தெலங்கானா மாநிலத்தில் உள்ள சித்திபேட்டை பகுதியில் 70-க்கும் அதிகமான தெரு நாய்கள் ஒரே நாளில் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானாவின் சித்திபேட்டையில் எடுக்கப்பட்ட மனதை உருக்கும் வீடியோ, இரண்டு நாள்களாக சமூகவலைதளங்களை ஆக்கிரமித்து வருகிறது. அதில் ஒரு பெரிய லாரி முழுவதும் தெரு நாய்கள் கொல்லப்பட்டுக் கிடக்கின்றன. அதை ஒருசில பணியாளர்கள் எடுத்து வெளியில் வீசுகிறார்கள். இந்தக் காட்சியை முதலில் கண்டவர் தெலங்கானாவைச் சேர்ந்த ஒரு பெண் சமூக ஆர்வலர். அவர் வீடியோ எடுத்துக்கொண்டே, ``எதற்காக நாய்களைக் கொன்றீர்கள்’ என அழுதுகொண்டே பணியாளர்களிடம் கேட்கிறார். அதற்கு அவர்கள் ``எங்களுக்கு உத்தரவு வந்தது; அதனால் நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம்’ எனப் பதில் கூறுகின்றனர்.
தொடர்ந்து அந்தப் பெண் அழுதுகொண்டே, ‘ இவ்வளவு நாய்களையும் கொல்லச் சொல்லி உங்களுக்கு உத்தரவு வந்ததா. இதில் சிறிய நாய்களும் உள்ளன’ எனக் கூறிவிட்டு மூன்று நாய்களைக் காட்டி, ‘ இந்த மூன்று நாய்களும் எங்கள் தெருவில் உள்ளவை இவற்றுக்கு நான் தினமும் உணவு அளிப்பேன். இப்படிக் கொன்றுவிட்டீர்களே’ எனப் பேசுகிறார்.

இந்த வீடியோ சமூக ஆர்வலர்கள் மற்றும் விலங்குகள் ஆர்வலர்களைப் பெரும் கொந்தளிப்படையச் செய்துள்ளது. வீடியோவைப் பார்த்த சில சமூக ஆர்வலர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து கொல்லப்பட்ட நாய்களைப் புகைப்படம் எடுத்து ஆதாரத்துடன் சித்திபேட்டை காவல் நிலையத்திலும், அம்மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்து எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் பற்றி `இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஊடகத்துக்குப் பேசியுள்ள ரூடி விதி (rued Vidhi) என்ற பெண் சமூக ஆர்வலர், ``எங்கள் தெருவில் உள்ள மூன்று நாய்களுக்கு நான் தினமும் உணவளிப்பேன். அதேபோன்றுதான் சனிக்கிழமையும் உணவளிக்கச் சென்றேன் ஆனால், அங்கு நாய்கள் இல்லை. சிறிது நேரம் அங்கேயே தேடிப் பார்த்தேன் அப்போதுதான் என்னைக் கடந்து ஒரு லாரி சென்றது. அதில் முழுவதும் நாய்கள் இறந்து கிடந்தன.
இது தெரிந்து லாரியைப் பின்தொடர்ந்து சென்றேன். அது நேராகக் குப்பைகள் கொட்டும் இடத்துக்குச் சென்றது. லாரியில் சுமார் 40 நாய்கள் வரை இறந்த நிலையில் இருந்தது. சில பணியாளர்கள் லாரியில் இருந்த நாய்களின் உடலைக் குப்பைமேட்டில் வீசிக்கொண்டிருந்தனர். அவர்களிடம் ஏன் இத்தனை நாய்களைக் கொன்றீர்கள் எனக் கேட்டதற்கு எங்களுக்கு மேலிட உத்தரவு எனத் தெரிவித்துவிட்டனர். நாய்கள் அனைத்துக்கும் ஊசி மூலம் விஷம் செலுத்தப்பட்டுள்ளது.

அங்கேயே நின்று நான் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தேன். அப்போது நான் கண்ட காட்சி இன்னும் அதிர்ச்சியாக இருந்தது. நான் அங்கிருந்த அடுத்த சில மணி நேரங்களில் மேலும் ஒரு லாரி வந்தது. அது முழுவதும் நாய்கள் இறந்து இருந்தன. எல்லாம் சேர்ந்து 70 நாய்களுக்கு அதிகமாக ஒரே நாளில் கொல்லப்பட்டுள்ளன. பிறந்த சில மாதங்களே ஆன நாய்களையும் அவர்கள் கொன்று குவித்திருந்தனர்” என அழுதபடி தெரிவித்துள்ளார்.
இவரைத்தொடர்ந்து பேசிய மற்றொரு சமூக ஆர்வலர், `` நாய்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நாங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தோம் பெரிய குப்பை மேட்டில், இறந்த நாய்கள் அப்படியே கொட்டப்பட்டிருந்தன. நாய்களைக் கொண்டுவந்தவர்கள் யாரும் சித்திபேட்டை நகராட்சியில் வேலை செய்பவர்கள் கிடையாது. அவர்கள் அதற்கான சீருடையும் அணியவில்லை. இதுபற்றி விசாரணை நடத்தினோம். அப்போது அவர்கள், ``நாங்கள் தினக் கூலிகள். தெருக்களில் உள்ள நாய்களுக்கு முன்னரே விஷம் கொடுக்கப்பட்டுள்ளது. இறந்த நாய்களைக் கொண்டுவர வேண்டும் என்று மட்டும்தான் எங்களுக்குக் கூறப்பட்டது’ எனத் தெரிவித்தனர். ஆதாரங்களை எடுத்துக்கொண்டு வெளியில் செல்லும்போது சிறிது தூரத்தில் இன்னும் சில நாய்கள் கொல்லப்பட்டுக் குவியலாகக் கிடந்தது. இது தொடர்பாக ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளோம்” எனக் கூறியுள்ளார்.
ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து சித்திபேட்டை நகராட்சியில் பணிபுரியும் சில பணியாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இறந்த நாய்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
News Credits : New indian express