விகடன் வரவேற்பறை
தோட்டத்து மேசையில் பறவைகள் இன்றைய ஐரோப்பிய புது எழுத்து
இந்திரன்
வெளியீடு: சந்தியா பதிப்பகம்,
77, 53-வது தெரு, 9-வது அவென்யூ, சென்னை-600083.
பக்கங்கள்:160 விலை:

120

2011-ம் ஆண்டுக்கான மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது வென்ற கலை இலக்கிய விமர்சகர் இந்திரனின் புத்தகம். அவர் சந்தித்த 10 ஐரோப்பிய எழுத்தாளர்கள் குறித்து எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு இது. நேர்காணல்களுடன், அவர்களுடைய படைப்புகளின் சில கீற்றுகளை மொழிபெயர்த்து இணைத்துள்ளது பாராட்டத்தக்கது. புக்கர் பரிசு பெற்றஎழுத்தாளர் 'கடல்’ நாவலாசிரியர் ஜான் பான்வில், பெஞ்சமின் பிளேக் என்ற பெயரில் துப்பறியும் நாவல்கள் எழுதுவதைக் குறிப்பிடும் இந்திரன், 'தமிழ்நாட்டில் ஒருவர் ஒரே நேரத்தில் சுந்தர ராமசாமியாகவும் ராஜேஷ்குமாராகவும் இருக்க அனுமதிப்பார்களா என்ன?’ என்று அதிசயிக்கிறார். 'கடல்’ நாவலைத் தமிழில் மொழிபெயர்த்த ஜி.குப்புசாமியைச் சந்திக்க மறுத்ததற்கு ஜான் பான்வில் சொல்லும் காரணம் ரொம்பவே சுவாரஸ்யமானது.
இனிய இணையம்!
http://cybersimman.wordpress.com

இணைய உலகத் தொழில்நுட்பத்தின் புதிய எல்லைகளை அறிமுகப்படுத்தும் வலைப்பூ. கனவுகளுக்கு அர்த்தம் சொல் லும் தளம், அன்பைத் தெரிவிக்கும் விண்ணப்பம் போன்ற பலவகை இணைய சேவைகளைப் பற்றிய அறிமுகமும் ட்விட்டரால் நடந்த திருமணம், ஐ-போனால் பிறந்த குழந்தை போன்ற பதிவுகளும் பளிச்.
பென்னி குயிக் கட்டிய சேப்பாக்கம்!
http://tnpsc.gov.in/

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம். ட்ராப் டவுண் மெனு, தமிழ் - ஆங்கிலப் பதிவுகள் என அசரடிக்கும் வடிவமைப்பு. அரசுப் பணிகளுக்கான அறிவிக்கைகள், ஆன்லைன் விண்ணப்பங்கள், தேர்வறை அனுமதிச் சீட்டுத் தரவிறக்கம், கேள்வித் தாள்கள் என சில க்ளிக்குகளில் உங்கள் தேர்வறை அனுமதியை உறுதி செய்ய உதவும் தளம். 'முல்லைப் பெரியாறு அணை கட்டிய அதே பென்னி குயிக்தான் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்பின் செயலராக 1865-ம் ஆண்டு அரசாங்கத்திடம் வேண்டுகோள் வைத்து, சேப்பாக்கத்தில் கிரிக்கெட் கிளப் அமையவும் காரணமாக இருந்தார். ஆல் ரவுண்டரான இவர், ஒரு போட்டியில் 9 விக்கெட்டுகளைப் பறித்திருக்கிறார்!’- இப்படியான தளத்தின் வரலாற்றுப் பதிவுகளில் அவ்வளவு சுவாரஸ்யம்!
அய்யனார்
இயக்கம்: கேசவ நாராயணன் வெளியீடு: Blue ants

தீயதை அழித்து ஊரைக் காக்கும் அய்ய னாரைப் போல நம்முள் இருக்கும் காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சர்யம் ஆகிய ஆறு கெட்ட குணங்களை அழித்தால், நாமும் கடவுள் ஆகலாம் என்பது இந்தப் படத்தின் ஒன் லைன். கிராமத்துக்கு வரும் ஞானி போன்ற ஒருவரிடம் அனைவரும் பலவித வேண்டுதல்களை முன்வைக்கிறார்கள். 'ஏன் எதற்கெடுத்தாலும் கடவுளைத் தேடு கிறீர்கள்? உங்கள் உழைப்பால் எல்லாவற்றையும் அடையலாம்’ என்று மக்களுக்கு அய்யனாரை உதாரணம் காட்டிப் போதிக்கிறார் ஞானி. சிம்பிள் கதையை 3டி அனிமேஷன் சுவாரஸ் யம் ஆக்குகிறது.
நான் ஈ இசை: மரகதமணி
வெளியீடு: சரிகம விலை:

99

'அழகன்’, 'வானமே எல்லை’, 'தேவ ராகம்’ படங்களில் ரசிக்கவைத்த மரகதமணியின் இசை. கார்த்திக் குரலில் ஒலிக்கும் 'வீசும் வெளிச்சத்திலே...’ காலர் டியூன் மெலடி. 'ஈடா ஈடா...’ பாடலில் 'கண்ணு ரெண்டும் தீடா... நரகம் உந்தன் வீடா மாத்திடுவேன் வாடா!’ என டைமிங் ரைமிங்கில் பின்னி எடுக்கிறார் கவிஞர் கார்க்கி. 'கொஞ்சம் கொஞ்சம்...’ மெலடி விஜய் பிரகாஷின் குரலில் செம ஸ்டைலாக ஒலிக்கிறது. அச்சு, ஷிவானி பாடிய 'லாவா லாவா...’ பாட்டு நிச்சயம் வில்லனுக்கானதாக இருக்கும். ஏக்கம் ததும்பும் பாடலில், 'உன் துளி அழகில் நான் தொலைந்தேன்... உன் முழு அழகில் நான் அழிவேன்... ஆனாலும் ஆனாலும் உன்னை அடைந்திடுவேன்...’ என மோக தாபத்தில் ஈர்க்கிறது அச்சுவின் குரல்.