
``நாட்டு மக்களின் சேவைக்காகவே கட்சி தொடங்க வேண்டும். ஆனால், அ.ம.மு.க-வோ அ.தி.மு.க-வை அழிப்பதற்காக தொடங்கப்பட்ட கட்சி. சந்தர்ப்பவாதிகளைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. அ.ம.மு.க-வில் உள்ள ஜெயலலிதாவின் விசுவாசிகள் விரைவில் அ.தி.மு.க-வில் இணைய வேண்டும்" என்று கோவையில் பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார்.
கோவை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், ``அ.தி.மு.க-விலிருந்து விலகி வேறு கட்சிக்குச் செல்பவர்களால் அ.தி.மு.க-வுக்குத் துளியும் பாதிப்பு கிடையாது. சிறப்பாக பணியாற்றியவர்கள் மீண்டும் அ.தி.மு.க-வுக்கு வந்தால் அவர்களை முதல்வரும் துணை முதல்வரும் ஏற்றுக்கொள்வார்கள். சந்தர்ப்பவாதிகளைப் பற்றி கவலை இல்லை. எங்கள் இயக்கம் வலுவாக இருக்கிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் வந்தவர்கள் எல்லாம் மீண்டும் அ.தி.மு.க-வில் இணைவார்கள். நாட்டு மக்களின் சேவைக்காகவே கட்சி தொடங்க வேண்டும். ஆனால், அ.ம.மு.க தோன்றியதற்கான காரணமே சரியில்லை. அது அ.தி.மு.க-வை அழிப்பதற்காக தொடங்கப்பட்ட கட்சி. அ.ம.மு.க-வில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா விசுவாசிகள் மீண்டும் அ.தி.மு.க-வில் இணைய வேண்டும். சந்தர்ப்பவாதிகள் தி.மு.க-வுக்குச் செல்கின்றனர்.
இரண்டு ஆண்டுகளாக மழை இல்லாத சூழலிலும் அ.தி.மு.க அரசு குடிநீர் பிரச்னையை தீர்க்க அனைத்து வழிகளிலும் போராடிக் கொண்டிருக்கிறது. தி.மு.க ஆட்சியிலும் இதேபோன்ற குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. குடிநீர் பிரச்னையை சமாளிக்கின்ற ஆற்றலும், அறிவும் சக்தியும் அ.தி.மு.க-வுக்கு மட்டுமே உள்ளது. அ.தி.மு.க என்பது தாய் வீடு. இங்கிருந்து சென்றவர்கள் மீண்டும் வரலாம். கிராம அளவில் பிரிந்து சென்ற நிர்வாகிகள் மீண்டும் கட்சியில் இணைந்துள்ளனர். அ.தி.மு.க-வைப் பொறுத்தவரையில், சர்வாதிகார மனப்பான்மை இல்லாமல் ஒருவருடன் ஒருவர் கலந்துபேசி முடிவுகள் எடுக்கப்படுகிறது. இதில் இரட்டை தலைமை பிரச்னை எல்லாம் ஒன்றும் இல்லை. சிறப்பான முறையில் கட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது" என்றார்.