
நடவடிக்கை எடுக்குமா அரசு?
தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் அரிக்கமேடு வரலாற்றுத் துறைமுகத்தில், சட்டவிரோதமாக மணல் திருடும் கும்பல்கள், அங்கிருக்கும் தொல்பொருள்களையும் திருடி வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்வதாகப் புகார் கிளம்பியிருக்கிறது. இது வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியில், வங்கக் கடலையொட்டி, மண்ணுக்குள் புதைந்து கிடக்கிறது, அரிக்கமேடு வரலாற்றுத் துறைமுகம். சுமார் 2,500 வருடங்கள் பழைமையானதாகக் கருதப்படும் இந்தத் துறைமுக நகரத்தில், ரோமானியப் பேரரசர் அகஸ்டஸ் உருவம் பொறித்த தங்க நாணயங்கள் கண்டெடுக்கப் பட்டிருக்கின்றன. இதன் மூலம் இந்தப் பகுதி, சோழர்களுக்கும் யவனர்களுக்கும் இடையேயான மிகப் பெரிய வாணிப மையமாக விளங்கியிருக்கிறது என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள், வரலாற்று ஆய்வாளர்கள். தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த வரலாற்றுச் சின்னம் தற்போது, சமூக விரோதிகளின் கூடாரமாகவும் திறந்தவெளி மது பார் ஆகவும் உருவெடுத்திருப்பதுதான் வேதனை. அத்துடன், சட்டவிரோதமாக நடக்கும் மணல் திருட்டால் சிதைந்துகொண்டிருக்கிறது, இந்தப் பகுதி.

அரிக்கமேடு பகுதியைச் சுற்றி சுமார் 21 ஏக்கர் நிலப்பரப்பைக் கையகப்படுத்திக் கம்பி வேலி அமைத்திருக்கிறது, தொல்லியல் துறை. அகழ்வாராய்ச்சி மூலம் இங்கு கண்டெடுக்கப் பட்ட சுடுமண் சிற்பங்கள், உறை கிணறுகள், ‘தமிழி’ எழுத்துகள் பொறித்த ஓடுகள், செங்கல் சுவர்கள், ஈமத் தாழிகள், உருக்குமணிகள் போன்ற வரலாற்றுப் பொக்கிஷங்கள் இந்தப் பகுதி முழுவதும் கொட்டிக்கிடக்கின்றன. இந்த நிலப்பகுதியில் நம் கை விரல்களால் சுரண்டி னாலே, உருக்கு மணிகளும் சுடுமண் ஓடுகளும் கிடைக்கும். மணலுடன் இவற்றையும் சேர்த்து சமூக விரோதக் கும்பல்கள் களவாடுகின்றன என்று வந்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்றோம்.
தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிக்குள் நுழைந்ததுமே, அங்கு மது அருந்திக்கொண்டிருந்த சிலர், “இங்க சுத்திப் பார்க்கிறதுக்கெல்லாம் எதுவும் இல்ல. இங்க 3,000 வருஷம் பழைமையான கலர் மணிகள் இருக்கின் றன. 20 மணிகள் 1,000 ரூபாய். அந்தக் காலத்து மண் பானை ஓடு வேணும்னா 500 ரூபாய்” என்று சொல்லிச் சில மணிகளை நம்மிடம் காட்டினர். அவர்களைக் கடந்து மணல் திருட்டு நடக்கும் ஆற்றையொட்டிய பகுதிக்குச் சென்றோம். அங்கு, 20 அடி முதல் 30 அடி ஆழம் வரை மணல் எடுக் கப்பட்டிருந்தது. சுடுமண் ஓடுகளும் செங்கற்களும் சிதைந்த நிலையில் சிதறிக் கிடந்தன. மணல் எடுக்கும் பகுதிக்கு டயர் வண்டிகள் செல்வதற்கு வசதியாக அலை யாத்திக் காடுகளை அழித்துப் பாதை அமைக்கப் பட்டிருந்தது. கடந்த 2004-ம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமிப் பேரழிவுக்குப் பிறகு, புதுச்சேரி அரசால் உருவாக்கப்பட்டவை, இந்த அலையாத்திக் காடுகள்.
அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலரிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசினோம். “பகலில் பிரச்னை வரும் என்ப தால், இரவில்தான் மணலைத் திருடுகிறார் கள். ஒரு நாளைக்குச் சுமார் 30 வண்டி களில் மணல் அள்ளப்படுகிறது. டயர் வண்டியில் ஒரு லோடு மணல் 6,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மத்திய அரசின் கட்டுப்பாடு துறையின்கீழ் இருக்கும் இடத்தில் மணலைத் திருடுவதுடன், அதை அங்கேயே வைத்துத் தைரியமாகச் சலித்தும் விற்பனை செய்கிறார்கள். மணல் அள்ளும்போது கிடைக்கிற முதுமக்கள் தாழி, சுடுமண் ஓடுகள், சிற்பங்கள், நாணயங்கள் உள்ளிட்ட தொல்பொருள் களையும் வெளிநாட்டவர் களுக்கு விற்பனை செய்கிறார்கள். ஒரு லோடுக்கு 1,000 ரூபாய் எனப் போலீஸுக்கு லஞ்சம் கொடுத்துவிடுவதால், அவர்களும் மணல் திருட்டைக் கண்டுகொள்வதில்லை” என்றனர்.

“இந்தச் சமூக விரோதக் கும்பல்களுக்கு இடையே நடக்கும் கோஷ்டிப் பூசலால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. சில நாள்களுக்கு முன் மணல் திருடுவதில் ஏற்பட்ட பிரச்னையில் ஒருவரைக் கத்தியால் வெட்டிக் கொல்ல முயற்சி செய்தனர். மணல் திருடும் ரவுடிகளுடன் காவல்துறையினரும் கைகோத்திருப்பதால், பொதுமக்கள் புகார் கொடுக் கக்கூடப் பயப்படுகின்றனர். ரவுடிகள் அரிக்கமேடு பகுதியிலேயே இரவும் பகலும் தங்கி மது அருந்திக் கொண்டிருப்பதால் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி களும் வரத் தயங்குகிறார்கள். அரிக்கமேடு முகப்புப் பகுதியில் 24 மணி நேரப் புறக்காவல் நிலையம் ஒன்றை அமைக்க வேண்டும். சி.சி.டி.வி கேமரா பொருத்திக் கண்காணித்து குற்றங்களைத் தடுக்க வேண்டும்” என்கிறார், திராவிடர் விடுதலைக் கழகத்தின் புதுச்சேரி தலைவர் லோகு ஐயப்பன்.
இயற்கையைக் கூறுபோட்டுக் கொள்ளை யடிக்கும் சமூக விரோதிகள்மீதும் அவர்களுக்குத் துணை போகும் காவல்துறையினர்மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை!
- ஜெ.முருகன்
படங்கள்: அ.குரூஸ்தனம்