உலகத்தில் ஒரே தோற்றத்தில் 7 பேர் வரை இருப்பதாகச் சொல்வார்கள். இது உண்மையோ பொய்யோ தெரியாது. ஆனால் நம்மைப் போன்று இருக்கும் மற்றொருவரைப் பார்த்துவிட்டால் ஒரு சொல்லமுடியாத உணர்வு இருக்கும். அதுவும் ஒரு பிரபலம் போன்ற தோற்றத்தில் இருந்தால் அவர் அந்த ஏரியாவின் ஸ்டார்தான். ஒருவர் போன்று மற்றொருவர் இருப்பதை ஆங்கிலத்தில் லுக்அலைக்(lookalike) என்பார்கள்.
பிரஷாந்த் சேத்தியின் 2013 -ம் ஆண்டு மற்றும் 2019 -ம் ஆண்டு புகைப்படங்கள்
சூரத்தில் கடந்த மக்களவைத் தேர்தலின் போது ஒரு ஹோட்டல் உரிமையாளர் வைரல் ஆனார். அவர் பெயர் பிரஷாந்த் சேத்தி. இவர் பார்ப்பதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போலவே இருப்பார். இவரது ஹோட்டலுக்கு வரும் கஸ்டமர்களும் இவரது நண்பர்களும் இது தொடர்பாக அவரிடம் சொல்லிக்கொண்டே இருப்பார்களாம்.
இந்தத் தகவல்கள் வெளியே தெரிய மீடியா, சோஷியல் மீடியா என வைரல் ஆனார் பிரஷாந்த் சேதி. 5 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இப்போதும் அவர் பேசப்பட்டு வருகிறார். காரணம், தான் ராகுல் காந்தி போன்று தோற்றமளிக்க விரும்பவில்லை எனக் கூறியதுதான். அதற்காகத் தனது ஹேர் ஸ்டலை மாற்றியுள்ளார். அது போதாது என்று தனது தோற்றத்தை மாற்ற இவர் 20 கிலோ வரை தன்னுடைய எடையை அதிகரித்திருக்கிறார்.
இது தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்துக்குப் பேட்டி அளித்த பிரஷாந்த், ``நான் ராகுல் காந்தி போன்று தோற்றத்தில் இருக்க விரும்பவில்லை. அவர் ஒரு தேசிய தலைவர். அவரை நான் மதிக்கிறேன். ஆனால் நான் ஒரு பா.ஜ.க ஆதரவாளர். மோடியின் ஆதரவாளர். ராகுல் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. அவர் தனது சாதனைகளாக எதைப் பற்றிப் பேச முடியும்? ஆனால் நாட்டின் குடிமகனாக எனக்கும் அவர் மீது மதிப்பும் நம்பிக்கையும் இருக்கிறது” என்றார்.
2013 -ம் ஆண்டு தனது கடையில் பிரஷாந்த் சேத்தி
மேலும் பிரதமர் மோடியின் ப்யோ பிக் படத்தில் ராகுல் காந்தியாக நடிக்க வந்த வாய்ப்பையும் அவர் வேண்டாம் என மறுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தங்களுக்குத்தான் எதிரானவன் என்றும் அவர் கூறியுள்ளார். பிரஷாந்தின் தந்தை அவரை இளைஞர் காங்கிரஸில் சேருமாறும், அதன்மூலம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுமாறும் பல முறை கூறியும் மறுத்துவிட்டாராம்.
இந்த லுக்அலைக் விவகாரம் தொடர்பாக பிரஷாந்தின் மனைவி கூறுகையில், ``எல்லோரும் அவர் பார்ப்பதற்கு ராகுல் காந்தி போன்று இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் சில நேரங்களில் எனக்கு அவர் பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ்(கத்தி படத்தில் வில்லனாக நடித்தவர்) மாதிரி தெரிவார். ஒரு அரசியல்வாதி மாதிரியான தோற்றத்தில் தெரிவதை விட பாலிவுட் நடிகர் மாதிரி தெரிவது நல்லதும்கூட” என்றார்.
Photo and News Credit: Times Of India