விகடன் வரவேற்பறை
திரைச் சுவைகள் மேஜர்தாசன்
வெளியீடு: பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை, சென்னை-600 108.
பக்கம்:336 விலை

390

சினிமா நிருபர் மேஜர்தாசனுடைய அனுபவங்களின் தொகுப்பு. சொன்ன நேரத்துக்கு வராத நடிகர்களை 'சாபம்’ மூலம் கிளியாக மாற்றிவிடுகிற விட்டலாச்சாரியாரின் 'திறமை’, 'கல்தூண்’ நாடகம் முழுவதையும் தரையில் அமர்ந்து ரசித்த எம்.ஜி.ஆரின் புகைப்படம், மிகப் பெரிய மீசை வைத்திருக்கும் பி.பி.ஸ்ரீநிவாஸ், மாடி வீட்டு ஏழை சந்திரபாபு எனப் பிரபலங்களைப் பற்றிய ஒவ்வொரு தகவலும் புகைப்படமும் அரிய களஞ்சியம். எந்த அரசு விருதும் கௌரவிக்காத மாபெரும் கலைஞன் நாகேஷ் தனக்கு வழங்கப்பட்ட ஷீல்டுகளைத் தீயில் போட்டு எரித்த பின்னணி, தேவாலயத்தின் கதவுகளைச் சாத்திக்கொண்டு எம்.ஜிஆர்., ஏவி.எம். சரவணன் முன்னிலையில் நடிகர் அசோகன் செய்துகொண்ட காதல் கல்யாணம் என அடுக்கப்பட்டு இருக்கும் செய்திகளின் தொகுப்பு, இரண்டாம் பாகத்துக்கான எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது!
மனம் கொத்திப் பறவை
இசை: டி.இமான் வெளியீடு: யுனிவர்சல் மியூஸிக் விலை:

99

'ஜல் ஜல், டங் டங், போ போ’ - மூன்று பாடல்களின் ஓப்பனிங் வரிகளே இவைதான். ஆனால், இந்தச் சிறு வார்த்தைகளை வைத்து இமான் கட்டி இருக்கும் மெட்டுக் கோட்டை அதிரடிக்கிறது. 'ஜல் ஜல்...’ பாடலில் ஆலாப் ராஜுவின் குரலுக்கு அழகாகச் சுதி சேர்க்கிறது சுர்முகியின் ஆலாபனை. காதல் தோல்விப் பாடலுக்கான ஃபீலிங்ஸ் ஏந்தி ஒலிக்கிறது 'போ போ...’ பாடல். 'நீ தாலி கட்டிப்போ... நான் வாழாவெட்டிப் போ...’ என ஆண் குரல் ஒலிக்குமிடம் அருமை. சாய் சரண், மாளவிகா குரல்களில் 'டங் டங்...’ காமெடி கலாட்டா மேளா. 'ஆச்சின்னா மனோரமா... பேச்சுன்னா பாப்பையா... மூச்சுன்னா நீதான்’ என்றெல்லாம் குறும்புக் கவி பாடி இருக்கிறார் கவிஞர் யுகபாரதி. சந்தோஷ் ஹரிஹரன் குரலில் 'ஊரான ஊருக்குள்ள...’ பாடலின் உறுமி மேளம் பாடல் முடிந்த பின்னரும் மனசுக்குள் அதிர்வலைகளை ஒலிக்கச் செய்கிறது!
J/K குவார்ட்டர் கட்டிங்
இயக்கம்: பாலாஜி சண்முகம் வெளியீடு: பத்து

''என் லவ்வர் த்ரிஷா மாதிரி இருப்பா சார்... அவளுக்கு இன்னைக்கு கல்யாணம்'' என்று புலம்பியபடி குடிக்கும் ஒருவன், பைக்கைக் கிளப்புகிறான். க்ளைமாக்ஸில் மது 72 ரூபாய், சைட்டிஷ் 27 ரூபாய், கிளாஸ் வாட்டர் 9 ரூபாய் ஆகியவற்றின் கூட்டுத் தொகையாக 108 ஆம்புலன்ஸைக் காட்டுவது புத்திசாலித்தனம். ஆறு நிமிடப் படம்தான். அதில் டாஸ்மாக் நடத்தும் அரசாங்கமே ஆம்புலன்ஸ் சேவை செய்வது, பகல் நேர குடி, சினிமா நடிகையின் தாக்கம், அரசியல் அலப்பரைகள் எனக் கலந்து கட்டி ரசிக்கவைக்கிறார்கள்!
நேசித்து வாசிக்க ஒரு தளம்!
http://thoguppukal.wordpress.com

மார்க்சிம் கார்க்கி, வைக்கம் முஹம்மது பஷீர், ஜெயகாந்தன், ஜி.நாகராஜன், ஹெப்சிபா ஜேசுதாசன், அ.முத்துலிங்கம், கோணங்கி எனப் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்புத் தொகுப்பு நிரம்பிய தளம். எஸ்.ராமகிருஷ்ணன் பரிந்துரைத்த தமிழின் சிறந்த 100 சிறுகதைகளில் 88 கதைகள், ஜெயமோகன் பரிந்துரைத்த தமிழின் சிறந்த சிறுகதைகள், ஆய்வுக் கட்டுரைகள் என வாசக சுவாரஸ்யம் கொடுக்கும் படைப்புகளால் நிரம்பி இருக்கும் தளம்!
இவ்வளவுதான் இந்தியா!
www.mapsofindia.com

பல பிரிவுகளில் இந்தியாவைப் பிரதிபலிக்கும் வரைபடங்கள் (map) கொட்டிக்கிடக்கும் தளம். இரு நகரங்களுக்கு இடையிலான தூரத்தை விசாரித்தால், அந்தத் தகவலோடு, போகும் வழியின் லேண்ட் மார்க்குகளையும் அடுக்குகிறார்கள். (திருச்சியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும்போது முதல் மூன்று 'ரைட்’களுக்குப் பிறகு முத்தையா கோயில் வரும்!) நகரங்களின் சிறப்பு, தங்கும், உணவு வசதிகள் எனச் சுற்றுலா திட்டமிடலுக்கான தேவைகள் அனைத்தும் ஒரே தளத்தில் நிறைந்திருக்கின்றன!