உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஜாமீன் வழங்கியதையடுத்து மதுரை மத்திய சிறையிலிருந்து நிர்மலா தேவி வெளியே வந்தார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை தவறான பாதைக்கு வழிகாட்டியதாகக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து, சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி ராஜேஸ்வரி தலைமையில் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த வழக்கில் நிர்மலா தேவி, பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பலமுறை ஜாமீன் கேட்டும் வழங்கப்படாததால் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று முருகன், கருப்பசாமி ஆகியோர் வெளிவந்தனர்.
நிர்மலாதேவிக்கு கீழ்நீதிமன்றம் ஜாமீன் மறுத்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி தண்டபாணி, நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கினார். இந்த நிலையில், இன்று முற்பகலில் நிர்மலாதேவி மதுரை மத்திய சிறையில் இருந்து வெளியே வந்தார். அவர் மூன்று கட்டப்பையுடன் வந்தார்.
சிறையிலிருந்து வந்த நிர்மலாதேவியுடன் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் செய்தியாளர்களைச் சந்திதார். அப்போது அவர், ``நீண்ட சட்ட போராட்டத்துக்குப் பிறகு நிர்மலாதேவி வெளியே வந்துள்ளார். அவர் ஜாமீனில் வரக்கூடாது என நிர்மலாதேவியின் உறவினர்களுக்கு தொல்லை கொடுக்கப்பட்டது. பல எதிர்ப்புகளுக்குப் பின் நீதிமன்ற உத்தரவின்படி ஜாமீனில் வெளியே வந்துள்ளார். நிர்மலாதேவி மீது போடப்பட்ட வழக்கு பொய் வழக்கு என்பதை நிரூபித்து வழக்கிலிருந்து வெளியே வருவார். அதை சட்டப்படி நிரூபிப்போம்" எனக் கூறினார்.