மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எனது இந்தியா!

எனது இந்தியா!

எனது இந்தியா!

வாஸ்கோடகாமாவின் கடல் பயணம்  

##~##

இந்தியா மிகவும் வறுமையான நாடு. பொரு​ளா​தார ரீதியாகப் பெரிதும் பின்தங்கி இருக்கிறது. வன்முறையும், மக்கள் நெருக்கடியும், சீரழிந்த அரசியலும் இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிரவிடாது என்ற எண்ணம் உலகெங்கும் இன்று பரவி இருக்கிறது. ஆனால், இதே இந்தியா செல்வம் கொழிக்கும் தேசமாக, எப்படியாவது இந்தியாவுக்குப் போய் வணிகம் செய்ய வேண்டும் என்று உலகையே ஆசைகொள்ளவைத்த கனவு தேசமாக இருந்தது ஒரு காலம். அந்தப் பெருமையும் வளமும் காலச்சூழலில் மறைந்துபோய்விட்டன.  

கப்பல் வணிகத்தில் பாரசீகத்துக்குப் பிறகு புகழ்பெற்று விளங்கியவர்கள் போர்த்துக்கீசியர்களே. அதிலும், பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு போர்த்துக்கீசியர்கள் நாடு பிடிக்கும் கடற்பயணங்களில் தீவிரமாக ஆர்வம் காட்டினர். ஐரோப்பாவின் மேற்குக் கோடியில், ஆப்பிரிக்காவைத் தொட்டவண்ணம் இருக்கும் நாடு போர்ச்சுக்கல். அதன் தலைநகரம் லிஸ்பன். மூன்று பக்கங்களிலும் கடலால் சூழப்பட்ட நாடு இது. 15-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இளவரசர் ஹென்றி, புதிய கடல் வழி தேடும் பயணத்தைத் தொடங்கினார்.

1483-ல் 'டீகோ காவோ’ என்ற கப்பல் போர்ச்​சுக்கலில் இருந்து ஆப்பிரிக்காவின் காங்கோ ஆறு வரை கடலில் பயணம் செய்து திரும்பியது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 'பார்த்தலோமியோ டயஸ்’ என்ற கடலோடி, ஆப்பிரிக்கா கண்டத்தை கடல் வழியே கடந்து, இந்தியப் பெருங்கடலை எட்டிப் பார்த்தார். இவர்​தான், ஆப்பிரிக்காவின் தென்கோடி முனைக்கு 'நன்னம்பிக்கை முனை’ எனப்பெயர் சூட்டியது என்பார்கள்.

எனது இந்தியா!

கடலில் 'நன்னம்பிக்கை முனை’க்கு வந்துவிட்டால் அங்கே இருந்து இந்தியா நோக்கிப் போய்விடலாம் என்ற நம்பிக்கைதானே உருவாகும். அதன் காரணமாக இந்தப் பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

மிளகு, சந்தனம், தந்தம், ஏலம், அகில், தேக்கு என இந்தியாவில் கிடைக்கும் வாசனைப் பொருட்​களைத் தேடி கடலோடிகள் வழி தெரியாமல் அலைந்துகொண்டு இருந்த சூழலில், போர்த்துக்கீசிய மன்னரான டான் மேனுவல் தனது நாட்டில் இருந்த பிரபல ஜோதிடரான 'ஆபிரகாம் கோகடோ’வை அழைத்து வர ஆள் அனுப்பி இருந்தார்.

நடந்தவை, நடப்பவை, நடக்க இருப்பவை ஆகிய மூன்றையும் கோள்களின் மூலம் துல்லியமாக அறிந்து சொல்லிவிடக்கூடியவர் என லிஸ்பன் மாநகரில் புகழ்பெற்று இருந்தார் கோகடோ. மன்னர் அவரை உடனடியாக அழைப்பதாக காவலர்கள் சொன்னதும் எதற்காக அழைக்கிறார் எனப் புரியாமல் இரவோடு இரவாக அரண்மனைக்குச் சென்றார் கோகடோ.

மன்னர் எது குறித்து ஆரூடம் தெரிந்து​கொள்ள விரும்புகிறார் என்று பணிவான குரலில் கேட்டார் கோக​டோ. 'தனது பாட்டன், முப்பாட்​டன் காலத்தில் இருந்தே இந்தியாவுக்குக் கடல் வழி கண்டுபிடிக்க முயன்று தோற்றுப்போய்விட்டனர். தன்னுடைய காலத்திலாவது இந்தியாவுக்குப் போய், வணிகம் செய்ய சாத்தியம் இருக்கிறதா? கிரக நிலைகள் தனக்குச் சாதகமாக உள்ளதா என்பதை அறிந்து சொல்ல வேண்டும்’ என்று கேட்டார் மன்னர் டான் மேனுவல்.

மன்னரின் கிரக நிலைகளை மூன்று நாட்களுக்குள் ஆராய்ந்து பார்த்துப் பதில் தருவதாக சொல்லி விடைபெற்றார் கோகடோ. நான்காம் நாள் இரவு, மன்னர் ஆவலோடு காத்திருந்தார். கிரக நிலைக் குறிப்புகளுடன் சந்திக்க வந்த கோகடோ, ''மாமன்னரே, கடலின் வெகுதொலைவுக்கு அப்பால் இந்தியா இருக்கிறது. அங்கே இருப்பவர்கள் காட்டு​மிராண்டிகள். தங்கமும் வெள்ளியும் குவிந்துகிடக்கும் அந்த நாட்டுக்குப் போகும் கடல் வழி ஆபத்தானது. கப்பல் புயலில் மூழ்கிவிடும். மீறி, அந்த தேசத்துக்குள் நுழைபவர்கள் உயிரோடு தப்ப முடியாது. உங்களுடைய முன்னோர் ஜான் அரசன் தனது நம்பிக்கைக்கு உரிய அதிகாரிகளான பெத்ரோ கோவிலியன், அல்போன்சா பேவா ஆகிய இருவரையும் நிலம் வழியாக இந்தியாவைக் கண்டுபிடித்து வருமாறு அனுப்பிவைத்தார். அவர்கள் இருவரும் ஆப்பிரிக்​காவில் சுற்றி அலைந்தும் இந்தியாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பாதி வழியிலேயே பேவா இறந்தும் போனார்.

ஆனால், கோவிலியன் எப்படியோ சுற்றி அலைந்து இந்தியாவுக்குப் போனார். ஆனால், அவராலும் இந்தியாவுக்குச் செல்லும் வழியைத் துல்லியமாக அறிந்து சொல்ல முடியவில்லை. ஆகவே, உங்களது ஆசை எளிதாக நடந்துவிடக்கூடியது அல்ல. இப்போது, கிரக நிலைகள் உங்களுக்குச் சாதகமாக இருக்கிறது. நீங்கள் இந்தியாவுக்குக் கடல் வழி கண்டுபிடிக்கும் பணியை இப்போது மேற்கொண்டால், நிச்சயம் வெற்றி கிடைக்கும். நீங்களே இந்தியாவின் சக்கரவர்த்தியாகவும் ஆவீர்கள்'' என்றார்.

கோகடோவின் நல்வாக்கைக் கேட்ட மன்னர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அவருக்கு நிறையப் பரிசுகள் தந்ததோடு, இந்தியாவுக்கான கடல் வழி தேடும் பயணத்தை உடனே தொடங்க உத்தரவிட்டார்.

இதற்கென, லிஸ்பன் துறைமுகத்தில் மூன்று விசேஷக் கப்பல்கள் தயாரிக்கப்பட்டன. இரட்டை அடுக்குகொண்ட அந்தக் கப்பல்களில் பீரங்கிகள் பொருத்தப்பட்டன. தட்டுப்பாடு இல்லாத உணவும், மதுவும், ஆயுதங்களும், வெடிமருந்தும் நிரப்பப்பட்டன.  உடைகளும், விதவிதமான பரிசுப்பொருட்களும் ஏற்றப்​பட்டன, அரபு பேசத் தெரிந்த ஆட்கள் பணிக்கு அமர்த்தப்பட்டனர். ஒவ்வொரு கப்பலிலும் ஒரு மதபோதகர், ஒரு மருத்துவர் சென்றனர். கூடவே, வழியில் உள்ள ஆப்பிரிக்கப் பழங்குடி மக்களுடன் பேசிப் பழக வேண்டும் என்பதற்காக கறுப்பு அடிமைகள் கப்பலில் ஏற்றப்பட்டனர். பலவிதக் கடல் வரைபடங்களும், புயல் எச்சரிக்கைக் குறிப்புகளும் எடுத்துச் சென்றனர். வழியில் இடர் ஏற்பட்டால் பலி கொடுப்பதற்காக, மரண தண்டனைக் கைதிகள் 10 பேரும் உடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்தக் கடல் பயணத்துக்கு யாரை கேப்டனாக நியமிப்பது என்று முடிவு செய்ய முடியாமல், மன்னர் மேனுவல் குழப்பத்தில் இருந்தார். நாட்டின் மிகப் பெரிய மாலுமியான பார்த்தலோமியா டயஸ் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அடுத்து நியமித்த எஸ்வதோ நோயுற்று இறந்துபோனார். ஒரு நாள், அவரது சபையில் நடந்த விருந்தில் தற்செயலாக ஓர் இளைஞரைப் பார்த்தார். ராணுவ அதிகாரி போலத் தோற்றம்கொண்ட அந்த இளைஞர் மிடுக்காக நடந்து சென்றதைக் கண்ட மன்னர், அவரைப் பற்றி விசாரிக்கும்படி உத்தரவிட்டார். கடலோடி வம்சத்தைச் சேர்ந்தவர் என்று தெரிந்தவுடன், மறுநாள், அந்த இளைஞர் தன் முன்னே ஆஜராக வேண்டும் என உத்தரவு போட்டார்.

சபையில், மன்னர் முன்வந்து நின்ற அந்த இளைஞரின் பெயர் வாஸ்கோடகாமா. அவரைத் தனது

எனது இந்தியா!

இந்தியக் கடல் பயணத்துக்கு கேப்டனாக நியமித்து உள்ளதாக மன்னர் அறிவித்தார். ஆனால், ''நான் ஓர் உதவாக்கரை, இந்தப் பணிக்கு நான் தகுதி ஆனவன் இல்லை'' என்று மறுத்தார் வாஸ்கோடகாமா.

ஆனால், நாட்டின் எதிர்காலமும் தனது எதிர்​காலமும் இந்தக் கடல் பயணத்தில்தான் இருக்கிறது என்று மன்னர் வற்புறுத்தினார். ஆனால், மற்ற இரண்டு கப்பல்களுக்கு கேப்டனாக நியமிக்க ஆள் கிடைக்கவில்லை. ''உனக்கு சகோதரர்கள் இருக்கிறார்களா'' என்று, வாஸ்கோடகாமாவிடம் கேட்டார் மன்னர்.

''என்னோடு பிறந்தவர்கள் மூன்று பேர். ஒருவர் துறவி. அடுத்தவர் பாவ்லோ, ஒரு வழக்கில் நீதிபதியை அவமானப்படுத்திவிட்டார் என்று தண்டிக்கப்பட்டு இருக்கிறார். மற்றவர் பதின்வயது சிறுவன். மன்னர் எனது சகோதரர் பாவ்லோவின் தவறை மன்னித்து விடுதலை செய்தால், அவன் என்னோடு கடல் பயணத்தில் துணை வருவான்'' என்றார் வாஸ்கோடகாமா. உடனே, பாவ்லோவுக்கு பொது மன்னிப்பு அளித்து உத்தரவு விட்டார் மன்னர். மூன்றாவது கப்பலுக்கு தனது நண்பன் நிகோலஸ் கொய்லோ கேப்டனாகப் பணியாற்றுவான் என்று உறுதிஅளித்தார் வாஸ்கோடகாமா. சேன் மிகைல், சேன் கேபிரியல், சேன் ரபேல் என்ற அந்த மூன்று கப்பல்களும் பயணத்துக்குத் தயாராகின. இந்த மூன்று கப்பல்களுடன் சரக்கு ஏற்றிய துணைக் கப்பல் ஒன்றும் பின்னால் வருவது என முடிவு செய்யப்பட்டது. பொருத்தமான மாலுமிகள், கடல் அறிந்த பணியாளர்கள் என 150 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

1497-ம் ஆண்டு தேவாலயத்தின் சிறப்புப் பூஜைகளில் கலந்துகொண்டுவிட்டு, மன்னரின் ஆசி பெற்று வாஸ்கோடகாமாவின் கடல் பயணம் தொடங்கியது. கடல் காற்று மோசமாக இருந்த காரணத்தால் முதல் மூன்று நாட்களும் கப்பல்கள் மெதுவாகச் சென்றன. நான்காவது நாள், கடல் காற்று சீரானதும் கப்பல் வேகம் எடுக்கத் தொடங்கின. அவர்கள் நினைத்தது போல பயணம் எளிதாக இல்லை. புயலில் சிக்கி கப்பல்கள் தடுமாறின.

ஒரு மாதப் பயணத்துக்குப் பிறகு, நன்னம்பிக்கை முனையை நோக்கி நகர்ந்தனர். நினைத்தபடியே இந்தியா போவதற்காக கப்பல் ஊழியர்களை அடித்தும் உதைத்தும் வேலை வாங்கிக்கொண்டு இருந்தார் வாஸ்கோடகாமா. அவரது மூர்க்கமான அலறல் கேட்டு, பணியாளர்கள் பயந்து போய் வேலை செய்தனர். இதற்கிடையில், பொருட்கள் ஏற்றிவந்த துணைக் கப்பல் தீப்பிடித்து எரிந்துவிட்டது. அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவானது. இந்தியாவைக் கண்டுபிடிக்காவிட்டால், கடலிலேயே சாக வேண்டியதுதான் என்று அறிவித்தார் வாஸ்கோடகாமா. இதனால், கப்பலில் கிளர்ச்சி ஏற்பட்டு வன்முறை வெடித்தது. இரும்புக் கரம்​கொண்டு கிளர்ச்சியாளர்களை ஒடுக்கிய வாஸ்கோடகாமா, மூன்று கப்பல்களும் இணைந்து பயணம் செய்ய ஏற்பாடு செய்தார். கோப்ரா வெர்தா தீவுகளைத் தாண்டி ஆப்பிரிக்கக் கடற்கரை ஓரமாக கப்பல்கள் செல்லத் தொடங்கின. ஆப்பிரிக்காவின் பல்வேறு நிலப் பகுதிகள் வெவ்வேறு சுல்தான்களால் ஆளப்பட்டு வருவதையும், அவர்களுக்குள் சண்டையும் சச்சரவும் அதிகமாக இருப்பதையும் அறிந்த வாஸ்கோடகாமா, மொசாம்பிக் நகரில் பிரவேசித்தார். எதிர்பார்த்த வரவேற்பு அங்கே கிடைக்கவில்லை. அதனால், கென்யா நாட்டின் மெலிந்தி நகருக்குச் சென்றார் வாஸ்கோடகாமா. அங்கே, சுல்தான் அவர்களை வரவேற்று போர்த்துக்கீசியர்களுடன் ஒரு நல்லுறவு ஒப்பந்தம் செய்துகொண்டதோடு, கடல் பயணத்தில் வழிகாட்ட அரபுக் கடலோடிகளை உடன் அனுப்பிவைக்கவும் ஒப்புக்கொண்டார்.

வாஸ்கோடகாமாவின் கனவு மெள்ள நனவாக ஆரம்பித்தது. இந்தியப் பெருங்கடலில் சுற்றி அலைந்து அதன் கொடும் காற்றையும் புயலையும் நன்கு அறிந்த மாலுமியான அஹ்மத் இபின் மஜித்தின் துணையைப் பெற்றார். 1498-ல் கப்பல்கள் மீண்டும் கிளம்பின. இந்த முறை தென் மேற்குப் பருவக் காற்று அவர்களுக்கு சாதகமாக இருந்தது. கப்பல்கள் வேகமாகச் செல்லத் தொடங்கின. 23 நாட்களிலேயே இந்தியாவின் மலபார் கடற்கரையை மூன்று கப்பல்களும் அடைந்துவிட்டன.

எனது இந்தியா!