தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

வாவ் டாக்டர்ஸ்: மாண்புமிகு மருத்துவர்கள்!

வாவ் டாக்டர்ஸ்: மாண்புமிகு மருத்துவர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
வாவ் டாக்டர்ஸ்: மாண்புமிகு மருத்துவர்கள்!

ஓவியங்கள்: பாலகிருஷ்ணன்

மருத்துவம் என்பது சேவை, தொழிலல்ல. இந்த உண்மையை உணர்ந்து, அதை வாழ்க்கையில் கடைப்பிடிக்கும் மருத்துவர்கள் கொண்டாடப்படுகிறார்கள்; மக்கள் மனதில் நீங்கா இடத்தையும் பிடித்துவிடுகிறார்கள். அப்படிப்பட்ட மருத்துவர்களில் பெண்களும் உண்டு. வாழ்க்கையில், பல பிரச்னைகளுக்கு மத்தியில், மருத்துவ சேவையை ஆத்மார்த்தமாகச் செய்துவரும் மூன்று மருத்துவர்கள் இங்கே...

ஓலா ஓர்கொன்ரின்

ஓலாவின் குடும்பத்தினருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. விடுமுறைக்காக நைஜீரியாவுக்கு வந்த இடத்தில் ஓலாவின் இளைய சகோதரிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. நைஜீரியாவின் அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்கான எந்த வசதியும் இல்லை. உடனே அங்கிருந்து அவசரமாக வேறு நல்ல மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும். சாலை வழியில் அது சாத்தியமில்லை.

வான் வழியில் சிறுமியை அழைத்துச் செல்வதுதான் தீர்வு. ‘ஏர் ஆம்புலன்ஸ் எங்கே கிடைக்கும்?’ நைஜீரியாவிலோ, அருகிலுள்ள கேமரூன், கானா, காங்கோ எங்குமே ஏர் ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை. தென்னாப்பிரிக்காவில் ஏர் ஆம்புலன்ஸ் இருக்கிறது. ஆனால், ‘அது வந்து சேர ஐந்து மணி நேரம் ஆகும்’ என்றார்கள். ‘அதை வரவழைக்கும் முயற்சியில் ஓலாவின் குடும்பத்தினர் ஈடுபட்டிருந்தபோது, அந்த 12 வயதுச் சிறுமி பரிதாபமாக இறந்துபோனாள்.

வாவ் டாக்டர்ஸ்: மாண்புமிகு மருத்துவர்கள்!

“இவ்வளவு கேவலமான மருத்துவ வசதிகளுடன்தான் என் நாடு இருக்கிறதா... எனில், மருத்துவ வசதிக்குறைவால் என் சகோதரியைப்போல தினமும் எத்தனை உயிரிழப்புகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன... இதற்கு ஒரு முடிவுகட்ட வேண்டும்” என்று நினைத்துக்கொண்டார் ஓலா.

ஓலா ஓர்கொன்ரின் நைஜீரியாவைச் சேர்ந்தவர். சிறு வயதிலேயே அவளையும் அவளின் சகோதரியையும் இங்கிலாந்தைச் சேர்ந்த டோரீன் என்ற பெண் தத்தெடுத்து வளர்த்தார். இங்கிலாந்தின் லோவெஸ்டாஃப்ட் என்ற கடற்கரை நகரத்தில்தான் ஓலா வளர்ந்தார். கல்வி பயின்றார். அந்தச் சூழலில்தான் ஓலாவின் இளைய சகோதரியின் இறப்பு நேர்ந்தது.

ஓலா, ஹல் யார்க் மெடிக்கல் ஸ்கூலில் மருத்துவத்தில் பட்டம் பெற்று, 21 வயதிலேயே `இங்கிலாந்தின் இளம் மருத்துவர்' என்ற பெருமையையும் பெற்றார். நேஷனல் ஹெல்த் சர்வீஸில் பத்தாண்டுகள் மருத்துவராகப் பணியாற்றினார். லட்சியத்துக்காகத் தன் சம்பளத்தில் 60 சதவிகிதம்வரை மிச்சம் பிடித்தார்.  ஹெலிகாப்டர் ஓட்டும் பயிற்சி எடுத்து பைலட் தகுதியை அடைந்தார். ஏர் ஆம்புலன்ஸ் குறித்தும், அதில் இருக்க வேண்டிய மருத்துவ வசதிகள், செய்ய வேண்டிய முதலுதவிகள், அவசர சிகிச்சைகள் அனைத்தையும் கற்றுக்கொண்டார்.

2007. ஓலா தன் தாய்நாடான நைஜீரியாவுக்குத் திரும்பினார். நைஜீரியாவின் லகோஸ் நகரில் முதல் ஏர் ஆம்புலன்ஸ் சேவை, ஓலாவால் ஆரம்பிக்கப்பட்டது. நிறுவனத்தின் பெயர், ‘ஃப்ளையிங் டாக்டர்ஸ்’. மேற்கு ஆப்பிரிக்காவின் முதல் ஏர் ஆம்புலன்ஸ் சேவை அதுதான். எங்கெல்லாம் எளிய மனிதர்களுக்கு ஏர் ஆம்புலன்ஸ் தேவைப்படுகிறதோ, அங்கெல்லாம் ஓலாவும் குழுவினரும் பறந்து செல்ல ஆரம்பித்தார்கள். உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

20 ஏர் ஆம்புலன்ஸ். 47 ஊழியர்கள். அதில் ஓலா உட்பட 44 பேர் மருத்துவர்கள். பெரும்பாலானோருக்கு விமானத்தை இயக்கவும் தெரியும். சாலை விபத்தா, சுரங்க விபத்தா, பெரிய கட்டடங்கள் கட்டும் பகுதியில் விபத்தா அல்லது எங்கேனும் குண்டு வெடித்துவிட்டதா? கால் சென்டர் மூலமாகக் கிடைக்கும் தகவலிலிருந்து,  ஏர் ஆம்புலன்ஸை அனுப்பிவைக்கிறார்கள்.

ஓலாவுக்கு, தன் தேசமான நைஜீரியாவை, மேற்கு ஆப்பிரிக்காவை, ஒட்டுமொத்த ஆப்பிரிக்கக் கண்டத்தை மருத்துவ வசதிகள் நிறைந்ததாக மாற்ற வேண்டும் என்ற பெருங்கனவு இருக்கிறது. ‘ஓலா’ என்ற சொல்லுக்கு நைஜீரிய மொழியான ‘யொரூபா’வில் செல்வம் என்று பொருள். ஆம், ஓலா, நைஜீரியாவின் செல்வம்தான்!

ஆலா லெவுஷ்கினா

ஒவ்வொரு நாளும் அதிகாலையிலேயே எழுந்துவிடுவார் டாக்டர் ஆலா லெவுஷ்கினா. செல்லப் பூனைகளுக்கு உணவுவைப்பார். ஜன்னல்களில் வைக்கப்பட்டிருக்கும் கிண்ணங்களில் பறவைகளுக்காக தானியங்களைக் கொட்டுவார். மிகச் சரியாக 8 மணிக்கெல்லாம் கிளினிக்குக்குச் சென்று விடுவார். நோயாளிகள் ஒவ்வொருவரையும் கனிவு குறையாது கவனிப்பார்.

இரண்டரை மணி நேரம் நோயாளிகளைப் பார்த்துவிட்டு, காலை 11 மணிக்கு தலையில் தொப்பி, கையில் உறைகளுடன், நோயாளிக்குரிய பரிசோதனை அறிக்கைகளையெல்லாம் சரிபார்த்துக்கொள்வார்.

டாக்டர் ஆலா சற்றே உயரம் குறைவானவர். நான்கு அடி ஒன்பது அங்குலம். எனவே, அவருக்கென ஆபரேஷன் டேபிளுக்கு அருகில் சிறிய மேடை தயாராக இருக்கும். அதில் ஏறி அறுவை சிகிச்சையை மேற்கொள்வார். ஒரு நாளுக்கு அதிகபட்சம் நான்கு அறுவை சிகிச்சைகள். ஒவ்வொன்றையும் எந்தப் பிரச்னையுமின்றிக் கச்சிதமாக முடிப்பார். ஒவ்வோர் அறுவை சிகிச்சைக்கான ரிப்போர்ட் களையும் தானே கைப்பட எழுதுவார்.

வாவ் டாக்டர்ஸ்: மாண்புமிகு மருத்துவர்கள்!

`சரி, இவையெல்லாம் ஒரு டாக்டருக்கான கடமைகள்தானே... இதில் பெருமையாகச் சொல்ல என்ன இருக்கிறது?’ இங்கே டாக்டர் ஆலாவின் வயதுதான் விஷயம். அவரது வயது 90. ரஷ்யாவில் வாழும் மிக வயதான பெண் மருத்துவர். உலகில் வாழும் மிக வயதான அறுவை சிகிச்சை நிபுணரும்கூட. இன்றைக்கும் டாக்டர் ஆலா, கைகள் நடுங்காமல் கத்தி பிடித்து, கச்சிதமாக அறுவை சிகிச்சைகள் செய்துகொண்டிருக்கிறார் என்பதுதான் சிறப்பே.

ரஷ்யாவில் மிகச் சாதாரணமான குடும்பத்தில் பிறந்தவர் ஆலா. பள்ளிப் படிப்பை முடித்த பின், புவியியலாளர் ஆக வேண்டும் என்ற எண்ணம்தான் ஆலாவுக்கு இருந்தது. அப்போது அவருக்கு மருத்துவத்துறை குறித்த நாவல் ஒன்று படிக்கக் கிடைத்தது. அதிலிருந்த கதாபாத்திரங்கள் பேசியவிதம், ஆலாவுக்குள் பெரும் மாற்றத்தை உண்டு பண்ணியது. கடுமையாக முயன்று மாஸ்கோ மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். சிரத்தையுடன் படித்தார். இன்னொரு பக்கம் குடும்பத்தின் வறுமையும் வாட்டியது.

பலரும் தேர்ந்தெடுக்கத் தயங்கும் மலக்குடலியல் துறையைத்தான் ஆலா தனக்கான துறையாகத் தேர்ந்தெடுத்து விரும்பிப் படித்தார். அப்போது ரஷ்யாவில் ஓரிரு மலக்குடலியல் நிபுணர்கள்தாம் இருந்தார்கள். ஆலா தன் சேவையைத் தொடங்கினார். தேசமெங்கும் பல்வேறு கிராமங்கள், சிற்றூர்களுக்கு மக்களைத் தேடிச் சென்று மருத்துவ சேவை செய்யும் குழுவுடன் இணைந்தார். சுமார் 30 ஆண்டுகள் ஆலாவின் பொது மருத்துவ சேவை தொடர்ந்தது. பிறகு தனது சொந்த ஊரான ரைஸானுக்குத் திரும்பினார். 68 ஆண்டுக்கால மருத்துவ வாழ்வில், ஆலா இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளைச் செய்திருக்கிறார். அவற்றில் ஒன்றுகூடத் தோல்வியில் முடிந்ததில்லை.

மருத்துவ சேவைக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதற்காக டாக்டர் ஆலா திருமணமே செய்துகொள்ளவில்லை. ஆலாவின் அர்ப்பணிப்பைக் கௌரவப்படுத்தும் விதத்தில் ரஷ்ய அரசு, `தேசத்தின் சிறந்த மருத்துவர்’ என்ற விருதை வழங்கியிருக்கிறது.  `எப்போது ஓய்வெடுக்கப் போகிறீர்கள்?’ என்று ஒரு நேர்முகத்தில் கேள்வி எழுப்பப்பட்டபோது டாக்டர் ஆலா பதிலுக்கு ஒரு கேள்வியை எழுப்பினார்... ‘அப்படியென்றால், நான் செய்யவேண்டிய அறுவை சிகிச்சைகளை யார் செய்வார்கள்?’

எலென் ஐன்டெர்ஸ்

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் பிறந்த `எலென் ஐன்டெர்ஸ்’ மருத்துவராகும் கனவுடன் வளரவில்லை. தன் வாழ்வின் திசையைத் தீர்மானிக்கும் தருணம் எலெனுக்கு அவரது 19-வது வயதில் நிகழ்ந்தது. 1974-ம் ஆண்டு, ஆப்பிரிக்காவின் நைஜர் பகுதியில் கடும் பஞ்சம்; அப்போது, `பீஸ் கார்ப்ஸ்’ என்ற அமெரிக்க சேவை அமைப்பின் தன்னார்வலராக எலென், நைஜருக்குச் சென்றார். ஆப்பிரிக்காவின் அலங்கோல முகம் எலெனுக்குப் புரிந்தது. தான் ஒரு மருத்துவராக இருந்தால், இந்த மக்களுக்கு இன்னும் அதிகமாக உதவலாம் என்பதை உணர்ந்துகொண்டார்.

வாவ் டாக்டர்ஸ்: மாண்புமிகு மருத்துவர்கள்!

எலென், கனடாவில் அமைந்திருக்கும் மெக்கில் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்க இணைந்தார். வெற்றிகரமாகப் படிப்பை முடித்தார். நைஜீரியாவின் மிஷன் மருத்துவமனையில் மருத்துவ சேவையைத் தொடங்கினார். ஆறு ஆண்டுகள் அங்கே பணியாற்றினார். ஆப்பிரிக்க மக்களைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொண்டார். அந்த மக்கள் எலெனை ஒரு தேவதையைப்போலவே பார்த்தனர். அதைவிட மோசமான ஒரு பகுதிக்குத் தன் மருத்துவ சேவை தேவைப்படுகிறது என்பதை எலென் உணர்ந்ததும், நைஜீரியாவை விட்டுக் கிளம்பினார். வந்து சேர்ந்த இடம், நைஜீரியாவின் வடகிழக்கு எல்லை மற்றும் கேமரூனின் வடக்கு எல்லையில் அமைந்திருக்கும் கோலோஃபாடா. காலரா அங்கே நிரந்தரமாகக் கடைவிரித்திருந்தது. மலேரியா தாண்டவ மாடிக்கொண்டிருந்தது. பாம்புக்கடியால் பலர் பாதிக்கப்பட்டுக்கொண்டிருந்தனர். ஒரு நோயாளிக்குப் பயன்படுத்திய ஊசியைத்தான், அடுத்த நோயாளிக்கும் பயன்படுத்தினார்கள். அதைச் சுடுநீரிலிட்டுத் தூய்மையாக்குவதுகூட இல்லை. எய்ட்ஸ் நோயாளிகளுக்குப் பஞ்சமே இல்லை. ஆரம்பத்தில் கோலோஃபாடா மக்கள், டாக்டர் எலெனை அந்நியமாகப் பார்த்தார்கள். எலெனின் அன்பான அணுகுமுறையும், கனிவான மருத்துவ சேவையும் அந்த மக்களை அவர் பக்கம் ஈர்த்தன. அடுத்த சில வருடங்களில் அந்த மக்களுக்கென மருத்துவமனை ஒன்றை உருவாக்கினார்.  மலேரியாவும் காலராவும் கட்டுக்குள் வந்தன. கோலோஃபாடா மக்களின் `காட்மதர்’ ஆக உயர்ந்தார் எலென்.

`போகோ ஹராம்’ என்பது நைஜீரிய இஸ்லாமியத் தீவிரவாத இயக்கம். இந்த அடிப்படைவாதிகளுக்கு, மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்களைக் கண்டாலே ஆகாது. எலென், போகோ ஹராமால் குறிவைக்கப்பட்டார். 2013-ம் ஆண்டில் `போகோ ஹராம்’ இயக்கத்தினர், வெளிநாட்டவர்கள் சிலரைக் கடத்தினர். எனவே, `நீங்கள் தயவுசெய்து இங்கிருந்து கிளம்பிவிடுங்கள்’ என்று எலெனைப் பலரும் வற்புறுத்தினார்கள்.  `நான் இங்கிருந்து கிளம்புவது, என்னுடன் பணிபுரியும் மற்றவர்களை அவமதிப்பது போன்றது’ என்று சொல்லிவிட்டு, தன் மருத்துவப் பணிகளைத் தொடர்ந்தார். 2014-ம் வருடம், டாக்டர் எலென், உடல் நலிவுற்ற தன் தந்தையைக் காண்பதற்காக கோலோஃபாடாவிலிருந்து கிளம்பினார். அமெரிக்காவின் இண்டியானாபோலீஸில் சில மாதங்கள் தந்தையுடன் தங்கினார். டாக்டர் எலெனைத் தேடிவந்த போகோ ஹராமினர், பலரைக் கடத்திச் சென்றனர். அவர்களில் 17 பேர் கொல்லப்பட்டனர். உடனே கோலோஃபாடாவுக்குத் திரும்ப வேண்டும் என்று எலென் துடித்தார். ஆனால், இயலவில்லை.

ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் எபோலாவின் தாக்குதல் தீவிரமாக இருந்ததால், அங்கே செல்லலாம் என்று முடிவெடுத்து, 2014-ம் ஆண்டு, நவம்பர் மாதம் லைபீரியா சென்றார். இப்போது அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள `மரியான் கன்ட்ரி பப்ளிக் ஹெல்த் டிபார்ட்மென்ட்’ சார்பில் அகதிகளுக்கான மறுவாழ்வு மையத்தில் மருத்துவராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

டாக்டர் எலென், தனது 24 வருட கோலோஃபாடா அனுபவங்களை, `லைஃப் அண்டு டெத் இன் கோலோஃபாடா’ என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். மீண்டும் எந்தத் தருணத்திலும் கோலோஃபாடாவுக்குச் செல்லத் தயாராக இருக்கிறார். ‘கடவுளின் கரங்கள்தாம் என் வாழ்க்கை முழுவதும் என்னைப் பிடித்து அழைத்துக்கொண்டு செல்கின்றன. அந்தக் கரங்களின் அன்பான பிணைப்பில் நான் உணர்வது ஒன்று மட்டுமே... நான் எங்கும் வீழ்ந்துவிட மாட்டேன்.’

சேவை தொடரட்டும்!

-முகில்

வாவ் டாக்டர்ஸ்: மாண்புமிகு மருத்துவர்கள்!