
சென்னைவாசிகளுக்கு வரமா, சாபமா எனத் தெரியாத ஒரு திட்டம் என்றால் அது மழைநீர் வடிகால் அமைப்புகள்தாம். ஒவ்வொரு தெருவின் ஓரத்திலும் இதற்காக கான்கிரீட் கால்வாய்கள் அமைக்கப்பட்டன. இதன்மூலம் மழைநீர் சாலையில் தேங்காமல் ஓடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதுவும் முழுமையாக நடக்கவில்லை. கூடுதல் பிரச்னையாகத் தெருவின் அகலம் குறைந்தது.
இந்த அமைப்பு, சாலையின் தரைமட்டத்தைவிட சற்று உயர்ந்து காணப்படும். இதனால் சாலையில் அகலம் குறைந்தது. பெரும்பாலான தெருக்கள் 20 - 30 அடி அகலமே இருக்கும். அவற்றில் 5 அடிகள் வரை இந்த வாய்க்கால்கள் எடுத்துக்கொள்வதால் இரண்டு கார்கள்கூட எதிரெதிர் பக்கம் போகமுடியாத சூழல். மழைநீர் சேமிக்கப்படும்; வெள்ளம் வடியும் போன்ற காரணங்களால் இதை ஏற்கலாம்தான். ஆனால், அவையும் நடக்கவில்லை என்பதுதான் சோகம். சுமார் 1,100 கோடி ரூபாய் செலவில் சென்னை முழுவதும் அமைக்கப்பட்ட இந்தக் கால்வாய்கள் உண்மையில் எதற்காகக் கட்டப்பட்டன என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
இந்தக் கால்வாய்களுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த நீதிபதிகள் இந்த நீரை முறையாகப் பயன்படுத்த ஏதும் வழியிருக்கிறதா என்ற கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள். முன்பு வந்த ஒரு தீர்ப்பின்படி மழைநீர் வடிகால் கால்வாய்களை கான்கிரீட்டில் கட்டக்கூடாது. அப்படிச் செய்தால் மழைநீர் பூமிக்குள் செல்வது தடுக்கப்படும் என்பதால் அப்படித் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், இப்போது கட்டப்பட்டிருக்கும் அனைத்துக் கால்வாய்களும் கான்கிரீட்டால்தான் கட்டப்பட்டிருக்கின்றன. மேலும், அந்த நீரை எதற்கும் பயன்படுத்துவதில்லை.
இந்தக் கால்வாய்களைக் கட்டப்படும்போதும் நிறைய பிரச்னைகள் எழுந்தன. பூமிக்கடியில் செல்லும் மெட்ரோ பைப்கள் மற்றும் மின்சார ஒயர்களை ஒப்பந்தக்காரர்கள் பாழ் செய்வதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. தண்ணீர்ப் பிரச்னை அதிகரித்திருக்கும் சூழலில் லாரி தண்ணீரை மட்டுமே பெரும்பாலான ஏரியாக்களில் நம்பியிருக்கிறார்கள். அந்தத் தெருக்களுக்குள் லாரியோ மினி லாரியோ செல்ல முடியாதபடி பல வாரங்களுக்கு இந்தப் பணி நடப்பதும் உண்டு. அந்தச் சமயத்தில் வேறு எந்த வழியுமின்றி பொதுமக்கள் திண்டாடுவதும் இன்றும் நடந்துகொண்டிருக்கிறது.

உயர் நீதிமன்றம் இப்போது தமிழக அரசையும் மெட்ரோவையும் இந்தத் தண்ணீரை எப்படிப் பயன்படுத்தலாம் என அறிக்கை கேட்டிருப்பது இந்தத் திட்டத்தை நல்ல திட்டமாக மாற்றுவதற்கான முதல்படியாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அதே சமயம் இந்த கால்வாய்கள் கட்டப்படும் முறையிலும் மாற்றங்கள் வர வேண்டும். பொதுமக்களுக்கான திட்டம் என்பதால் அவர்கள் சிக்கலுக்குள்ளாக்குவதை ஏற்க முடியாது.
உங்கள் பகுதியில் மழைநீர் வடிகால் கால்வாய்கள் உள்ளனவா? அது பற்றிய உங்கள் கருத்துகளை கமென்ட் பாக்ஸில் பகிருங்கள்.