சினிமா
தொடர்கள்
Published:Updated:

ஆணவக்கொலையும் அடிப்படைவாதமும் அவமானங்கள்!

ஆணவக்கொலையும் அடிப்படைவாதமும் அவமானங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆணவக்கொலையும் அடிப்படைவாதமும் அவமானங்கள்!

ஆணவக்கொலையும் அடிப்படைவாதமும் அவமானங்கள்!

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை எரிச்சலூட்டுவதற்காக, அந்த மாநில பா.ஜ.க-வினர் அடிக்கடி எழுப்பும் முழக்கம் ‘ஜெய்ஸ்ரீராம்.’ தமிழக எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் ‘தமிழ் வாழ்க’, ‘திராவிடம் வெல்க’, ‘அம்பேத்கர் வாழ்க’, ‘பெரியார் வாழ்க’, ‘மார்க்சியம் வெல்க’ என்று முழங்கிப் பதவியேற்றபோது, அதை எதிர்கொள்வதற்கு பா.ஜ.க-வினர்  எழுப்பிய முழக்கமும் ‘ஜெய்ஸ்ரீராம்’தான். ஒருவருக்கு ‘பெரியார் வாழ்க’ என்று சொல்வதற்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதேபோல் இன்னொருவருக்கு ‘ஜெய்ஸ்ரீராம்’ முழக்கம் எழுப்ப உரிமையிருக்கிறது. தனது அரசியல் நிலைபாட்டுக்கு ஏற்றபடி, தனது மதநம்பிக்கைக்கு ஏற்றபடி ஒருவர் ‘ஜெய்ஸ்ரீராம்’ என்று முழக்கம் எழுப்பினால் அது உரிமை. ஆனால் அதே ‘ஜெய்ஸ்ரீராம்’ முழக்கத்தை மற்றவர்களும் எழுப்பவேண்டும் என்று கட்டாயப்படுத்தி வன்முறையைக் கையிலெடுத்தால் அதன் பெயர் பாசிசம். ஜார்க்கண்டில் அதுதான் நடந்திருக்கிறது.

ஜார்க்கண்ட் மாநிலம் கர்ஸ்வான் மாவட்டத்தில் தப்ரீஸ் அன்சாரி என்ற இளைஞரை இருசக்கர வாகனம் திருட வந்ததாக ஒரு கும்பல் சுற்றி வளைத்தது. பிறகு அவரை ‘ஜெய்ஸ்ரீராம்’, ‘ஜெய் ஹனுமான்’ முழக்கங்களை எழுப்பச் சொல்லி அடித்துத் துன்புறுத்தியது. பலமணிநேரம் நடந்த இந்த சித்ரவதைக்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்சாரி இறந்துபோனார்.  மேற்குவங்கம், டெல்லி என்று சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள் ‘ஜெய்ஸ்ரீராம்’ முழக்கம் எழுப்பச் சொல்லித் தாக்கப்படுவது தொடர்கிறது.

ஆணவக்கொலையும் அடிப்படைவாதமும் அவமானங்கள்!

கடந்த மோடி ஆட்சியில் உத்தரப்பிரதேசத்தில் முகமது அக்லக் என்ற முதியவர் மாட்டுக்கறி வைத்திருந்ததாக ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். நாடு முழுவதும் ‘பசுப்பாதுகாப்பு’ என்ற பெயரில் சிலர் சட்டத்தைக் கையிலெடுத்துக்கொண்டு தாக்குதல் நடத்துவதும் வெறுப்புக்குற்றங்களை மேற்கொள்வதும் கடந்த ஐந்தாண்டுகளில் அதிகரித்திருப்பதை திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி  மஹுவா மொய்த்ரா சமீபத்தில் சுட்டிக்காட்டிப் பேசியது குறிப்பிடத்தக்கது.

கடந்தகால பா.ஜ.க அரசின்மீது எத்தனையோ விமர்சனங்கள் வைக்கப்பட்டபோதும் அதைத்தாண்டி மோடி அமோக வெற்றி பெற்றிருக்கிறார். இத்தனைக்கும் தமிழகம், ஆந்திரா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் பா.ஜ.க ஓரிடத்தில்கூட வெற்றிபெறவில்லை. மூன்றுமாநிலங்களால் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிப்பட்ட கட்சிதான் இந்தியாவின் ஆளுங்கட்சி; நிராகரிக்கப்பட்டவர்தான் இந்தியாவின் பிரதமர் என்பது இந்தியத் தேர்தல் அமைப்பின் விநோதம். ஆனால் மோடி பதவியேற்ற முதலுரையிலேயே ‘எதிர்க்கட்சிகள் தங்கள் எம்.பி-களின் எண்ணிக்கையைப் பற்றிக் கவலைப்படாமல் தங்கள் கருத்துகளை அழுத்தமாக முன்வைக்க வேண்டும்’ என்றும் தங்களுக்கு வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தப்போவதாகவும் கூறினார். அந்த வார்த்தைகள் உண்மையானவை என்பதை மோடி நிரூபிப்பதற்கான தருணமிது. பசுப்பாதுகாப்பு என்ற பெயரில் கும்பல் கொலைகள் நடப்பதைத் தடுப்பதற்காக மகாராஷ்டிரா அரசு தனிச் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. இதுபோன்ற சட்டத்தைத் தேசிய அளவில் கொண்டுவருவதும் மதத்தின் பெயரில் வன்முறையை மேற்கொள்ளும் அடிப்படைவாதக் குழுக்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதும்தான் மோடி தன் வார்த்தைகள் உண்மையானவை என்பதை நிரூபிப்பதற்கான வாய்ப்பு.

ஆணவக்கொலையும் அடிப்படைவாதமும் அவமானங்கள்!

அடுத்தவரின் உரிமையில் தலையிடுவதில் அடிப்படைவாதத்துக்கு மதவித்தியாசம் கிடையாது என்பதை நிரூபித்துள்ளனர் முஸ்லிம் மதவாதிகளும். திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி-யும் மேற்குவங்க நடிகையுமான நஸ்ரத் ஜகான், நிகில் ஜெயின் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். இஸ்லாமியப் பெண்ணான நஸ்ரத், தாலி அணிந்திருந்தார், குங்குமம் அணிந்திருந்தார், நாடாளுமன்றத்தில் பதவியேற்றபோது ‘வந்தே மாதரம்’ சொன்னார் என்பதற்காக அவருக்கு ‘மதக்கட்டளை’ விதித்துள்ளனர் முஸ்லிம் மதவாதிகள். ஒருவர் ‘ஜெய்ஸ்ரீராம்’ சொல்ல வேண்டும் என்று நிர்பந்திப்பது எப்படி பாசிசமோ, அதேபோல் ஒருவர் ‘வந்தேமாதரம்’ சொல்லக்கூடாது என்று நிர்பந்திப்பதும் பாசிசம்தான்.

தப்ரீஸ் அன்சாரியின் கொலை இந்தியாவை அதிரவைத்தது என்றால், மேட்டுப்பாளையத்தில் நடந்த ஆணவக்கொலை தமிழகத்தை அதிர வைத்திருக்க வேண்டும். எப்போதாவது ஓர் ஆணவக்கொலை நடந்தால் அதிர்ச்சியடையலாம். ஆனால், ஆண்டுக்கு மூன்று ஆணவக்கொலை களாவது நடக்கின்றன என்றால் அதிர்ச்சி யடைவதைவிட அவமானம் அடைவதுதான் மானுடப்பண்பு.

ஆணவக்கொலையும் அடிப்படைவாதமும் அவமானங்கள்!

கனகராஜ், வர்ஷினி பிரியா என்ற இரண்டுவெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் காதலித்ததற்காக, கனகராஜை அவரின் சகோதரர் வினோத்குமார் கொலை செய்தார். தடுக்கவந்த வர்ஷினி பிரியா, காயங்களுடன் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிலநாள்களில் இறந்து போனார். இத்தனைக்கும் இரண்டு குடும்பங்களுக்கும் இடையில் பொருளாதார ரீதியில் பெரிய அளவு வித்தியாசமில்லை. வர்ஷினிபிரியாவின் தாய் துப்புரவுத்தொழிலாளி. கனகராஜும் வினோத்குமாரும் மூட்டை தூக்கும் தொழி லாளிகள். வர்க்கத்தைத் தாண்டி சாதியுணர்வு எவ்வளவு ஆழமாக ஊடுரு வியிருக்கிறது என்பதும் அது கொலைவெறியாக மாறுகிறது என்பதும் இங்கு கவனிக்கத்தக்க அம்சம்.

1916ஆம் ஆண்டு வெளியானது அம்பேத்கரின் முதல் புத்தகமான ‘இந்தியாவில் சாதிகள்.’ ஒரே சாதிக்குள் திருமணம் செய்வதன்மூலமே சாதிமுறை காப்பாற்றப் படுகிறது என்றும், பெண்கள் வேறு சாதியில் திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்பதற்காகவே குழந்தைத் திருமணம், விதவைகள் கொடுமை, சதி என்னும் உடன்கட்டை ஆகியவை ஏற்படுத்தப்பட்டன என்றும் ஆய்வுபூர்வமாக விளக்கி யிருப்பார் அம்பேத்கர். இப்போது ஆணவக் கொலைகள் அதன் இன்னொரு வடிவம். சமீபத்தில் ஒரு பிரபல கர்னாடக இசைக்கலைஞரின் மகள் வெளிநாட்டவரான கிறிஸ்தவரை மணந்தது சமூகவலைதளத்தில் பேசுபொருளானது. அதுபற்றி எழுதிய ஒருவர், ‘மீண்டும் பால்யவிவாகத்தைக் கொண்டுவர வேண்டும்’ என்று எழுதியதும் அதை வரவேற்றுப் பலர் கருத்து தெரிவித்ததும் ‘நாமெல்லாம் எந்தக் காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்’ என்று சிந்திக்கவைத்தது.  சாதியைக் காப்பாற்றக் குழந்தைத் திருமணத்தை ஆதரிப்பதும் ஆணவக் கொலைக்கான மனநிலையும் ஒன்றுதான். அம்பேத்கர் புத்தகம் வெளியாகி நூறு ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் சாதிவெறி பிடித்த இந்திய மனம், ஓர் அங்குலம்கூட நகரவில்லை.

ஆணவக்கொலையும் அடிப்படைவாதமும் அவமானங்கள்!

ஒருபுறம் ‘ஒரேநாடு ஒரே வரி’, ‘ஒரே நாடு ஒரே தேர்வு’, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’, ‘ஒரே நேஷன் ஒரே ரேஷன்’ என்கிறது மத்திய அரசு. ஆனால் ஒரே நாட்டில் இருப்ப வர்கள் சாதிவெறியாலும் மத அடிப்படைவாதத்தாலும் தனித் தனித் தீவுகளாக இருக்கிறார்கள். இந்தித் திணிப்பை எதிர்ப்பதற்காகத் தமிழர்கள் ஒன்றுபட வேண்டும் என்று அறைகூவல் விடுக்கப்படு கிறது. ஆனால் தமிழர்களோ தங்கள் சாதியைக் காப்பாற்ற சகோதரர்களையும் மகன்களையும் மகள்களையும் கொலைசெய்யத் தயங்குவதில்லை.

திருமணம் என்பது இரண்டு தனிநபர்கள் தீர்மானிக்கவேண்டிய விஷயம், அதில் தலையிட அடுத்தவருக்கு உரிமையில்லை என்ற எளிய உண்மையைக்கூட நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், நாம் ‘மனிதர்கள்’ என்ற வார்த்தைக்கே தகுதியிழந்தவர்கள். பிறகென்ன தமிழர்கள், இந்தியர்கள்?

- சுகுணா திவாகர்