தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

மனுஷி: என் மனசு சொல்றதைக் கேட்டு சந்தோஷமா வாழ்கிறேன்! - திருநங்கை ஷாக்‌ஷி

மனுஷி: என் மனசு சொல்றதைக் கேட்டு சந்தோஷமா வாழ்கிறேன்! - திருநங்கை ஷாக்‌ஷி
பிரீமியம் ஸ்டோரி
News
மனுஷி: என் மனசு சொல்றதைக் கேட்டு சந்தோஷமா வாழ்கிறேன்! - திருநங்கை ஷாக்‌ஷி

மனுஷி: என் மனசு சொல்றதைக் கேட்டு சந்தோஷமா வாழ்கிறேன்! - திருநங்கை ஷாக்‌ஷி

ண் குரலிலும் பெண் குரலிலும் மாற்றி மாற்றிப் பாடி மாஸ் காட்டுகிறார், சிங்கப்பூரைச் சேர்ந்த திருநங்கை ஷாக்‌ஷி. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘சிங்கிங் ஸ்டார்ஸ்’ நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்றிருப்பவரைச் சந்தித்தோம். 

‘`நான் பிறந்து, வளர்ந்தது எல்லாமே சிங்கப்பூரில்தான் என்றாலும் தமிழ் எனக்குப் பிடித்தமான மொழி’’ என அழகுத் தமிழில் பேசத் தொடங்கினார்.

‘`நான் திருநங்கையாக மாறினதால என் வாழ்க்கையே போச்சுன்னு சொல்ல மாட்டேன். எனக்கான வாழ்க்கையை நான் சந்தோஷமா வாழ ஆரம்பிச்சேன். என் பெற்றோர் என்னை ஒதுக்காமல் சப்போர்ட் பண்ணினாங்க. நான் எங்க பாட்டிகிட்டதான் பெரும்பாலும் வளர்ந்தேன். அவங்கதான் பல வாழ்க்கைப் பாடங்களை எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க.

நான் பொதுவா யார்கிட்டேயும் எதையும் பகிர்ந்துக்க மாட்டேன். என் குடும்பத்துல உள்ளவங்களுக்கு என்னைப் பத்தி ஒரு விஷயம் தெரியவந்தாலும், அதைப் பற்றி என்கிட்ட விசாரணை நடத்த மாட்டாங்க. அவங்க எப்பவும் என்கிட்ட சொல்ற ஒரே விஷயம்... `என்ன பண்ணினாலும் யோசிச்சு பண்ணு’ என்பதைத்தான்!

மனுஷி: என் மனசு சொல்றதைக் கேட்டு சந்தோஷமா வாழ்கிறேன்! - திருநங்கை ஷாக்‌ஷி

என்னை சில நேரங்களில் எனக்கே பிடிக்காது. சக திருநங்கைகளுக்கு அந்த உணர்வைப் புரிஞ்சுக்க முடியும். ஒரு கட்டத்துக்கு மேல நாம ஆணாக வாழப் போறோமா, பெண்ணாக வாழப் போறோமாங்கிற கேள்வி நம்மை ஏதோ செய்யும். என் 18 வயசுல அம்மா என்கிட்ட, ‘நீ யாரையும் ரோல் மாடலா நினைக்கத் தேவையில்லை, உன்னை நீயே ஒரு ரோல் மாடலா உருவாக்கு’னு சொன்னாங்க. என் 21 வயசுல, இனி நான் என்னவாக இருக்கப் போறேன்னு நானே தீர்மானிச்சேன். மனசு சொல்றதைக் கேட்டு சந்தோஷமா என்னுடைய வாழ்க்கையை வாழ்கிறேன்’’ என்கிறவரிடம் இரு குரலில் பாடுவது பற்றிக் கேட்டோம்.

‘`மாடலிங், ஷார்ட் ஃபிலிம், மியூசிக்னு பல துறைகளிலும் காலடி பதிச்சிடணும் என்பது என் ஆசை. மேடை பயம் போகணும்கிறதுக்காக, 14 வயசுல பையனா இருந்தப்போ ஸ்கூல்ல பாடினேன். அப்புறம் வீட்டில் சும்மா பாட ஆரம்பிச்சேன். நான் எப்படி இயல்பா ஆண் குரலில் பாடினேனோ, அதேமாதிரி பெண் குரலிலும் சுலபமா பாடவந்தது. அதை பதிவு பண்ணி சமூக வலைதளங்களில் பகிர்ந்தேன். நல்லா இருக்குன்னு பலரும் பாராட்டினாங்க. அப்படி என்னைப் பற்றித் தெரியவந்துதான், நண்பர் ஸ்டான்லி தொடர்புகொண்டு பேசினார். அவரும் இரு குரலில் பாடுறவர். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ‘StariDuo’ என்கிற பெயரில் பல பாடல்களைப் பாடி ஆல்பங்களை வெளியிட்டோம். இப்படிப் போயிட்டிருக்கும்போது, `நாம ஏன் ரியாலிட்டி ஷோவில் கலந்துக்கக் கூடாது’ன்னு தோணுச்சு. அதான், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ‘சிங்கிங் ஸ்டார்ஸ்’ நிகழ்ச்சியில் இப்போ போட்டியாளர்களாகி உங்களையெல்லாம் சந்திக்கிறோம். அப்புறம் ஒரு விஷயம்... இதுவரை நான் யார்கிட்டேயும் பாட்டு கத்துக்கிட்டதில்ல. எல்லாம் கேள்வி ஞானம்தான்.

நான் இப்படி எனக்குப் பிடிச்ச விஷயங்களைச் சந்தோஷமாகப் பண்ண முடியுறதுக்குக் காரணம், என் குடும்பத்தில் எல்லோரும் என்னை சக மனுஷியாகப் பார்க்கிறதாலதான். என் பாலினம் குறித்து அவங்க மனசில் எந்த சங்கடமும் கிடையாது. ஒரு தடவை ஒரு கல்யாண வீட்டுக்குக் கிளம்பிட்டிருந்தேன். அப்போ என் அம்மா என்கிட்ட, ‘இந்த டிரஸ்ல நீ ரொம்ப அழகா இருக்கே’னு சொன்னாங்க. அந்த நொடியை என் வாழ்க்கையில் மறக்க மாட்டேன். தன் திருநங்கைப் பிள்ளையை அம்மா இப்படித் தன் தாய்மையின் இயல்போடு ரசிக்கிற, நேசிக்கிற, கொண்டாடுற சூழல் இன்னும் பரவலாகணும்.

அடுத்து என்ன பண்ணப் போறோம்னு நான் எப்பவும் யோசிச்சது இல்ல. இன்றைக்கான வாழ்க்கையை சந்தோஷமா வாழணும்னு நினைக்கிறேன். என்னை மாதிரி இருக்கிற பலருக்கும் நான் சொல்ல நினைக்கிறது ஒரே ஒரு விஷயம்தான்... Just Be Yourself '' - வசீகரப் புன்னகையுடன் சொல்கிறார் ஷாக்‌ஷி!

-வெ.வித்யா காயத்ரி,  படம்: ப.சரவணகுமார்