17 -வது மக்களவையின் முதலாவது கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. முதல் இரண்டு நாள்களில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர். அதன் பின்னர், புதிய சபாநாயகராக ஓம் பிர்லா பதவியேற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, நேற்று குடியரசுத் தலைவர் இரு அவை உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றினார். அதில் பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

கூட்டத் தொடரில், குடியரசுத் தலைவரின் உரை முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படும். அதில், அடுத்த 5 ஆண்டுகளில் அரசின் செயல்பாடு தொடர்பான பல தகவல்கள் இருக்கும். இந்நிலையில், ராம்நாத் கோவிந்த் உரையாற்றிக்கொண்டிருந்தபோது, ராகுல் காந்தி தனது மொபைல் போனைப் பார்த்துக்கொண்டு இருக்கும் வீடியோ ஒன்று வெளியானது.

Photo: Twitter/@saandiippnayak
இதனைத் தொடர்ந்து பா.ஜ.க தலைவர்கள், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர். மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், ``ஒரு தேசியக் கட்சியின் தலைவர் அவர். குடியரசுத் தலைவர் நாட்டின் அடுத்த 5 ஆண்டுத் திட்டங்கள் குறித்து பேசிக்கொண்டிருக்கிறார். இது விரும்பத்தகாத விஷயம்” என்றார்.
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு, ``ராகுல் காந்தி, தொடர்ச்சியாகத் தனது போனுடன் விளையாடிக்கொண்டு இருக்கிறார். அவர், கவனத்தைச் சிதறவிடாமல் இருக்க யோகா பயிற்சி செய்ய வேண்டும்” என்றார்.
மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ, ``நாட்டின் குடியரசுத் தலைவர் பேசுவதைக் கேட்பதைவிடவும் அவருக்கு முக்கியமான சில விஷயம் அவரது போனில் இருந்திருக்கிறது. அவர், தனது சொந்தக் கட்சி விவகாரத்திலேயே நாட்டம் இல்லாமல்தான் இருக்கிறார்” என்றார்.

Photo Credit: ANI
இந்நிலையில், பா.ஜ.க-வினரின் இந்தக் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாகப் பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமாக ஆனந்த் ஷர்மா, ``பா.ஜ.க-வினர் சொல்வதுபோல அவமரியாதை எதுவும் நிகழ்ந்துவிடவில்லை. சில வார்த்தைகளின் அர்த்தம் கடினமாக இருக்கும். இந்தியில் அவ்வாறு சில வார்த்தைகள் இருக்கிறது. குடியரசுத் தலைவர் பேசும்போது, அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பதை ராகுல் தேடிப் பார்த்திருப்பார். குடியரசுத் தலைவரின் உரையில் தேவையானவற்றை அவர் கவனிக்கத்தான் செய்தார்.
குடியரசுத் தலைவர் பேசிய வீடியோவை முழுமையாகப் பார்த்தால், பாதி அமைச்சர்கள் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள். அப்படியென்றால், அவர்கள் அனைவரும் குடியரசுத் தலைவரின் உரையை அவமதித்துவிட்டார்கள் என்று சொன்னால் ஏற்பார்களா?” என்று கேள்வி எழுப்பினார்.