வெடிகுண்டு வீசிக் கொல்லப்பட்ட தூத்துக்குடி காவலர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி! - தமிழக அரசு #NowAtVikatan

18.8.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!
தூத்துக்குடி காவலர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி!
தூத்துக்குடியில் ரவுடியைக் கைது செய்யும் முயற்சியில், நாட்டு வெடிகுண்டு வீசிக் கொலை செய்யப்பட்ட ஆழ்வார் திருநகரி தலைமைக் காவலர் சுப்பிரமணியன் குடும்பத்துக்கு, தமிழக அரசு சார்பில் ரூ.50 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அவரது குடும்பத்தில் ஒருவருக்குத் தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்க உத்தரவிட்டிருப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.
தமிழகத்தில் புதிதாக 5,709 பேருக்குத் தொற்று!
தமிழகத்தில் இன்று மட்டும் 5,709 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,49,654-ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,850பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதையடுத்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 2,89,787 ஆக அதிகரித்தது. தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 121 என அதிகரித்த நிலையில், மொத்த எண்ணிக்கை 6,007-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மேலும் 1,182 பேருக்குத் தொற்று!
சென்னையில் மட்டும் இன்று 1,182 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,19,059 ஆக அதிகரித்துள்ளது.
மத்தியப்பிரதேச அரசுப் பணி, மாநில மக்களுக்கு மட்டுமே!
`மத்தியப்பிரதேச அரசுப் பணியில், அந்த மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் மட்டுமே சேர முடியும்’ என்று முதலமைச்சர் சிவராஜ்சிங் சௌகான் அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக விரைவில் சட்டம் ஒன்றை இயற்ற இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து பேசிய சிவராஜ்சிங் சௌகான், ``மத்தியப்பிரதேச அரசு முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. மாநில அரசுப் பணிகள் இந்த மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கே கிடைக்கும் வகையில், அதற்கான சட்டரீதியான பணிகளை மேற்கொண்டுவருகிறோம். மத்தியப்பிரதேசத்தின் வளங்கள் அனைத்தும் இந்த மாநிலத்தின் குழந்தைகளுக்கே போய்ச் சேர வேண்டும்’’ என்று தெரிவித்தார். `அரசுப் பணிகளில் உள்ளூர் மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்’ என்று சிவராஜ்சிங் சௌகான் ஏற்கெனவே கூறியிருந்தார்.
வெடிகுண்டு வீசிக் காவலர் கொலை!
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே ரௌடியை பிடிக்கச் சென்ற போலீஸ்மீது வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. நாட்டு வெடிகுண்டுகளை ரௌடிகள் பயன்படுத்தியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதில் படுகாயமடைந்த காவலர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மாரியப்பன் தங்கவேலு பெயர் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை!

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு பெயர் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா பெயரும் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. விளையாட்டுப் பிரிவில், இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதான கேல் ரத்னா விருதுக்கு மாரியப்பன் தங்கவேலு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதை தமிழக மக்கள் வரவேற்றுள்ளனர்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று, குணமடைந்தார். பின்னர் வீடு திரும்பிய அமித் ஷா தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். இந்த நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித் ஷா அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ``கடந்த சில நாள்களாக அமித் ஷாவுக்கு உடல்வலி மற்றும் உடற்சோர்வு ஏற்பட்டிருந்தது. அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று ஏதும் இல்லை. தற்போது அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நலமுடன் உள்ளார். மருத்துவமனையிலிருந்து தனது பணியைத் தொடர்ந்து செய்வார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழாவை எப்படி அனுமதிக்க முடியும்?

விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. இந்த விசாரணையில் நீதிமன்றம், ``ஒரு நாளில் சுமார் 6,000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்படும் இந்தச் சூழலில், எப்படி விநாயகர் சதுர்த்தி விழாவை அனுமதிக்க முடியும்?” என கண்டித்துள்ளது. மேலும், ``இது போன்ற மனுக்களைத் தாக்கல் செய்து உயர் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம்’’ என்றும் கூறியிருக்கிறது.
தூத்துக்குடிக்கு ஸ்டெர்லைட் ஆலை விதிக்கப்பட்ட தடை தொடரும்!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. 39 நாள்கள் விசாரிக்கப்பட்ட வழக்கின் வாதங்கள் அனைத்தும் முடிந்த நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு தற்போது தனது தீர்ப்பை வழங்கி வருகிறது. சீல் வைக்கப்பட்டது எதிராக ஸ்டெர்லைட் நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம். இதனால் தூத்துக்குடிக்கு ஸ்டெர்லைட் ஆலை விதிக்கப்பட்ட தடை தொடரும்.
27 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு:

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 லட்சத்தைக் கடந்திருக்கிறது. மொத்த பாதிப்பு 27,02,743 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 55,079 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 876 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 51,797 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 19,77,780 ஆகவும் உயர்ந்துள்ளது.
தமிழக அரசு மேல்முறையீடு!

உடுமலை சங்கர் கொலை வழக்கில் கௌசல்யாவின் தந்தை சின்னசாமி உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது. மேலும் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரின் தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக சென்னை உயர் நீதிமன்றம் குறைத்ததற்கும் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் உடுமலை சங்கர் கொலை வழக்கு தொடர்பான விசாரணைகள் விரைவில் உச்ச நீதிமன்றத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: இன்று முக்கிய தீர்ப்பு!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. 39 நாள்கள் விசாரிக்கப்பட்ட வழக்கின் வாதங்கள் அனைத்தும் முடிந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு இன்று தங்களது தீர்ப்பை வழங்குகிறது.
இனி கல்வி அமைச்சகம்!

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் பெயரை மாற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கி உள்ளார். புதிய கல்விக்கொள்கை அறிவிக்கப்பட்டபோது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சக பெயரை கல்வி அமைச்சகம் என மாற்றும் முடிவை மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.