சென்னை தாம்பரம் சேலையூரில் டி.வி.நிருபர், அவரின் மனைவி மற்றும் நிருபரின் அம்மா ஆகியோர் மூச்சுத்திணறி இன்று பலியாகினர். இந்தச் சம்பவத்தில் ஃப்ரிட்ஜ் வெடித்து அவர்கள் இறந்ததாகத் தகவல் வெளியானது. உண்மையில் என்ன நடந்தது என்பதை போலீஸாரும் தீயணைப்பு வீரர்களும் நம்மிடம் விவரித்தனர்.
சென்னை சேலையூர் சுந்தரம் காலனி, திருமங்கை மன்னன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்த பிரசன்னா, அவரின் அம்மா ரேவதி, பிரசன்னாவின் மனைவி அர்ச்சனா ஆகியோர் பூட்டிய வீட்டுக்குள் இறந்துகிடந்தனர். பிரசன்னா, தனியார் டி.வி. செய்தி சேனலில் நிருபராகப் பணியாற்றி வந்தார். அர்ச்சனா, ஆசிரியையாகப் பணியாற்றினார்.
வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற போலீஸாரும் தீயணைப்பு வீரர்களும் பிரசன்னா, அர்ச்சனா, ரேவதி ஆகியோரின் சடலங்களை கைப்பற்றினர். பிறகு உயிரிழப்புக்கு என்ன காரணம் என்பதை ஆய்வு செய்தனர். தீயணைப்பு வீரர்கள் வீட்டில் சமையலறையில் இருந்த சிலிண்டர்களை முதலில் ஆய்வு செய்தனர். ஆனால், அங்கு இருந்த இரண்டு சிலிண்டர்களுக்கும் எந்தவித சேதமும் இல்லை. அதிலிருந்து கேஸ் கசியவும் செய்யவில்லை. இதனால் மின்கசிவு காரணமாகத்தான் இந்த விபத்து நடந்து மூன்று பேரும் இறந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு போலீஸாரும் தீயணைப்புத் துறையினரும் வந்துள்ளனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், சம்பவம் நடந்த இடத்தை நாங்கள் ஆய்வு செய்தபோது ஃப்ரிட்ஜின் கதவுகள் முழுமையாக சேதமடைந்திருந்தது. அதில் அருகில் உள்ள வாட்டர் கேனும் மெல்ட்டாகி இருந்தது. அதோடு ஃப்ரிட்ஜ் வைக்கப்பட்டிருந்த இடத்தின் அருகே உள்ள சுவர்களிலும் புகை படிந்திருந்தது. இதனால் மின் கசிவு ஏற்பட்டவுடன் ஃப்ரிட்ஜில் தீ பிடித்திருக்க வேண்டும். இதனால் ஏற்பட்ட புகைமூட்டத்தால்தான் மூன்று பேரும் மூச்சுத்திணறி இறந்துள்ளனர் என்றார்.
தீயணைப்பு துறையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் கூறுகையில், சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்தபோது கேஸ் சிலிண்டர்களிலிருந்து கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதலில் கருதினோம். ஆனால், சிலிண்டர்களுக்கு எந்தவித சேதமும் இல்லை. இதனால் மின்கசிவு காரணமாகத்தான் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதுகிறோம். ஃப்ரிட்ஜ் அதிகளவில் சேதமடைந்துள்ளது. அதன்அருகில் உள்ள பொருள்களும் சேதமடைந்திருக்கிறது. இந்தப் பொருள்கள் அனைத்தும் பிளாஸ்டிக் என்பதால் அதிகளவில் புகை வீட்டுக்குள் ஏற்பட்டு மூன்று பேரும் உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம். சம்பவ இடத்திலிலிருந்து தடய அறிவியல் நிபுணர்கள் தடயங்களைச் சேகரித்துள்ளனர். அவர்களின் ரிப்போர்ட் வந்தபிறகுதான் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என்றார்.
தீயணைப்பு அலுவலர் இளங்கோ கூறுகையில், ``ஃப்ரிட்ஜ் வெடித்து உயிரிழப்பு நடந்ததா என்பது கேள்விக்குறிதான். ஏனெனில் ஃப்ரிட்ஜ் வெடித்திருந்தால் முழுமையாகச் சேதமடைந்திருக்கும். ஆனால், சம்பவம் நடந்த இடத்தில் உள்ள ஃப்ரிட்ஜின் கதவு சேதமடைந்துள்ளது. பொதுவாக ஃப்ரிட்ஜில் உள்ள கம்ப்ரைஸரில் உள்ள கேஸில்தான் கசிவு ஏற்படும். அது, ஃப்ரிட்ஜின் பின்பக்கத்தில் உள்ளது. இந்தச் சம்பவத்தில் ஃப்ரிட்ஜின் முன்பகுதியில்தான் சேதமடைந்துள்ளது. இதனால் மின்கசிவு காரணமாக ஃப்ரிட்ஜில் தீ பிடித்து சேதமடைந்திருக்க வேண்டும். ஃப்ரிட்ஜின் அருகில் உள்ள பொருள்களும் தீ பிடித்துள்ளது. இதனால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் தீ விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது" என்றார்.
தீயணைப்புத் துறையினர் கூறுகையில், ``சென்னை ஐயப்பன்தாங்கல் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நடந்த சம்பவம் இது. சிலிண்டரிலிருந்து கேஸ் கசிவு ஏற்பட்டு அது வீடு முழுவதும் பரவியுள்ளது. அதை வீட்டில் உள்ளவர்கள் கவனிக்கவில்லை. காலையில் கேஸ் அடுப்பை பற்ற வைத்தபோது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் அந்த வீட்டில் உள்ள ஃப்ரிட்ஜ் சேதமடைந்தது. ஈரோட்டில் நடந்த சம்பவம் இது.
வீட்டைப் பூட்டி விட்டு அனைவரும் வெளியூர் சென்றுவிட்டனர். பூட்டிய வீட்டுக்குள் கேஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்தச் சமயத்தில் வீட்டுக்குள் மின்கசிவு ஏற்பட்டு தீ பிடித்துள்ளது. இதனால் அந்த வீட்டில் உள்ள சிலிண்டர் வெடித்ததில் கட்டடமே சேதமடைந்தது.
இதுபோன்ற தீ விபத்து சம்பவங்களில் அதாவது பூட்டிய அறைக்குள் மூன்று நிமிடம் வரை புகை மூட்டமாக இருந்தாலே உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஏ.சி. தீ விபத்து ஏற்படும் போது இதுபோன்ற புகை சுவர்களில் படிந்திருக்கும். சேலையூர் சம்பவத்தில் ஃப்ரிட்ஜின் மேல் உள்ள கதவு மட்டுமே அதிகளவில் சேதமடைந்துள்ளது. இதனால் தீ பிடிக்கக்கூடிய பொருள்கள் ஏதாவது ஃப்ரிட்ஜின் மேல் அல்லது அருகில் இருந்திருக்க வாய்ப்புள்ளது. சீலிங்கில் உள்ள சிமென்ட் கீழே விழுவதற்கு அதிக வெப்பம் அங்கு ஏற்பட்டிருக்க வேண்டும். ஃப்ரிட்ஜில் உள்ள கேஸ் மூலம் உயிரிழப்பு ஏற்படுவது அரிது" என்றனர்.
நிருபர் பிரசன்னாவின் உறவினர்கள் கண்ணீர்மல்க நம்மிடம், ``கூடுவாஞ்சேரியில்தான் பிரசன்னா குடும்பத்துடன் இருந்தார். அங்கிருந்து வேலைக்குச் செல்ல நேரம் அதிகமானதால் சென்னை கிழக்கு தாம்பரம், சேலையூர் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புக்கு வீட்டை மாற்றினார். அவருக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை. சம்பவத்தன்று வீட்டில் ஏசி போட்டுவிட்டு 3 பேரும் தூங்கியுள்ளனர். இதற்காக வீட்டின் கதவு, ஜன்னல்களை மூடிவிட்டனர்.
அதிகாலை நேரத்தில் அந்தப்பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு மின்சாரம் வந்தசமயத்தில்தான் பூட்டிய வீட்டுக்குள் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை நேரம் என்பதால் அனைவரும் அயர்ந்து தூங்கியுள்ளனர். இருப்பினும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவர்கள் வெளியில் செல்ல முயற்சி செய்துள்ளனர். இதற்கான தடயங்கள் வீட்டில் சுவரில் ஒவ்வொருவரின் கை ரேகைகள் பதிவாகியுள்ளன. வீட்டை பூட்டி விட்டு சாவியை எடுத்துவிட்டதால் உடனடியாக அவர்களால் கதவைத் திறக்க முடியவில்லை. இதனால் இருட்டுக்குள் அவர்கள் உயிருக்குப்போராடி இறந்துள்ளனர்" என்றனர்.