17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர், கடந்த திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்றுவருகிறது. முதல் இரண்டு நாள்களும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி-க்கள் பதவியேற்றுக்கொண்டனர். மூன்றாவது நாளான நேற்று, மக்களவை சபாநாயகர் தேர்வு நடைபெற்றது.

இதில், பா.ஜ.க-வின் ஓம் பிர்லா போட்டியின்றி மக்களவை சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பதவியேற்ற பிறகு, அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. இன்று தொடங்கிய நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டத்தில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

அவர் பேசும்போது, ‘ தற்போது நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் 61 கோடி இந்திய மக்கள் வாக்களித்து புதிய சாதனை படைத்துள்ளனர். மிகப் பெரும் தேர்தலை நடத்தி முடித்த தேர்தல் ஆணையத்துக்கு வாழ்த்துகள். இந்திய மக்கள் தெளிவான ஆணை வழங்கியுள்ளனர். இந்த அரசு, அனைத்து மக்களுடனும் இணைந்து, நாட்டின் வளர்ச்சிக்காகப் பாடுபடும். மக்களின் மனம் அச்சத்திலிருந்து விடுபட்டு சுய மரியாதையுடன் முன்னேற அரசு உதவும்.

எதிர்கால சந்ததியினருக்காகத் தண்ணீர் சேமிப்பை நாம் நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கான முதல் படிதான், ஜல சக்தி துறையின் முதல் தொடக்கம். உலக நாடுகளில் பல தொடக்கங்களுக்கான முன்னோடியாக இந்தியா உள்ளது. முதல்முறையாக மக்களவையில் அதிக பெண்கள் இடம்பெற்றுள்ளது பெருமையாக உள்ளது.
பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படுவதை உறுதிசெய்து, முத்தலாக் போன்ற முறைகளைக் கைவிட வேண்டும். விவசாயிகள், பெண்கள், தொழிலாளர்களின் வளர்ச்சிக்காக அரசு பாடுபடும். 2022-ம் ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி பொருளாதார டாலராக இந்தியா உயரும். அதேபோல், கருப்புப் பணத்துக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் தொடரும். ஜிஎஸ்டி-யை எளிதாக்கும் நடைமுறைகளும் தொடரும்.
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற கொள்கையை அனைத்து எம்.பி-க்களும் கருத்தில் கொள்ள வேண்டும். அதனால், நாடு மிகவும் வேகமாக வளரும். இந்த விவகாரத்துக்கு அனைத்து எம்.பி-க்களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நாட்டுக்காக வீர மரணமடைந்த ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை அதிகரிக்கப்படும்” என்றார்.