
நீலகிரி மாவட்டம் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் நள்ளிரவில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருவங்காடு பகுதியில் மத்திய பாதுகாப்புத்துறை கட்டுப்பாட்டில் வெடிமருந்து தொழிற்சாலை செயல்பட்டுவருகிறது.1903-ம் ஆண்டு அப்போதைய ஆங்கிலேயர் ஆட்சியின்போது தொடங்கப்பட்ட இந்தத் தொழிற்சாலையில் இன்றளவும் ராணுவ தளவாடங்களுக்கான வெடிபொருள்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. கார்டைட் எனப்படும் புகையில்லா வெடிமருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தத் தொழிற்சாலையில் 1,500 பேர் பணியில் உள்ளனர். பகல் இரவாக உற்பத்தி நடைபெற்றுவருகிறது.
இந்த நிலையில், நள்ளிரவு 12.30 மணியளவில் CD செக்ஷன் எனப்படும் மருந்து கையாளப்படும் பிரிவில் 6 தொழிலாளர்கள் இரவு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட உயர் அழுத்தம் காரணமாக வெடிப்பு ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 5 பேர் காயமடைந்தனர். 3 பேர் கோவை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
வெடிமருந்து தொழிற்சாலை ஊழியர் ஒருவர் கூறுகையில், ``CD செக்ஷனில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக விபத்து ஏற்பட்டுள்ளது. 40 ஆண்டுகள் பழைமையான இயந்திரங்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. நேற்று இரவு சம்பவம் நடைபெற்ற கட்டத்தில் 6 பேர் பணியில் ஈடுபட்டனர். அதிர்ஷ்டவசமாக அவர்கள் காயத்துடன் உயிர் தப்பினர்" என்றார்.