நெல்லையில், ஐந்து மாவட்ட ஆட்சியர்களுடன் தண்ணீர் தட்டுப்பாடுகுறித்து ஆலோசனை நடத்திய ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, பருவமழை குறைந்ததன் காரணமாகவே சென்னை உள்ளிட்ட நகரங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் நிலவும் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்குறித்து ஆலோசிக்க, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் நெல்லையில் நடைபெற்றது. ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தலைமையில் இந்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
அதில், தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் குடிநீர் திட்டப்பணிகள், வளர்ச்சித் திட்டப்பணிகள்குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். அந்தந்த மாவட்ட ஆட்சியர்களும் அதிகாரிகளும் திட்டத்தின் தற்போதைய நிலைகுறித்து விளக்கிக் கூறினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி, ’’நெல்லை , தூத்துக்குடி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களிலும் குடிதண்ணீர் பிரச்னை, பிரதமர் வீடுகட்டும் திட்டம், சாலைப் பணிகள், திடக்கழிவு மேலாண்மை ஆகியவைகுறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில், பொதுவாகவே மழைப்பொழிவு குறைவாக உள்ளது. இதனால், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க, தமிழக முதல்வர் அனைத்துத்துறை அதிகாரிகளின் கூட்டத்தை நடத்தி, மாவட்ட வாரியாக குடிநீர் பிரச்னையைத் தீர்க்க சிறப்பு அதிகாரிகளை நியமித்துள்ளார். நெல்லை மாவட்டத்தில் 6 பெரிய திட்டங்களும், தூத்துக்குடியில் 3 திட்டங்களும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 திட்டங்களும், விருதுநகரில் ஒரு திட்டமும் செயல்படுத்தப்பட்டுவருகிறது. ஐந்து மாவட்டங்களுக்கும் தன்னிறைவாகக் குடிதண்ணீர் கிடைக்கும் வகையில், 1671 கோடி ரூபாய் மதிப்பில் 14 திட்டப்பணிகள் நடைபெற்றதுவருகிறது.

இந்தத் திட்டங்கள் நிறைவடைந்தால், அடுத்த 40 ஆண்டுகளுக்கு எந்தச் சிக்கலும் ஏற்படாது. வரும் காலத்தில் மக்கள் தொகையைக் கவனத்தில்கொண்டு அதற்கேற்ப குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. மழைநீர் சேகரிப்பு நடைமுறைப்படுத்தும் வகையில் குழு அமைத்து கண்காணிக்கப்படும் . தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் . மத்திய அரசு எந்தத் திட்டத்தை தமிழகத்துக்குக் கேட்டாலும் தரத் தயாராக உள்ளது’’ என்றார்.