
இந்தப் பாலியல் தொழிலுக்கு மூளையாகச் செயல்பட்டதே மோகன்தான். முதலில் எட்டு பேரை மட்டுமே கைது செய்திருந்தது போலீஸ்
கரூரில் 16 வயது ஆதரவற்ற சிறுமியை வைத்து பாலியல் தொழில் செய்ததாகக் கைதுசெய்யப்பட்டிருக்கும் ஒன்பது பேரில் ஒருவர் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் என்பது அதிர்ச்சி என்றால், இந்த விவகாரத்தில் குற்றவாளிகளைத் தப்ப வைக்க போலீஸ் முயல்வதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு பேரதிர்ச்சி!
கரூரைச் சேர்ந்த அந்த 16 வயது சிறுமியின் தாயார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். சிறுமியின் தந்தை வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டார். இதனால், ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டார் அந்தச் சிறுமி. இந்த நிலையில், கரூர் அருகே தொழிற்பேட்டை பகுதியில் அந்தச் சிறுமியைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக மூன்று பெண்களையும், பாலியல் வன்கொடுமை செய்ததாக ஐந்து ஆண்களையும் போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்தது போலீஸ். மேலும், சம்பந்தப்பட்டவர்களுக்கு வீடு பிடித்துக் கொடுத்ததாக, ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் மோகன் என்பவரும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

இந்த நிலையில்தான் “வழக்கில் சம்பந்தப்பட்ட பலரையும் தப்பிக்கவைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது போலீஸ்” என்ற ‘பகீர்’ குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர் விஷயமறிந்தவர்கள். இது குறித்து, நம்மிடம் பேசிய அந்த விவரப்புள்ளிகள், “இந்தப் பாலியல் தொழிலுக்கு மூளையாகச் செயல்பட்டதே மோகன்தான். முதலில் எட்டு பேரை மட்டுமே கைது செய்திருந்தது போலீஸ். ஆனால், மோகனின் சிம் கார்டு அந்த சிறுமியிடம் இருந்ததால் வேறு வழியில்லாமல், ‘அந்தக் கும்பலுக்கு வீடு பார்த்துக் கொடுத்தார்’ என்று கதையை மாற்றி, கடைசி குற்றவாளியாக ‘உடந்தை’ என்ற அளவில் மட்டும் மோகனைச் சேர்த்திருக்கிறது.

சிறுமியின் செல்போனுக்கு யார் யாரெல்லாம் போன் செய்திருக்கிறார்கள் என்ற கால் ஹிஸ்டரியை வைத்து விசாரித்தபோது, அதில் பல அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், போலீஸார் எண்களும் இருந்திருக்கின்றன. இப்படி விவகாரத்தின் பின்னணி பெரிதாக இருந்ததையடுத்து அதில் பலரைத் தப்பிக்கவைத்து, அப்பாவிகளை மட்டும் வழக்கில் சேர்த்துவருகிறார்கள். உண்மையாக விசாரணை நடத்தினால், இன்னும் பல அதிர்ச்சிகர உண்மைகள் வெளிவரும்” என்றனர்.
இது குறித்து, கரூர் மாவட்ட எஸ்.பி சுந்தரவதனத்திடம் கேட்டோம். “சிறுமியைவைத்து பாலியல் தொழில் செய்த வழக்கில், சிலரைக் கைதுசெய்திருக்கிறோம். ஓய்வுபெற்ற போலீஸான மோகனையும் கைதுசெய்திருக்கிறோம். எனவே, இந்த விவகாரத்தில் விசாரணை நேர்மையாகவே நடந்துவருகிறது. யாரையும் தப்பவைக்கும்விதமாக, காவல்துறை செயல்படவில்லை. விசாரணை முடிவில்தான், இந்த விவகாரத்தில் இன்னும் யார் யாரெல்லாம் தொடர்பில் இருப்பவர்கள் என்பது தெரியவரும்” என்றார்.