திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா வரும் மே-18-ம் தேதி நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான முனிக்குமாரர்களுக்கு சாபவிமோசனம் அளிக்கும் வைபவம் அன்று மாலை நடைபெறுகிறது.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடும் கடற்கரையோரத் தலமும் ஆனது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் வைகாசி விசாகப் பெருந்திருவிழாவும் ஒன்று. முருகப் பெருமான் அவதரித்த நாளாகக் கொண்டாடப்படும் இந்த திருவிழா வரும் மே மாதம் 18-ம் தேதி நடைபெறுகிறது. இத்திருவிழாவில் கலந்துகொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்ய தூத்துக்குடி மட்டுமல்லாமல் நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டத்தைச் சேர்ந்த முருக பக்தர்கள் மாலை அணிந்தும் விரதமிருந்தும் பாதயாத்திரையாக திருச்செந்தூர் வருவார்கள்.
இது குறித்து திருக்கோயில் இணை ஆணையர் குமரதுரை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்க்கடவுள் .முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திரத் திருவிழாவான, வைகாசி விசாகத் திருவிழா, வரும் மே-18ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி, அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். இதையடுத்து, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிசேகம், காலை 10 மணிக்கு உச்சிக்கால அபிசேகம் மற்றும் தீபாராதனை ஆகியவை நடைபெறுகிறது.
பின்னர், சுவாமி ஜெயந்திநாதர் கோயிலிலிருந்து தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபத்திற்கு வந்து சேர்கிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிசேக, அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து, வசந்த மணடபத்தை சுவாமி 11 முறை வலம் வரும் வைபவமும், விழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரர்களுக்கு சாபவிமோசனம் அளிக்கும் வைபவமும் நடைபெறுகிறது.
பின்னர், மகாதீபாரதனையைத் தொடர்ந்து, சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி கிரிவீதி வலமாக திருக்கோயிலை வந்தடைகிறார். இதையொட்டி, பக்தர்களின் வசதிக்காக திருவிழாவுக்கு முதல் நாளான (மே-17), அடுத்த நாளான (மே-19) ஆகிய இரண்டு நாட்களும் அதிகாலை 4 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக நெல்லை, தூத்துக்குடியில் இருந்து சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.