தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...
பிரீமியம் ஸ்டோரி
News
நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

பூமியின் பரப்பளவில் மூன்றில் இரண்டு பங்கு நீர்தான். நம்மைச் சுற்றி இவ்வளவு நீர்  இருந்தாலும்கூட, நாம் பயன்படுத்தக்கூடிய நன்னீரின் அளவு வெறும் 2.5 சதவிகிதம் மட்டுமே. இதை நன்றாக உணர்ந்திருந்தார்கள் நம் முன்னோர். `ஊருக்கு நல்லது செய்வோம்’ என்கிற நல்லெண்ணத்தில் மன்னன் முதல் நாட்டின் கடைக்கோடி மனிதன் வரை, நீரைச் சேமிக்கத் தங்களால் இயன்ற முயற்சிகளை எடுத்தார்கள். அதனால்தான் ஊருணிகள், ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் பெருகின. நீர் மேலாண்மையில் நம் முன்னோரை மிஞ்ச எவருமில்லை!

வீடுதோறும் கிணறு இருந்த காலம் ஒன்று இருந்தது. கிணற்றில் வாளியைப் போட்டு நீர் இறைத்துப் பயன்படுத்தும்போது ஒவ்வொரு துளியின் அருமையும் நமக்குத் தெரிந்திருந்தது. தண்ணீரை வீணாக்கக் கூடாது என்கிற உணர்வும் இருந்தது. அடி பம்பு வந்த பின், அதில் மூச்சிரைக்க அடித்துத் தண்ணீர் எடுத்தவர்கள் தேவைக்கு அதிகமாகத் தண்ணீரைப் பயன்படுத்தியதே இல்லை. போர் வெல் பயன்பாட்டுக்கு வந்தபிறகுதான், நீர் சேமிப்பின் முக்கியத்துவம் பற்றிய தெளிவை நாம் இழந்துவிட்டோம். இன்று ஒரு வாய் தண்ணீருக்காகத் தெருத் தெருவாகக் குடங்களைத் தூக்கிக்கொண்டு அலையும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது.

இயற்கை நமக்களிக்கும் மிகப்பெரும் கொடையே மழை. அதை முறையாகச் சேமிப்பதற்கான வசதிகளை அரசின் வற்புறுத்தலால் சில ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தினோம். ஆனால், அதை முறையாகப் பராமரிக்கத் தவறினோம். இன்னொருபுறம் வரைமுறையற்ற கட்டுமானங்கள், மழைநீரை பூமிக்கு அனுப்பாத வகையில் சிமென்டைக் கொட்டி சாலைகள், நடைபாதைகள்... இப்படிக் கட்டுப்பாடே இல்லாமல் போன காரணத்தால் நிலத்தடி நீர் இப்போது கானல் நீராகிவிட்டது.

தண்ணீர்ப்பஞ்சம் நம் குரல்வளையைப் பிடித்து இறுக்கும் இந்த நேரத்தில்கூட மழைநீரைச் சேமிக்கும் முறைக்கு நேரெதிராகவே நாம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். அதுபோலவே அரசாங்கமும் தன் பங்குக்குத் தவறிழைக்கிறது. முன்பெல்லாம் மழைநீர் பூமிக்குச் செல்லும் வகையில்தான் நடைபாதைகள் அமைக்கப்படும். ஆனால், பராமரிப்பது சிரமம் என்று சொல்லி மொத்த நடைபாதையையும் சிமென்டால் மெழுகுவது எவ்வளவு பெரிய கொடுமை? மழையைச் சேமிக்கக் கட்டமைப்புகளை ஏற்படுத்தவேண்டிய இந்த நேரத்தில் தப்பித்தவறிக்கூட மழைநீர் பூமிக்குள் சென்றுவிடக் கூடாது என்று பல ஆயிரம் கோடிகள் செலவுசெய்து மழைநீர் வடிகால் அமைத்துக்கொண்டிருக்கிறது அரசு. 

இரண்டு ஆண்டுகள் பருவ மழை பொய்த்தால், மழைநீர்ச் சேகரிப்பு குறித்துப் பேசுவதும், அதன்பின் மறப்பதும் நம் வாடிக்கை. இனியேனும் வீடுகளில் உள்ள மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பைச் சீர் செய்வோம். மழைநீர்ச் சேகரிப்புக்கு வழி செய்யாத வீடுகளில் அதைச் செய்ய முனைவோம். நீர்நிலை ஆக்கிரமிப்பு எங்கு நடந்தாலும், நமக்கென்ன என்று ஒதுங்கிப் போகாமல் கேள்வி கேட்போம். அருகிலுள்ள நீர்நிலைகளை நாமே முன்வந்து தூர்வாரி சுத்தம் செய்ய முயல்வோம். தனிநபராகச் செய்ய இயலாத காரியங்களை நிறைவேற்ற அமைப்புகளாகத் திரள்வோம். அரசுத் தரப்பில் குறைபாடு இருந்தாலும் தயங்காமல் கேள்வி எழுப்புவோம்.

பொருளாதாரத்தில் மட்டுமல்ல... தண்ணீர் விஷயத்திலும் சேமிப்பதுதான் எதிர்காலத்துக்கு நல்லது. இனியேனும் மழைத்துளிகள் பெருவெள்ளமாகி நம் தாகத்தைத் தணிக்கட்டும்!

நமக்குள்ளே...