அகதிகளாகத் தங்கள் நாட்டைவிட்டு வெளியேறும் குழந்தைகளில் ஒரு நாளுக்குக் குறைந்தது ஒரு குழந்தையாவது உயிரிழப்பதாக ஐ.நா அறிக்கை வெளியிட்டுள்ளது.

சில நாள்களுக்கு முன்னர் மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த ஆஸ்கர் என்ற 25 வயது நபர் தன் குடும்பத்துடன் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றார். அவர் மெக்சிகோவின் எல்லையில் உள்ள ரியோ கிராண்ட் ஆற்றைக் கடக்கும்போது தன் 2 வயது பெண் குழந்தையுடன் உயிரிழந்தார். அவர்களின் புகைப்படம் உலகை உலுக்கும் விதமாக இருந்தது. இப்படித் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் அகதிகளாகத் தங்கள் நாட்டைவிட்டு வெளியேறி வேறு நாடுகளுக்குக் குடிபெயருகின்றனர்.

அகதிகளாகச் செல்லும் மக்களின் குழந்தைகளில், ஒரு நாளுக்குக் குறைந்தது ஒரு குழந்தையாவது உயிரிழக்கிறது அல்லது காணாமல்போகிறது என ஐ.நா அகதிகள் நலன் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. 2014-ம் ஆண்டு முதல்தான் இந்தக் குழந்தைகளின் இறப்பு அதிகரித்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து வருடங்களாக அகதிகளாக வெளியேறும் குழந்தைகளில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஆபத்தான பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் அப்படிப் பயணம் செய்து இதுவரை 32,000 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. உயிரிழந்த குழந்தைகளில் 1,600 பேர் ஆறு மாதத்துக்கும் குறைவானவர்கள். மத்திய கடல் வழியாக ஆபத்தான முறையில் படகுகளில் பயணம் செய்பவர்கள்தாம் அதிகமாக உயிரிழப்பதாகவும் அவர்களின் குழந்தைகள் மட்டும் 17,900 பேர் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாக மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவுக்கு நுழையும் குழந்தைகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் 1,900 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது.