சினிமா
தொடர்கள்
Published:Updated:

“நதிகளுடன் மக்களை இணைக்கவேண்டும்!”

“நதிகளுடன் மக்களை இணைக்கவேண்டும்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“நதிகளுடன் மக்களை இணைக்கவேண்டும்!”

“நதிகளுடன் மக்களை இணைக்கவேண்டும்!”

சென்னையின் வறட்சி, காவிரிப் பிரச்னை, கூடங்குளம் அணுக்கழிவு, காவிரிப்படுகையின் ஹைட்ரோ கார்பன் சிக்கல்கள், எனத் தமிழகம் தற்போது சந்தித்துக்கொண்டிருக்கும் சூழலியல் பிரச்னைகளுக்கு நடுவே மேதா பட்கரின் பேட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. நர்மதா நதி மீட்புக் கூட்டமைப்பின் தலைவர்.  முக்கிய அலுவலாகத் தமிழகம் வந்திருந்தவரிடம் ரயில் பயணத்தில் எடுத்த பேட்டியிலிருந்து… (பயணக்களைப்பில் இருந்தவர் குடிக்க நீர் இருக்கிறதா எனக் கேட்டதும் பாட்டில் நீரை நீட்டினேன். `இது நீரா?’ என்று சிரித்தபடியே மறுத்துவிட்டு நீர் அருந்தாமலேயே பேச அமர்கிறார். பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்கப்படும் நீரை அருந்தக்கூடாது என்பது மேதா பட்கரின் கறாரான நிலைப்பாடு)

“நதிகளுடன் மக்களை இணைக்கவேண்டும்!”

 ‘‘சென்னையின் வறட்சி குறித்து அறிந்திருப்பீர்கள். அதற்கான தீர்வுதான் என்ன?’’

‘‘சென்னைக்கு இந்தத் தட்டுப்பாடு புதிதல்ல. நீர் மேலாண்மை பரவலாகாத சூழலில் குழாய் நீரைத்தான் நம்பியிருக்க வேண்டும். ஆனால் ஏரி போன்ற நீர்த்தேக்கங்களில் நீர் இருந்தால்தானே குழாய்களில் நீர் வரும்! ஏரிகளைக் கல்லூரிகள், அடுக்குமாடிகள் எனப் பெரிய பெரிய கட்டடங்கள் ஆக்கிரமித்துள்ளன. ஆனால் அரசு அவற்றை அப்புறப்படுத்தாமல் ஏரிக்கரையோரம் இருக்கும் குடிசைகளை ஆக்கிரமிப்புகள் என்கிற பெயரில் அகற்றிக் கொண்டிருக்கிறது.’’

 ‘‘கடல்நீரைக் குடிநீராக்குவதால் முழுத் தீர்வு கிடைக்காதா?’’

‘‘உப்புநீரைக் குடிநீராக்குவதைச் சிறிய அளவில் செயல்படுத்தலாம். ஆனால் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் என்பது நதிகளைத் துடைத்து எடுத்தது போல கடலையும் அடிமட்டம் வரை காலி செய்வதற்கான வழி. அண்மையில் குஜராத் அரசுகூட இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடிவெடுத்து, பின்னர் அதிலிருக்கும் சில தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகக் கைவிட்டது. கடலுக்குச் செல்லும் நதிகள் எதிலும் தற்போது நீரில்லை. மணற்கொள்ளை நதிகளைச் சின்னாபின்னப்படுத்திவிட்டது’’

‘‘நதிகளை இணைப்பது நாட்டின் நீர் ஆதாரங்களை வலுப்படுத்தும் எனக் கூறப்படுகிறதே?’’

‘‘நதிகளை இணைப்பது தீர்வில்லை. பிரம்மபுத்திரா-கங்கை-காவிரி நதிகளை இணைக்க வேண்டும் என்று தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பாருங்கள்... பிரம்மபுத்திராவிலேயே தற்போது அணைகட்டத் தொடங்கியிருக்கிறது சீனா. இந்தச் சமயத்தில் நாம் நதிநீரை இணைப்பதைச் செயல்படுத்தினால் அது சர்வதேசச் சிக்கலாக உருவெடுக்கும். பிரம்மபுத்திராவையும் கங்கையையும் இணைக்கத் திட்டமிட்டால் அது வடகிழக்கு இந்தியாவிற்கும் வட இந்தியாவிற்கும் இடையே பிரச்னையை ஏற்படுத்தும். நர்மதா, காவிரி, கோதாவரி என நதிநீர் உரிமைக்கான சண்டை என்பது உள்நாட்டிலும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இப்போதுகூட நர்மதா நதி விவகாரத்தில் மத்தியப்பிரதேச காங்கிரஸ் அரசு, குஜராத் அரசின் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் தாவா சட்டம் 1956 மாநில அரசுகளின் அழுத்தத்தால் இன்னும் நிறை வேற்றப்படாமலேயே இருக்கிறது. முதலில் இதற்கெல்லாம் தீர்வுகாண வேண்டும்’’

 ‘‘அரசு ‘ஜல் சக்தி’ என்னும் தண்ணீருக்கான தனி அமைச்சகத்தையே உருவாக்கியிருக்கிறதே?’’

‘‘சாகார்மாலா, விழிஞ்சம் துறைமுகக் கட்டுமானம் உள்ளிட்ட திட்டங்கள் தென்னிந்தியக் கரையோரப் பகுதிகளைச் சூறையாடவிருக்கின்றன. ஹைட்ரோகார்பன் நிலத்தடி நீரைக் கபளீகரம் செய்கிறது. அரசு அறிவிக்கும் எந்த வளர்ச்சித் திட்டத்தையும் முதலில் சிறிய அளவில் செயல்படுத்திப் பார்க்க வேண்டும். ஆனால் கார்ப்போ ரேட்களைக் கவர்வதற்காக தொடக்கத்திலேயே பல கோடி முதலீட்டில் ‘மெகா’ புராஜெக்ட்டு களாகத்தான் அரசு அறிவிக்கிறது. அத்தனை மெகா புராஜெக்ட்டுகளும் இறுதியில் பாதிப்பது இந்த தேசத்தின் நீரைத்தான். ஒருபக்கம் சர்வதேசக் காலநிலை மாற்ற மாநாட்டில் நமது அரசு கலந்துகொள்கிறது. மறுபக்கம் இப்படி. நீரின் ஆற்றலை உணராதவர்கள் ‘ஜல் சக்தி’ எனப் பெயர் வைப்பதில் மட்டும் என்ன நடந்துவிடப் போகிறது... மகாராஷ்டிராவின் லாத்தூர் நகரத்தைச் சுற்றியுள்ள மூன்று அணைகளிலும் ஒருகாலத்தில் நீர் நிரம்பி நின்றது, தற்போது டெல்லியிலிருந்து ரயிலில் தனக்கான நீரை வரவழைத்துக் கொண்டிருக்கிறது அரசு. நதிகளை இணைப்பதற்குப் பதிலாக நதிகளுடன் மக்களை இணைக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்துக்கு உள்ளேயும் கிராமப்பஞ்சாயத்து தொடங்கி, இருக்கும் சிறுசிறு நீர்த் தேக்கங்கள் மக்கள் பராமரிப்பில் விடப்பட வேண்டும்.’’

 ‘‘சூழலியல் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து எதிர்ப்புகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். முகிலன் விவகாரம் குறித்துக் கேள்வியுற்றிருப்பீர்கள்..!’’

‘‘முகிலனுக்கு நடந்தது குறித்து சென்னை வந்ததும் அறிந்துகொண்டேன். மிகவும் அச்சுறுத்தக்கூடியதாக இருக்கிறது. இந்த ஆட்சியில் செயற்பாட்டாளர்கள் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருப்பதைத் தவிர தங்களை எதிரிகளிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள வேறு வழியில்லை.’’

 ‘‘தேர்தலுக்கு முன்பு பாரதிய ஜனதாவைத் தீவிரமாக எதிர்த்தீர்கள். அடுத்த ஐந்தாண்டுகள் அவர்கள்தான் ஆட்சியில் என்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘‘பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கை, வன்முறைகளையும் பசுக்காவலர்களின் கொடூரங்களையும் பற்றிக் குறிப்பிடவில்லை. கடந்த ஐந்தாண்டுகளில் தேசம் அமைதிப்பூங்காவாக இருந்தது போன்ற பாவனை அதில் இருந்தது. இதுநாள் வரை இங்கே சாதி மத அரசியல் வன்முறைகள் இல்லாமல் இல்லை. ஆனால் அவை எதுவும் இத்தனை வெளிப்படை யாக நிகழவில்லை.  வன்முறைகளுக்கான தீர்வுகள் பற்றிப் பேசாமல் வெறும் வளர்ச்சித் திட்டங்களால் மட்டும் தேசத்தை எப்படிக் கட்டமைக்க முடியும்?’’

 ‘‘அரசின் குடியுரிமை மசோதாவை நீங்கள் தீவிரமாக எதிர்ப்பது ஏன்?’’

‘‘மதத்தின் பெயரால் குடிமக்களைப் பிரிப்பதும் அதை அரசாங்கமே செய்வதும் தவறு. அசாம் மற்றும் மேற்கு வங்காளத்தில் மக்களுக்கு நடுவே ஏற்கெனவே இருக்கும் பிரச்னையை இதில் தனக்குச் சாதகமாக அரசு பயன்படுத்திக் கொள்கிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று அரசு திட்டமிட்டுக்கொண்டிருக்கும் நிலையில் இந்தக் குடியுரிமை மசோதா அவர்களது வாக்கு வங்கிக்குச் சாதகமாக இருக்கும்.’’

 ‘‘வாக்கு இயந்திரக் குளறுபடிகள் உண்மை என நம்புகிறீர்களா?’’

‘‘இன்றளவும் தேர்தலில் வாக்குச்சீட்டுகளை மட்டுமே பயன்படுத்திவரும் நாடுகள் ஒன்றும் முட்டாள் இல்லையே. மின்னணு வாக்கு இயந்திரங்களில் குளறுபடி இருப்பது உண்மை. அது தொடர்பான புகார் முதன்முதலில் என்னிடம்தான் வந்தது. வாக்கு இயந்திரத்தில் பதிவு செய்யப்படும் வாக்குகளை சில மணித்துளிகளில் மாற்ற முடியும். தேர்தல் அதிகாரி ஒருவரே அதை எனக்குச் செய்து காண்பித்தார்.’’

‘‘மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா இந்த முறையாவது நிறைவேற்றப்படுமா... இல்லையென்றால் செயற்பாட்டாளர்கள் என்ன செய்வதாக உத்தேசம்?’’

‘‘நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால் அதிலும் உள் இட ஒதுக்கீடு வேண்டும் எனச் சில கட்சிகள் கூறி வருவதால் தாமதமாகிறது. முதலில் பெண்களுக்கு என்று ஒதுக்கட்டும். முதல்படியை எடுத்துவைக்கட்டும். பெண்களின் கையில் நிர்வாகம் எப்படி இருக்கிறது என்று பார்த்த பிறகு அடுத்தகட்ட நகர்வை மேற்கொள்ளலாம்.’’

- ஐஷ்வர்யா; படம்: தே.தீட்ஷித்;