நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சாலை விபத்து காரணமாக, மோட்டார் வாகனச் சட்டத்தில் அதிரடியான மாற்றங்களைக் கொண்டு வர முடிவு செய்துள்ளது மத்திய அரசு. இதன் மூலம் சாலை விதிகளை மீறுவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

மக்களவை தேர்தலுக்கு முன்பாகவே மோட்டார் வாகனச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்தது. ஆனால், தேர்தல் காரணமாக அந்த நடவடிக்கைகள் தள்ளிப் போனது. இந்நிலையில் தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் புதிய சட்ட வரைவு தாக்கல் செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு இந்தச் சட்ட வரைவுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதன் மூலம் அதி வேகமாகச் செல்லும் வாகனங்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படவுள்ளது. இன்ஷூரன்ஸ் இல்லாம வாகனம் ஓட்டினால் ரூ.2000 அபராதமாக வசூலிக்கப்படும். ஹெல்மெட் இல்லாமல் இரு சக்கர வாகனம் ஓட்டினால் 1,000 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படுவதோடு 3 மாதம் லைசென்ஸ் ரத்து செய்யப்படும். லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினாலோ, ஆபத்தான வகையில் வாகனம் ஓட்டினாலோ ரூ.5,000 அபராதமாக வசூலிக்கப்படவுள்ளது. மது அருந்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதமாக வசூலிக்கப்படவுள்ளது.

18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் வாகனம் ஓட்டி, அதன் மூலம் ஏற்படும் சிக்கல்களுக்கு சம்பந்தப்பட்ட சிறுவர்களின் பெற்றோர் அல்லது காப்பாளர்தான் பொறுப்பாவார். மேலும் இதற்கு ரூ.25,000 அபராதமாக வசூலிக்கப்படவுள்ளது. மேலும், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் போன்ற அவசர வாகனங்களுக்கு வழி விடாமல் செல்லும் வாகனங்களுக்கும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படவுள்ளது.
இந்த மசோதா வரும் வாரங்களில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.