதை அவர் விளக்கினார். பிறகு, தன்னிடம் உள்ள பட்டியலை எடுத்து ஒவ்வொரு பெயராக அழைக்கத் தொடங்கினார்.

``நான் சொல்லும்வரை ஒருவரும் சீட்டைத் திறக்கக் கூடாது.’'

ஒவ்வொருவராக மேடையேறி வந்து, கறுப்புப்பெட்டிக்குள் கையைவிட்டு அதிலிருந்து ஒரு சீட்டை எடுத்துக்கொண்டு தன்னுடைய இடத்துக்கு வந்து சேர்ந்தனர். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு சீட்டு. அந்தச் சீட்டை குடும்பத் தந்தை எடுக்க வேண்டும். ``அப்பா இல்லாத குடும்பத்தில், ஆளுயரம் வளர்ந்த மகன் இருந்தால் அவன் லாட்டரியில் பங்கேற்கலாம். மகன் இல்லாவிட்டால் அம்மா'' என்றார் சம்மர்ஸ்.

ஒவ்வொருவரிடமும் சீட்டு சென்று சேர்ந்துவிட்டதை உறுதிசெய்துகொண்ட பிறகு, ``இப்போது பிரிக்கலாம்'' என்றார் சம்மர்ஸ். அனைவரும் ஒரே நேரத்தில் கீழே குனிந்து கையில் இருந்த சீட்டைப் பிரித்தனர். ``டெஸ்ஸி...'' சத்தம் போட்டு கூச்சலிட்டனர். ``டெஸ்ஸி, உன் பெயர்தான் வந்திருக்கிறது!''

``இல்லை, இதை ஏற்க முடியாது'' என்றார் டெஸ்ஸி. டெஸ்ஸியின் கணவர் பில், தன்னிடம் உள்ள சீட்டை உயர்த்திக் காட்டினார். ``உண்மைதான், இதில் டெஸ்ஸியின் பெயர்தான் எழுதப்பட்டிருக்கிறது. இதோ டெஸ்ஸியின் பெயருக்கு அருகில் கறுப்புப் புள்ளியும் இருக்கிறது.''

தலை அசைத்த சம்மர்ஸ், மெல்லிய குரலில் கூட்டத்திடம் கிசுகிசுத்தார். ``இனி நீங்கள் தொடங்கலாம்.''

டெஸ்ஸி பின்வாங்குவதற்குள் முதல் கல் அவள் தலையைத் தாக்கியது. அடுத்த கணமே உயர்த்திய கரங்களோடு அனைவரும் டெஸ்ஸியைச் சுற்றிவளைக்க ஆரம்பித்தனர்.

கதை இங்கே முடிகிறது.

ஜாக்சன் எழுதியதைக் கண்டு கோபமும் அதிர்ச்சியும் அடைந்தவர்களை ஒதுக்கிவிட்டு, ஜாக்சன் எதையெல்லாம் எழுதாமல் விட்டார் என்று பார்ப்போம். மிக இயல்பாக ஒரு கிராமம் அன்றைய லாட்டரிக்குத் தயாராகிறது. அது அவர்களுக்கு ஒரு சடங்கு. வழிவழியாகப் பின்பற்றப்படும் ஒரு மரபு. அப்பா இல்லாத குடும்பங்கள் அந்தக் கிராமத்தில் இருப்பதற்குக் காரணம், முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற லாட்டரிதான். டெஸ்ஸி ஒரு தவறும் செய்யாதவர்தான். பாவம்தான், அவர். ஆனால், அவருக்கு முன்பு கொல்லப்பட்டவர்களும் அப்படித்தான் இருந்திருப்பார்கள். பயத்துடன் அலறும் இதே டெஸ்ஸியின் கையில் சென்ற ஆண்டு பளபளப்பான ஒரு கல் இருந்திருக்க வேண்டும்.

எந்தக் கதையும் வெற்றிடத்தில் பிறப்பதில்லை. இரண்டாம் உலகப்போர் நிறைவடைந்து, அதன் அதிர்ச்சியிலிருந்து உலகம் மீள முடியாத ஒரு சூழலில் ஜாக்சன் இந்தக் கதையை எழுதுகிறார்.

``ஓர் அப்பாவியை ஏன் மக்கள் ஒன்றுசேர்ந்து கொல்ல வேண்டும்? நான் கொன்ற யூதர்களுக்கும் எனக்கும் முன்விரோதம் எதுவுமில்லை. அவர்கள் யார் என்றே எனக்குத் தெரியாது. ஹிட்லர் சொன்னார், செய்தேன்'' என்று நாஜி வீரர்கள் சாட்சியம் அளித்தனர். வதை முகாமில் பணியாற்றிய ஒவ்வொரு நாஜி வீரரும் மணியடித்ததும் வீட்டுக்குச் சென்று கை கால் கழுவிக்கொண்டு, மனைவி, குழந்தை, செல்ல நாய் என்று மிக இயல்பாக, மகிழ்ச்சியாக அன்றைய இரவைக் கழித்திருக்கிறார்கள். இவர்களில் பலர் இறை பக்தி கொண்டவர்கள்; பழி, பாவத்துக்கு அஞ்சு பவர்கள்; யாசிப்பவர்களுக்கு வழங்குபவர்கள்; நல்ல அப்பாக்கள்; நல்ல காதலர்கள்; நல்ல சகோதரர்கள்; நல்ல மனிதர்கள்.

மிஸ்டர் சம்மர்ஸைப்போல, மூத்தவரான மிஸ்டர் வார்னரைப் போல, டெஸ்ஸியைப் போல, அவர் கணவர் பில்லைப் போல. லாட்டரி தினத்தன்று மட்டுமே, அதுவும் சில நிமிடங்கள் மட்டுமே அவர்கள் மனிதர்களாக இருப்பதில்லை. அங்கே ஹிட்லர், இங்கே மரபு. ஆனால், ஹிட்லரின் ஆள்கள் மட்டுமா கொன்றார்கள்? தீமையை அழிக்கிறேன் என்று புறப்பட்ட நல்ல ஆத்மாக்களும் கொல்லத்தான் செய்தன. பயங்கரவாதத்தை அழிக்கிறேன் என்னும் பெயரால், ஜனநாயகத்தைக் காக்கிறேன் என்னும் பெயரால், உலகை மீட்கிறேன் என்னும் பெயரால். போர் என்பது அவர்களுக்கான லாட்டரி தினம். அன்று கொல்வது இயல்பானது.

அதோ அங்கே பார், சாத்தான் என்று ஜாக்சன் தன் விரலை வெளியில் நீட்டியிருந் தால், `ஆ... நல்ல திகில் கதை' என்று மகிழ்ந் திருப்பார்கள். நிலைக்கண்ணாடியைப் பாருங்கள், சாத்தானைக் காண்பீர்கள் என்று பதறாத குரலில் சொன்ன ஜாக்சன், எரிச்சலூட்டுபவராக இருந்தார். லாட்டரி, அவர்களை உறங்கவிடாமல் செய்தது. கண்ணாடியில் தெரிந்த பிம்பம்தாம் அதற்குக் காரணம்.

-மருதன்