வீணாகும் மழைநீரைச் சேமிக்க ஒரு விவசாயி கூறும் திட்டம் வலைதளங்களில் வைரலாகி வருகிறது. `மண்ணை வளமாக்கவும், எதிர்கால சந்ததியினருக்கு நிலத்தடியில் தண்ணீரைப் பாதுகாத்து வைத்துச் செல்லவும் இத்திட்டம் உதவும்' என்கிறார்கள். பெயர் குறிப்பிட விரும்பாத விவசாயி ஒருவர், தன் விளைநிலத்திலுள்ள பம்ப்செட் மோட்டாரை வைத்து, மண்ணும் மக்களும் பயனுறும் வகையில் அருமையான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது விவசாயிகளை மட்டுமல்ல... அரசு அதிகாரிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அந்த வீடியோவில் அவர் சொல்லும் விஷயம் இதுதான்!
``சுமார் 200 அடி ஆழத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்துள்ளேன். தண்ணீர் வெளியேறும் குழாயின் நுனியில் சுமார் 4 மீட்டர் வளையும் தன்மையுள்ள பிளாஸ்டிக் பைப்பைப் பொருத்த வேண்டும். அதனடியில் தண்ணீர் உறிஞ்சப் பயன்படும் ஃபுட்வாலை இணைத்து, அதனுள் தூசிகள் புகாத வண்ணம் மெல்லிய வலையைக் கட்டி மழைக்காலத்தில் தண்ணீர் வீணாய் வடியும் வாய்க்காலில் போட்டுவிட வேண்டும். மோட்டாரை ஒரு பத்து நிமிடம் போட்டு நிறுத்திவிட வேண்டும். புட்வால் மூலமாகத் தண்ணீர் உள்ளுக்குள் உறிஞ்சி இழுத்துக்கொள்ளும். இதற்கு மின்சாரம் தேவையில்லை. ஒரு நிமிடத்துக்கு 200 லிட்டர், ஒரு மணிக்கு 12,000 லிட்டர், நாளொன்றுக்கு சுமார் 2,88,000 லிட்டர் தண்ணீர் ஆழ்துளை குழாய் வழியே 200 அடி ஆழத்துக்குக் கீழே சென்றுவிடும். ஒரு மோட்டார் மூலம் ஒரே நாளில் இவ்வளவு லிட்டர் தண்ணீர் சேமிக்கப்படும்போது, தமிழகத்திலுள்ள அனைத்து பம்ப் செட் மோட்டார்களும் இதன்படி பயன்படுத்தினால் எத்தனை கோடி லிட்டர் தண்ணீர் சேமிக்கப்படும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். மழைக்காலம் முழுவதும் ஒரு சொட்டு நீரைக்கூட வீணடிக்காமல் பூமிக்கடியில் உள்ள மணல் படுகையில் சேமித்து வைக்கலாம். மழை நீரைச் சேமிக்க கிணறுகள், குளங்கள், ஏரிகள், பண்ணைக்குட்டைகள் போன்றவற்றை தூர்வாரிப் பக்குவப்படுத்தினாலும் தண்ணீர் ஆவியாகி வெளியேறிவிடும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், நான் சொல்லும் திட்டம் மூலம் பைசா செலவில்லாமல் பூமிக்கடியில் தண்ணீரைக் கொண்டுசெல்லலாம் இதனால் நிலத்தடியில் தண்ணீர் செறிவூட்டப்படும். கடல் நீர் உட்புகாமல் தடுக்கப்படும். விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பஞ்சம் வராமல் இருக்கும். இதைப் படித்த மேதாவிகள், அறிவாளிகள் எல்லோரும் நன்கு ஆய்வுசெய்து அரசின் கவனத்துக்குக் கொண்டுசென்று எதிர்கால தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்கிறார்.
இதுகுறித்து எஸ். புதூரைச் சேர்ந்த மனோகரனிடம் பேசினோம். ``பத்தாண்டுகளுக்கு முன் போதிய தண்ணீர் வரத்து இல்லாததால் எங்க ஆழ்துளைக் கிணற்றை மாற்றியமைச்சோம் அதேநேரம் பழைய ஆழ்துளை கிணற்றோட குழாய்களை அப்புறப்படுத்தாம மூடி வைச்சிருக்கோம். மழைக்காலத்தில் தண்ணீர் நிரம்பி வழியும்போது பழைய ஆழ்துளை கிணற்றைத் திறந்துவிடுவோம். தண்ணீர் முழுவதும் உள்ளுக்குள் இழுத்துக்கொள்ளும். இதனால் புதிய போர்வெல்லில் தண்ணீர் வளம் குறையாம இருக்கும். தற்போது ஒரு விவசாயி வெளியிட்டுள்ள வீடியோவைப் பார்த்தேன். மிகவும் நல்ல திட்டம். தண்ணீரை வாரிக்கொடுத்து, வாழவைக்கும் பூமித்தாய்க்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம். இனி இத்திட்டப்படி நீரைச் சேமிக்கவுள்ளேன். வீடுகளில் மழை நீரைச் சேமிக்க கட்டாயப்படுத்திய அரசு, போர்வெல் விவசாயிகளையும் இதுபோல மழை நீரைச் சேமிக்க கட்டாயப்படுத்துவது காலத்தின் கட்டாயம். இது மிகவும் அவசியம்" என்றார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``பாராட்டப்படவேண்டிய விவசாயி அவர். சாத்தியமான திட்டம்தான். வீடியோ செய்திகளைப் பொறியாளர்கள் மூலம் ஆய்வு செய்துவருகிறோம். விரைவில் இதுபற்றி அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும்" என்று முடித்தார்.