Published:Updated:

17 உயிர்கள் பலியானதற்கு காரணம் ஆதிக்கச்சுவர் மட்டுமல்ல...

மீட்புப்பணியில்...
பிரீமியம் ஸ்டோரி
News
மீட்புப்பணியில்...

தமிழகத்தை உலுக்கிய மேட்டுப்பாளையம் சோகம்

நம் சமூகம் எவ்வளவு ஏற்றத்தாழ்வு நிறைந்தது என்பதை உணர்த்தும் ஏராளமான உதாரணங்களில் ஒன்றுதான், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருக்கும் நடூர். ஒரு பக்கம் தொழிலதிபர்களின் பங்களாக்கள் வானுயர்ந்து நிற்க, அதற்கு அருகிலேயே அடிப்படை வசதிகளுக்கே அல்லல்பட்டுக்கொண்டிருக்கிறது கண்ணப்ப நகர் - ஏ.டி.காலனி.

மார்ச்சுவரி முன் சடலங்கள்
மார்ச்சுவரி முன் சடலங்கள்

நடூரில் உள்ள பங்களாக்களில் ஒன்று, சக்கரவர்த்தி துகில் மாளிகை உரிமையாளர் சிவசுப்பிரமணியத்துடையது. அவருடைய வீட்டுக்கும் பட்டியலின மக்கள் வசிக்கும் ஏ.டி.காலனி வீடுகளுக்கும் 10 அடி உயரம் வித்தியாசம் இருக்கும். இருப்பினும், மேலும் 15 அடி உயரத்துக்கு, கருங்கற்களால் சுற்றுச்சுவர் கட்டப்பட்டிருந்தது. சிவசுப்பிர மணியத்தின் வீடு உள்ள இடத்தின் ஒரு பகுதியை இந்த மக்கள் வழித்தடமாகப் பயன்படுத்தியதைத் தடுக்கவே, இவ்வளவு உயர சுற்றுச்சுவர் கட்டப்பட்டது என்பது ஏ.டி.காலனி மக்களின் குற்றச்சாட்டு. இதைக் கட்டும்போதே மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மீறியே இந்தச் சுவர் கட்டப்பட்டுள்ளது.

வரிசைகட்டிய புகார்கள்

‘சுவர் கட்டப்பட்டது சிவசுப்பிரமணியத்தின் பட்டா நிலத்தில்தான் என்றாலும், 15 அடி உயரத்துக்குத் தகுந்தாற்போல் அஸ்திவாரம் அமைக்கப்படவில்லை, பில்லர் போடவில்லை, உரிய அனுமதி வாங்கவில்லை’ என்று ஏராளமான புகார்கள் எழுகின்றன. அத்துடன், இவர்கள் வீட்டுக் கழிவுநீரும் நேரடியாக ஏ.டி.காலனிக்குத்தான் செல்கிறது. இவற்றைத் தவிர சாப்பாட்டு எச்சில்கள், நாப்கின்கள் என்று குப்பைகளை யெல்லாம் சுவருக்கு அந்தப் பக்கம் இருக்கும் குடியிருப்புகள்மீது போட்டுள்ளனர். இதை எதிர்த்து கேள்வி கேட்கச் சென்ற மக்களை, நாயை வைத்து விரட்டியுள்ளாராம் சிவசுப்பிரமணியம்.

சுவருக்கு அருகில் இருந்த ஒரு மரத்தின் வேர், இந்தச் சுவரைப் பிளந்துள்ளது. ஆபத்தை உணர்ந்த ஏ.டி.காலனி மக்கள், மீண்டும் சிவசுப்பிரமணியத்திடம் பேசினர். அவரிடமிருந்து சரியான பதில் கிடைக்காததால், தாசில்தார், காவல்துறை என அரசு இயந்திரங்களின் கதவுகளையும் தட்டியுள்ளனர். அவர்களும் இதை கண்டுகொள்ளவேயில்லை.

காவுவாங்கப்பட்ட உயிர்கள்

கடந்த சில வாரங்களாக மேட்டுப்பாளையத்தில் தொடர் மழை பெய்துவந்த நிலையில், டிசம்பர் 1-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மேட்டுப்பாளையத்தில் 180 மி.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது. நீரின் வேகத்துக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல், டிசம்பர் 2-ம் தேதி அதிகாலை சுற்றுச்சுவர் அப்படியே பட்டியலின மக்களின் குடியிருப்புமீது விழுந்துவிட்டது. என்ன நடந்தது என சுதாரிப்பதற்குள் மூன்று வீடுகளும் மண்ணோடு மண்ணாகப் புதைந்துவிட்டன. தூக்கத்தில் இருந்த 17 பேரின் மூச்சும் நிரந்தரமாக நின்றுபோனது. சிறிய அலறல் சத்தம்கூட இல்லாமல் அந்த அப்பாவிகளின் உயிர் அடங்கிபோனது.

1. மனு வாங்கும் முதல்வர்
2. ஆறுதல் கூறும் ஸ்டாலின்
1. மனு வாங்கும் முதல்வர் 2. ஆறுதல் கூறும் ஸ்டாலின்

ஏ.டி.காலனி மக்களுக்கு வேதனை விடியலாக இருந்தது அந்தத் திங்கள். மண்ணுக்குள் புதைந்த உயிர்களை எடுப்பதற்குள் சிவசுப்பிரமணியத்தின் குடும்பம் எஸ்கேப் ஆகிவிட்டது. தீயணைப்புத் துறை, காவல்துறை, ஆம்புலன்ஸ், ஜே.சி.பி என அனைத்தும் ஏ.டி.காலனியில் குவிந்தன. இடிபாடுகளைத் தோண்டத் தோண்ட சடலங்கள் வந்துகொண்டே இருந்தன. இறுதியாக 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. அந்த அதிர்ச்சியிலிருந்து மக்கள் மீள்வதற்குள், அவசர அவசரமாக பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டது. நேரம் ஆக ஆக, தகவல் பரவி அங்கே மக்கள் திரளத் தொடங்கினர். பதற்றம் படிப்படியாக அதிகரித்தது. ‘உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் வழங்கப்படும்’ என்று அறிவித்தார் முதல்வர். மக்களின் கொந்தளிப்பை இந்த அறிவிப்பால் எந்த வகையிலும் குறைக்க முடியவில்லை.

வெடித்தது போராட்டம்

அதே நாளில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பும் வெளியானது. ஏ.டி.காலனியில் போலீஸ் படை திடீரெனக் குவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த மேட்டுப்பாளையம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ-வான சின்ராஜ், மாவட்ட ஆட்சியர் ராஜாமணி ஆகியோர் விரட்டப்பட்டனர். உயிரிழந்தவர்களின் உறவினர்கள், அரசியல் கட்சியினர், தலித் அமைப்பினர் என்று கூட்டம் கூடவே, மதியம் 11 மணியளவில் பதற்றம் உச்சத்துக்கு வந்தது. ‘சிவசுப்பிரமணியத்தைக் கைதுசெய்யவேண்டும். 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். வீடு வேண்டும்’ என்று பலவிதமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

உடல் தகனத்தின்போது...
உடல் தகனத்தின்போது...

‘‘நாளை முதல்வர் வருகிறார். உங்களுக்கு எல்லாம் செய்து கொடுப்பார்’’ என்று அதிகாரிகள் சொல்லிக்கொண்டிருந்தனர். எதையும் கேட்கும் மனநிலையில் மக்கள் இல்லை. மறியல், ஆர்ப்பாட்டம், கோஷம் என்று தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. இவை அனைத்தும் ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட, சமூக வலைதளங்களிலும் பேசுபொருளானது.

தடியடி - அரச பயங்கரவாதம்

பிரச்னை தீவிரமடைவதை உணர்ந்த தமிழக அரசு, மாலைக்குமேல் தங்களது அணுகுமுறையை மாற்றியது. போராட்டத்தில் ஈடுபட்ட தலித் அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் அவருடன் வந்தவர்கள்மீது தடியடி நடத்தப்பட்டு கைதுசெய்யப்பட்டனர்.

மீட்புப்பணியில்...
மீட்புப்பணியில்...

அதன் பிறகு, அரசு திட்டப்படியே எல்லாம் நடந்தன. வெளியூர்க்காரரான ருக்குமணியின் உடலை அவரின் உறவினர்கள் வாங்க, அதையே சாக்காக வைத்துக்கொண்டு மற்ற உடல்களை சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றுவிட்டனர் காவல்துறையினர். உறவினர்கள் வேறு வழியின்றி சுடுகாட்டுக்குச் சென்றனர். அவசர அவசரமாக பெயர்கள் அறிவிக்கப்பட்டு, கையெழுத்து வாங்கப்பட்டது.

ஏ.டி.காலனி மக்கள், தங்கள் குடும்பங்களில் இறப்பவர்களின் உடலைப் புதைக்கும் வழக்கத்தை உடையவர்கள். ஆனால், 17 பேரின் சடலங்களையும் எரிப்பதற்கு அதிகாரிகள் ஏற்கெனவே ஏற்பாடு செய்திருந்தனர். காலையில் விரட்டப்பட்ட சின்ராஜ் எம்.எல்.ஏ, மாலையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் சுடுகாட்டில்

தான் தலைகாட்டினார். சுடுகாட்டுக்குச் செல்லும் வரை கரைவேஷ்டிகளை எங்கும் காண முடியவில்லை. உறவினர்களிடம் கலந்தாலோசிக்காமலேயே முறையான ஏற்பாடுகளின்றி சடலங்கள் எரிக்கப்பட்டன.

முதல்வர் வருகை

டிசம்பர் 3-ம் தேதி... ஆம்புலன்ஸ்கூட வர முடியாத அளவுக்கு மோசமாக இருந்த சாலைகள், முதல்வர் வருகைக்காக புதிதாகப் போடப்பட்டன. பாதைகள் சீர்செய்யப்பட்டன. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் காலையில் வந்து, போராட்டக் காரர்களின் கோரிக்கைகளை வலியுறுத்திவிட்டுச் செல்ல, மாலையில் முதல்வர், துணை முதல்வர், அதிகாரிகள் வந்தனர். அதற்குள், சிவசுப்பிரமணியம் கைதுசெய்யப்பட்டார். ஏற்கெனவே திட்டமிட்டபடி, பேட்ச் கொடுக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உறவினர்கள் ஒரு செட்டில் அமரவைக்கப்பட்டனர்.

விபத்து நடந்த இடத்துக்கு ஆய்வுக்காகச் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமியை முற்றுகையிட்ட மக்கள், ‘‘இத்தனை நாள் ஏன் வரல... எங்க பிரச்னை என்னனு கேட்க மாட்டீங்களா?’’ என்று குமுற, அருகில் வந்து அவர்களின் மனுக்களை வாங்கினார் எடப்பாடி. செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி, ‘`இறந்தோரின் குடும்பங்களுக்கு கூடுதலாக தலா ஆறு லட்சம் ரூபாய் மற்றும் அரசு வேலை தரப்படும்’’ என்று புதிய அறிவிப்பு களை வெளியிட்டார்.

இத்தனை உயிர்கள் பலியான பிறகே, அந்தப் பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள விதிமீறல் சுற்றுச்சுவர்கள் இடிக்கப்பட்டுள்ளன. ஏழையாகப் பிறந்த ஒரே காரணத்தால் ஓர் ஆதிக்கச்சுவருக்கு 17 அப்பாவிகள் பலியாகினர். சிவசுப்பிரமணியம் என்கிற ஒரு நபரைக் கைதுசெய்வதால் இத்தகைய வேதனைகள் முடிவுக்கு வந்துவிடாது. ஆண்டுக்கணக்கில் மனுக்கள் கொடுத்தும் அதை கண்டுகொள்ளாமல் இருந்த அத்தனை அதிகாரிகளையும் கைதுசெய்தால்தான் எதிர்காலத்தில் இதுபோன்ற துயரங்கள் நிகழாது.

17 உயிர்களின் பலிக்கு அரசு செய்ய வேண்டிய பரிகாரம் இதுதான்!

யார் இந்த சிவசுப்பிரமணியம்?

17 உயிர்கள் பலியானதற்கு காரணம் ஆதிக்கச்சுவர் மட்டுமல்ல...

வினாசி, திருப்பூர் பகுதிகளில் பிரபலமான தொழிலதிபர் சண்முகம் என்பவரின் நான்காவது மகன்தான் கிட்டு என்கிற சிவசுப்பிரமணியம். மேட்டுப்பாளையம், ஊட்டி இரண்டு ஊர்களிலும் சக்கரவர்த்தி துகில் மாளிகை இருக்கிறது. சூர்யா இன்டர்நேஷனல் ஹோட்டல், ஏலச்சீட்டு எனப் பல்வேறு தொழில் களும் இருக்கின்றன. அனைத்து தொழில்களிலும் சகோதரர்கள் நால்வருக்கும் பங்கு உள்ளது. சிவசுப்பிர மணியத்துக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அரசியல்வாதிகள், அதிகாரிகள் என எல்லோரிடமும் நல்ல தொடர்பு இருக்கிறது.

சிவசுப்பிரமணியம் சிறையில் இருப்பதால், அவரிடம் பேச முடியவில்லை. அவரின் அண்ணன் ஆறுமுகத்தை நீண்ட முயற்சிக்குப் பிறகே போனில் தொடர்புகொள்ள முடிந்தது. பதில் சொல்லாமல் நழுவிய அவர், பின்னர் போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார். எனவே, சிவசுப்பிரமணியம் தரப்பு கருத்தை அறிய முடியவில்லை.