
வேலூர் சோகம்...
‘தீண்டாமை ஒரு பாவச்செயல்... தீண்டாமை ஒரு பெருங்குற்றம்... தீண்டாமை மனிதத் தன்மையற்ற செயல்’ இந்த வாசகங்கள், பாடப் புத்தகங்களின் முதல் பக்கத்தில் மட்டும்தான் இருக்கின்றன. மனிதர்களின் மனதில் இல்லை. சாதியின் அடிப்படையில் மனிதனை மனிதனே இழிவுப்படுத்திவரும் செயல்கள், இன்னமும் நடைமுறையில் இருக்கின்றன. இந்த நிலையில் வேலூரில், பட்டியல் இன மக்கள் கோயில் பகுதிக்குள் நுழையக் கூடாது என்பதற்காகத் தீண்டாமைச் சுவர் எழுப்பப்பட்டிருப்பதாகப் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டையில் உள்ள ஸ்ரீபடவேட்டம்மன் கோயிலின் பின்புறம் பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. கோயிலைச் சுற்றிலும் இந்தச் சமூகத்தினரைத் தவிர, வேறு சமூகத்தினர் யாருக்கும் வீடு கிடையாது. இவர்கள் காலங்காலமாகப் படவேட்டம்மன் கோயிலை ஒட்டிய பகுதியைத்தான் பாதையாகப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். தற்போது, இந்தப் பகுதிக்குள் புதிதாகச் சுவர் எழுப்பியிருக் கிறார்கள், கோயில் நிர்வாகத்தினர். இது, சாதிய வன்மத்துடன் எழுப்பப்பட்ட தீண்டாமைச் சுவர் எனக் குற்றம்சாட்டுகிறார்கள் பாதிக்கப்பட்ட மக்கள்.

இதுபற்றி நம்மிடம் பேசியவர்கள், “39 வருஷத்துக்கு முன்னாடி இந்த இடத்துல சின்னக் கோயில்தான் இருந்துச்சு. எம்.ஜி.ஆர் ஆட்சியில வீடு இல்லாமல் இருந்த எங்களுக்கு, இந்த இடத்தைக் கொடுத்தாங்க. நாங்க வீடுகளைக் கட்டிய பிறகு, கோயிலுக்கு ஓரமா இருந்த காலி இடம் வழியாத்தான் நடந்து சாலைக்குப் போவோம். அப்போ, லாரி உரிமையாளர்கள் சிலர் கோயிலைப் பராமரிச்சுக்கிட்டு இருந்தாங்க. அப்புறம், அவங்களே திருவிழா நடத்தினாங்க. கோயிலின் வருமானம் அதிகரிக்க ஆரம்பிச்சப் பிறகுதான் எங்களை இந்த வழியாக வரக்கூடாதுனு சொன்னாங்க. போன 2012-ம் வருஷம் கோயிலைச் சுத்தி மதில் சுவர் கட்டுனாங்க. அதை ராத்திரியோடு ராத்திரியா நாங்க இடிச்சிட்டோம்.
அப்போ, எங்களுக்கும் அவங்களுக்கும் மோதல் ஏற்பட்டு வன்முறையாகிடுச்சு. அப்போ, அவங்களுக்கு ஆதரவா செயல்பட்ட போலீஸ்காரங்க, எங்க சமூகத்தைச் சேர்ந்த பசங்கள கைது செஞ்சாங்க. எங்க மக்களைக் கடுமையாத் தாக்கினாங்க. அந்தப் பிரச்னையில, ‘இனிமே கோயில் பக்கத்துல தடுப்புச்சுவர் கட்டக்கூடாது’னு அதிகாரிகள் சொல்லியிருந் தாங்க. இப்போ, திரும்பவும் கோயிலுக்குப் பின்னாடி, 12 அடி உயரத்துக்குச் சுவர் எழுப்பியிருக்காங்க. இதுக்கு போலீஸும் ஆதரவா இருக்காங்க. தலித் அமைப்புகள், கம்யூனிஸ்ட் அமைப்புகள் எல்லாம் எங்களுக்காகப் போராட்டம் நடத்தியும் ஒரு பிரயோஜனமும் இல்ல. இந்தத் தீண்டாமைச் சுவரை இடிச்சிட்டு, மீண்டும் பாதையை ஏற்படுத்தித் தர அரசாங்கம் முயற்சி எடுக்கணும்” என்றனர், வேதனையுடன்.

கோயில் நிர்வாகிகளிடம் பேசியபோது, “தீண்டாமைச் சுவர் என்று சில அமைப்புகள்தான் பிரச்னையைத் தூண்டிவிடுகின்றன. கோயில் நிர்வாகக் குழுவில் பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். ஆரம்ப காலத்தில், அந்த மக்கள் அந்த இடத்தை நடந்து செல்வதற்கான பாதையாகப் பயன்படுத்தி யிருக்கலாம். ஆனாலும், சுவர் எழுப்பியிருக்கக் கூடிய இடம் கோயிலுக்குச் சொந்தமானதுதான். சாதியின் பெயரைச் சொல்லிச் சில அமைப்புகள் பணம் பறிக்கத் திட்டமிடுகிறார்கள். இதில் தீண்டாமை என்பதெல்லாம் கிடையாது” என்றனர்.
இந்த விவகாரம் குறித்து ராணிப்பேட்டை சப்-கலெக்டர் இளம்பகவத்திடம் பேசினோம். “சுவர் எழுப்பியுள்ள இடம், கோயிலுக்குச் சொந்தமான பட்டா நிலம்தான். ஆனாலும், பட்டியலினச் சமூக மக்கள் நீண்டகாலமாகக் கோயில் இடத்தைப் பாதையாகப் பயன்படுத்தி யிருக்கிறார்கள். இதனால் இரண்டு தரப்பிலும் முகாந்திரம் இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாகப் பட்டா நிலத்தைப் பாதையாகப் பயன்படுத்தி வந்ததற்கான ஆதாரத்துடன் அம்மக்கள் சிவில் கோர்ட்டை அணுகலாம். வேறு பாதையே இல்லையென்றால், அங்கிருக்கும் சூழ்நிலையைப் பொறுத்து கோயிலின் பட்டா நிலத்தைப் பாதையாக மாற்றுவதற்கான வாய்ப்பு உண்டு. அதேநேரத்தில், அருகிலேயே மாற்றுப் பாதை இருப்பதாகக் கோயில் நிர்வாகத்தினர் சொல்கிறார்கள். இரவு நேரங்களில் சிலைகள் உடைக்கப்பட்டதாகவும் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றதாகவும் கோயில் நிர்வாகிகள் புகார் சொல்கிறார்கள். ஆனால், அதற்கான ஆதாரங்களை அவர்கள் தரவில்லை. இந்தச் சுவர் விவகாரத்தில் இருதரப்பினரையும் சிவில் கோர்ட்டை அணுகச் சொல்லியிருக்கிறேன். நீதிமன்றத் தீர்ப்பு வரும்வரை சுவர் விவகாரத்தில் இரண்டு தரப்பினரும் பிரச்னை செய்யக்கூடாது என்று சொல்லியிருக்கிறேன்.
அதே நேரத்தில் நாங்கள் ஆய்வுசெய்த வரையில், பட்டியல் இன மக்கள் கோயிலுக்குள் செல்வதை யாரும் தடுத்ததாகத் தெரியவில்லை. இம்மக்களுக்கான வழிபாட்டு உரிமை மறுக்கப்படவில்லை என்பது தெரிகிறது. நேரடியாகத் தீண்டாமை இல்லாவிட்டாலும் மனதளவில் தீண்டாமை இருப்பதை, இந்தச் சுவர் உணர்த்துகிறது என்று பட்டியல் இன மக்கள் சொல்கிறார்கள். இருதரப்பினரும் நீதிமன்றத்தை அணுகித் தீர்ப்புபெறுகிற வரையில் சுவரில் எந்தக் கட்டுமான பணியையும் செய்யக்கூடாது என்று எச்சரித்திருக்கிறோம்” என்றார்.
நீதிமன்றம்தான் உண்மையை விசாரித்து, தீர்ப்பு வழங்க வேண்டும்!
ஜி.லோகேஸ்வரன், படங்கள்: ச.வெங்கடேசன்