
நினைவுகள்: மீண்டும் பள்ளிக்குப் போகலாம்!

மற்ற பள்ளிகளைவிட உங்கள் பள்ளி ஏன் ஸ்பெஷல்?
- மேகா ஆகாஷ், நடிகை
எங்க பள்ளியில் ஒவ்வொரு வருஷமும் ஏதாவது ஓர் ஊருக்குக் கூட்டிட்டுப் போவாங்க. சூப்பர் பிக்னிக் அது. அதேபோல `ஸ்போர்ட்ஸ் டே’ வருதுன்னா ஒரு வாரத்துக்கு முன்னாடியிருந்தே பாடம் நடத்த மாட்டாங்க. அந்த ஒரு வாரமும் களத்துல இறங்கி பிராக்டிஸ் பண்ணுவோம்.
எல்லாப் பள்ளியிலும் படிப்புக்குத் தான் முக்கியத்துவம் கொடுப்பாங்க. எங்க பள்ளியில் படிப்போடு விளையாட்டுக்கும் கேம்ப்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தாங்க. அதனாலதான், எங்க பள்ளி எப்பவுமே ரொம்ப ஸ்பெஷல்!

பள்ளியில் படித்த நண்பர்களுடன் இன்னும் தொடர்பில் இருக்கிறீர்களா?
-ஓவியா, சமூக ஆர்வலர்
வாழ்க்கையின் பெரும் பகுதியை ஒரே ஊரில் கழிப்பவர்களுக்குத்தான் தொடர்ந்து நட்பைத் தக்கவைத்துக் கொள்வது எளிதாக இருக்கும். எனக்கு அது சிரமமாகிவிட்டது. பணிகள், அலுவல்கள் காரணமாக, தொடர்ந்து யாருடனும் தொடர்பில் இருக்க முடியவில்லை. இருந்தாலும், தொலைக்காட்சிகளில் அவ்வப்போது வருவதால் என் தோழிகள் என்னை அடையாளம் கண்டு, தொலை பேசியில் பேசுவார்கள். அப்படி அவர்கள் பேசுவதைத்தான், என் வாழ்க்கையின் மிகச்சிறந்த பரிசாகக் கருதுகிறேன்.

பள்ளியில் நண்பர்களுடன் போட்ட மறக்க முடியாத சண்டை?
-நிர்மலா பெரியசாமி, அ.தி.மு.க தலைமைக் கழகப் பேச்சாளர்
நான் 10-ம் வகுப்பு படிக்கும்போது, வகுப்பில் கமல், ரஜினின்னு இரண்டு பிரிவுகள் இருந்தன. வளர்ந்த பிறகு நான் ரஜினிக்கு ரசிகை ஆகிவிட்டேன். பள்ளி வயதிலோ நான் தீவிர கமல் ரசிகை.
ஒருநாள் சில பிள்ளைகள், `கமல் உயரம் கம்மி’ என்று சொல்லித் திட்டிவிட்டு, `ரஜினிதான் உயரமானவரு... ஸ்டைல்லானவரு’ என்று பேசிக் கொண்டிருந்தார்கள். உடனே, கமல் ரசிகையான எனக்குக் கோபம் வர, சில பிள்ளைகளைச் சேர்த்துக்கொண்டு தீவிரமாகச் சண்டை போட்டேன். அந்தச் சண்டைக்குப் பிறகு மனசு கஷ்டமாகி, அந்தப் பிள்ளைகளோடு ரொம்ப நாள் பேசாமல் இருந்தேன். பிறகு, ஒருநாள் யதேச்சையாக மீண்டும் பேச ஆரம்பித்துவிட்டோம். அடிக்கடி, இந்தச் சண்டையை நினைத்துப்பார்ப்பேன்.செம சிரிப்பாக இருக்கும்!
-ப.தினேஷ்குமார்