தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் ஆளுநர் சம்பந்தப்பட்ட கேள்விக்கு, ராஜ்பவன் மழுப்பலான பதிலை அளித்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பதவியேற்றது முதல் அதிகாரிகளிடம் மீட்டிங் போடுவது, பணிகளை ஆய்வுசெய்வது என்று அதிரடியில் இறங்கி பரபரப்பைக் கிளப்பினார். எந்த ஊர் சென்றாலும் சாலைகளில் குப்பை அள்ளுவது எனத் தன்னை மக்கள் தலைவராக அடையாளப்படுத்திக்கொண்டார் புரோஹித். இந்நிலையில், கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர், “தமிழக ஆளுநரைப் பாமர மக்கள் நேரில் சந்தித்து கோரிக்கைகள் அளிக்க, யாரிடம் அனுமதி பெற வேண்டும்?” அந்த அலுவலரின் பெயர், பதவி, தொடர்பு எண், முகவரி போன்ற தகவல்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் ஆளுநர் மாளிகையில் கேட்டிருந்தார்.
இதற்கு ஆளுநரின் சார்புச் செயலரும், ராஜ்பவன் பொதுத் தகவல் அலுவலருமான வெங்கேடஸ்வரன் அளித்துள்ள பதிலில், “பார்வையில்
காணும் தங்களது மனுவில் கோரியுள்ள தகவல்கள், இந்த அலுவலகம் சார்ந்தவை அல்லை. எனவே, இது தொடர்பாக உரிய துறையை அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது. ஆளுநர் சம்பந்தப்பட்ட தகவலை ராஜ்பவனே வழங்க மறுப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதுதொடர்பாக சரவணன், “ராஜ்பவனில் இருந்து வந்துள்ள பதில் அதிர்ச்சியளிக்கிறது. தங்கள் அலுவலகம் சாராத கேள்விகளை, தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 6(3)-ன் கீழ் உரிய துறைக்கு மாற்றம் செய்யப்பட வேண்டும். அதைப் பொதுத் தகவல் அலுவலர் தவறியுள்ளார். இதன்மூலம், ஆளுநர் அலுவலகம் சட்டத்துக்கு உள்பட்டதா, இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. நான் எந்தத் துறையிடம் அணுக வேண்டும் என்பதையும் அவர்கள் குறிப்பிடவில்லை. ஆளுநர் தொடர்புடைய தகவல்களை, ஆளுநர் அலுவலகத்தில்தானே கோர முடியும்? ஆளுநர் அலுவலகமே இப்படிச் செயல்பட்டால், வேறு துறைகள் எவ்வாறு இயங்கும்? இதுதொடர்பாக மேல் முறையீடு செய்ய உள்ளேன்” என்றார்.