மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எனது இந்தியா!

எனது இந்தியா!

எனது இந்தியா!

ராஜ வாழ்க்கை!  

##~##

வரலாற்றில் நாம் படித்த மன்னர்களுக்கும், கதைகளில் வரும் மன்னர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. மன்னர்களின் பெயர்கள், அரசாண்ட வருடங்கள், போரில் அடைந்த வெற்றிகள், அரசாட்சி யின் சாதனைகள், தோல்விகள் ஆகியவை மட்டுமே பாடப் புத்தகங்களில் இருக்கின்றன. ஓர் அரசன் எத்தனை மணிக்கு எழுந்துகொள்வார், என்ன சாப்பிட்டார், எந்த விதமான உடைகளை அணிந்தார், எப்படி நீதிபரிபாலனம் செய்தார், எவ்வாறு உத்தரவு பிறப்பித்தார், எந்த இசையை விரும்பிக் கேட்டார், எந்தப் பெண்ணைக் காதலித்தார், யார் அவரது குரு... என்று, மன்னர்களின் ராஜ வாழ்க்கை பற்றி பல நூறு கேள்விகள் சாமான்யர்களின் மனதில் இருந்துகொண்டே இருக்கிறது. அதை எழுத்தாளனின் கற்பனைதான் பல நேரங்களில் பூர்த்தி செய்கிறது.

அப்படி என்றால், மன்னர்களின் அன்றாட நிகழ்வுகள் வரலாற்றில் பதிவு செய்யப்படவே இல்லையா? இந்த விஷயத்தில் மொகலாய மன்னர் கள் முன்னோடிகள். சக்கரவர்த்தி தூங்கி எழுந்ததில் இருந்து இரவு நடன விருந்து வரை அத்தனை முக்கிய நிகழ்வுகளையும் துல்லியமாக எழுதிவைத்து இருக்கிறார்கள்.

எனது இந்தியா!

அபுல்பாஸல் எழுதிய 'அக்பர்நாமா’, அப்துல் ஹமீத் லாஹுரி எழுதிய 'பாதுஷாநாமா’, ஜஹாங்கீர் வரலாற்றை அறிந்துகொள்ள உதவும் 'மஆத்திரி ரஹிமீ’, ஷாஜகான் பற்றி சாதிக் கான் எழுதிய 'தாரீக் இ ஷா ஜஹானி’ போன்ற நூல்கள், மொகலாய அரசர்களின் முழுமையான வாழ்க்கைப் பதிவேடு களாக இருக்கின்றன.

இந்த அரச சரிதங்களை வாசிக்கையில், ஒரு முக்கிய உண்மையை அறிந்துகொள்ள முடிகிறது. வெகு தூரத்தில் இருப்பவர்களைக்கூட தனக்குக் கீழ் அடிபணியச் செய்துவிடுகிறது அதிகாரம். ஆனால் அதுவே, கூடவே இருக்கும் குடும்பத்து மனிதர்களை அந்நியர்கள் ஆக்கி, உட்பகையையும் உருவாக்கி விடுகிறது.

காட்டில் மிகவும் உயரமாக வளர்ந்துவிட்ட மரம், மற்றவற்றில் இருந்து தனிமைப்பட்டுவிடும் என்பார்கள். விண்ணை முட்டுவது ஒரு வகையில் பெருமிதம், மறு வகையில்... அறிந்து தனிமைப் படுதல்.

உயரமாக வளர்ந்துவிட்ட மரத்துக்கு துணை இருக் காது. அதைக் காணும் மனிதன் தலையை உயர்த்தி அண்ணாந்து பார்த்து வியப்போடு பாராட்டுவான். அதே மரத்தை இன்னொரு மனிதன் இது யாருக்கும் பயனற்ற நெடுமரமாக நின்றிருக்கிறது எனக் கடுமை யாக விமர்சனம் செய்வான். இப்படி வியப்பும் விமர்சனமும் இணைந்ததுதான் மன்னர்களின் வாழ்க்கையும். பயம்தான் மன்னரின் ஒரே தோழன். அதை வெளிக்காட்டிக்கொள்ளவே முடியாது. அரசனின் வாழ்க்கை என்பது வெட்டவெளியில் ஏற்றிவைக்கப்பட்ட தங்க விளக்கு போன்றதே. காற்று எப்போது அதை அணைத்துவிடும் என்று யாருக்கும் தெரியாது.

எனது இந்தியா!

'நண்பர்களைப் பக்கத்தில் வைத்துக்கொள், எதிரிகளை மிகவும் பக்கத்தில் வைத்துக்கொள், இருவர் மீதும் கவனமாக இரு, இருவரில் யார் வேண்டுமானாலும் உன்னைக் கொல்லலாம்’ என்று மன்னர்களுக்கு ஆலோசனை சொல்வார்களாம். அதுதான், சரித்திரத்தில் நடந்திருக்கிறது. முக்கால் வாசி இந்தியாவை ஒரே குடையின் கீழ் ஆட்சி செய்த சக்கரவர்த்திக்குக்கூட அமைதியான நல்ல சாவு கிடைக்கவில்லை என்பதுதான் வரலாற்று உண்மை.

பிரம்மாண்டமான மாளிகையில் ஆயிரம் வேலை யாட்கள், பல நூறு காவலர்கள் சூழ, தங்கக் கட்டி லில் படுத்துக்கொண்டு, வெள்ளி டம்ளரில் பால் அருந்தியபடி மகிழ்வது மட்டுமே இல்லை அரசனின் வாழ்க்கை. ஒரு நாளில், அதிகாலை எழுந்ததில் இருந்து இரவு தூங்கும் வரை அவனது வேலைகள் முறையாகத் திட்டமிடப்பட்டன. இதற்காக, நேரத்தைப் பகிர்ந்து தரும் விசேஷ முறை ஒன்று அக்பர் காலத்தில் நடை முறையில் இருந்திருக்கிறது.

'ஐரோகா இ தர்ஷன்' என்பது, பொது மக்களுக்குக் காலையில் தரிசனம் தந்து திறந்தவெளி தர்பார் நடத்துவது. 'திவானி காஸ் ஒ ஆம்’ என்பது, அரச மண்டபத்தில் நடக்கும் தர்பார். 'குஷால் கானா’ என்பது, தனியறை சந்திப்பு. அலாவுதீன் கில்ஜி, சிறுபொருட்களின் விலைகளைக்கூட அவரே நிர்ணயம் செய்து இருக்கிறார். அக்பரும் பாபரும் அரசாங்க நடைமுறை ஒழுங்கினை நேரடியாகக் கவனித்து உள்ளனர். அரபுக் குதிரைகள் என்ன விலைக்கு வாங்கப்படுகின்றன என்பதில் இருந்து, உள்ளுர் சந்தையில் மாம்பழம் என்ன விலை என்பது வரை அக்பரின் நேரடிக் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

அரச பதவி என்பது ஆண்டவனின் அன்பளிப்பு. அது, ஆயிரம் நற்பண்புகள் பெற்ற ஒருவருக்கே கிடைக்கிறது என்கிறார் அபுல் பாஸல். பேராற் றல், பெருந்தன்மை, அளப்பறிய பொறுமை, முன் யோசனை, சான்றாண்மை, நேர்மை, கொடை மனம், குறையாத சிந்தனை, குற்றங்களை மன்னிக்கும் திறன், ஒப்புரவாண்மை, உயர் கருணை, சமய வேற்றுமை பாராத மனம், காலமறிந்து செயல்படுதல், எதற்கும் அஞ்சாத துணிச்சல், சுயநலமின்மை இத்தகைய பண்பு கள் இருப்பவரே சிறந்த அரசராகத் திகழ முடியும்.

மன்னரானவர் அதிகாலை 3 மணிக்கு எழுந் துகொள்கிறார். அதுவும், அவராக எழுவது இல்லை. துயில் எழுப்புவது மன்னருக்குப் பிடித்த ராணி யின் வேலை. மன்னர் எந்தப் பெண்ணோடு எந்த அறையில் தூங்கினாலும், துயில் எழுப்பும் ராணிதான் தினமும் எழுப்ப வேண்டும். சூரியன் உதயமாவதற்குள், மக்களைச் சந்திக்க மன்னர் தயாராகிவிட வேண்டும் என்பது நடைமுறை.

எனது இந்தியா!

பன்னீரும் ரோஜாப்பூக்களும் பெர்ஷியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட அரிய வாசனைத் திரவியங்கள் கலந்த நீரில் குளித்துவிட்டு தயாராக வேண்டும். இந்தக் குளியல் கூடத்தில் 12 பணியாட்கள் இருப்பார்கள். அவர்கள், மன்னர் குளிப்பதற்கான தண்ணீரைத் தனியே முத்திரையிட்டுப் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். இளம் சூடான தண்ணீரில்தான் மன்னர் குளிப்பார். சூடு எவ்வளவு இருக்கிறது என்பதைப் பரிசோதனை செய்ய தனியாக ஒரு பணியாள் இருந்தார்.

அதுபோல, மன்னரின் உடலுக்கு சந்தனம் மற்றும் வாசனைத் தைலங்களைத் தேய்த்துவிடுவதற்கு

எனது இந்தியா!

பணிப்பெண்கள் உண்டு. குளித்து முடிந்தவுடன் அவருக்காக விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட பட்டு வஸ்திரங்களில் எதை அவர் அணிந்துகொள்வது என்று தேர்வு செய்வார்கள். மன்னர் அந்த வஸ்திரத்தை அணிந்துகொண்டதும் சிறு பறை எழுப்பப்படும். அந்த ஓசை மன்னர் துயில் நீங்கி தனது நாளைத் துவக்கிவிட்டார் என்பதற்கான அறிவிப்பு.

அதன் பிறகு, அரண்மனை வைத்தியர் மன்ன ருக்கு நாடி பரிசோதனை செய்து, அவரது வயிற்று உபாதைகள், உஷ்ணம், நாக்கின் தன்மை, மூத்திர நிறம், மலத்தின் தன்மை, தோல் நிற மாற்றம், பாதங் களின் மிருது, சுவாச வேகம் போன்றவற்றை அறிந்து சொல்வார். மருத்துவரின் ஆலோசனைப்படி, என்ன உணவுகளை சாப்பிட வேண்டும், எந்த பழரசத்தை விலக்கிவைக்க வேண்டும் என்பதை மன்னர் முடிவு செய்துகொள்வார்.

இதற்குப் பிறகு, மன்னர் தனது குருவை, கடவுளை வணங்க வேண்டும். தினமும் அறவுரை வழங்க ஓர் ஞானி அரண்மனையில் இருப்பார். அவர் அன்றைக்கான ஞானவுரையை மன்னருக்கு சொல்வார். அதைப் பணிந்து கேட்டுக்கொள்ள வேண்டும். அது முடிந்தவுடன் மன்னருக்காக விசேஷமாக பூஜை செய்து கொண்டுவரப்பட்ட பொருட்களுடன் அர்ச்சகர்கள் காத்திருப்பார்கள். அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இந்தியர்கள் அதிகாலையில் சூரியனை வழிபடு கிறார்கள் என்பதால், சூரியனை வழிபடும் நேரத்தில் அரசன் தரிசனம் தருவது முக்கியமானது என்ற நடைமுறை, அக்பர் காலத்தில் இருந்து இருக்கிறது. அதனால், மன்னர் மக்களைச் சந்திப்பதற்காக அமைக்கப்பட்ட தனி மாடத்தில் நிற்பார். அதிகாலையிலேயே கூடி நிற்கும் மக்கள், மன்னரை வணங்கி வாழ்த்தொலி சொல்வார்கள். அதை ஏற்றுக்கொள்ளும் மன்னர், சூரியனை வணங்குவார். பின், மக்கள் குறை தீர்ப்பதற்கு திறந்தவெளி தர்பார் தொடங்கிவிடும். இது, ஒன்றரை மணி நேரம் நடக்கும். அந்த நேரத்தில், மக்கள் எளிதாக மன்னரை அணுகி தங்களின் பிரச்னைகளை முறையிடலாம். அங்கு கவனத்துக்குக் கொண்டுவரப்படும் பிரச்னைகள் முறையாக விசாரிக்கப்பட்டு நீதித் துறை எழுத்தர்கள் மூலம் குறிப்பு எடுக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும்.

எனது இந்தியா!