ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

''விடுதலை அல்லது மரணம்!''

தொடரும் செங்கல்பட்டு முகாம் போராட்டம்

##~##
''விடுதலை அல்லது மரணம்!''

'வழக்குகளை விரைந்து முடித்து, எங்களைத் திறந்தவெளி முகாமுக்கு அனுப்புங்கள்’ என்ற கோரிக்கைகளோடு, மீண்டும் உண்ணாவிரதப் போராட்​டத்தில் குதித்து உள்ளனர், செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 16-ம் தேதியில் இருந்து உண்ணாவிரதம் தொடர்​ந்து நடக்கிறது. 

''மொத்தம் உள்ள 32 பேரில் 12 பேர் உண்ணாவிரதம் இருந்து வருகிறோம். கடந்த முறை உண்ணாவிரதம் இருந்தபோது எங்கள் கோரிக்கைகளை 45 நாட்களுக்குள் நிறை​வேற்று​வதாகச் சொன்னார்கள். அது போலியான வாக்குறுதியாகி விட்டது. இந்த முறை, நாங்கள் வாழ்வதைவிட சாவதே மேல் என முடிவு எடுத்து​விட்டோம். விடுதலை அல்லது மரணம் என்ற முடிவோடு போராட்டத்தில் இருக்கிறோம். முகாமில் இருக்கும் இன்னும் சிலரும் உண்ணாவிரதத்துக்குத் தயாராகி வருகிறார்கள்.

பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகளோ இன்னும் 45 நாட்கள் அவகாசம் கேட்கிறார்கள். அதிகாரி​களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும். கட்டுப்பட வேண்டும். ஒழுக்கத்தை கடைப்பிடிக்க​வேண்டும் என்றுதான் இதுவரை அமைதியாகவே இருந்தோம். இதுவரை 12 முறை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி விட்டோம்'' என்று கொந்தளித்தனர்.

''விடுதலை அல்லது மரணம்!''

உண்ணாவிரதம் இருப்பவர்களைப் பார்ப்பதற்காக 22-ம் தேதி காலை 10 மணிக்கு ம.தி.மு.க. பிரமுகர்களோடு முகாம் வாசலுக்கு அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா வந்தார். ''இன்று விடுமுறை. அதுமட்டும் இல்லாமல் ரத்த உறவுகள் மட்டும்தான் பார்க்க அனுமதி உண்டு. நீங்கள தலைமைச் செயலர் மற்றும் கியூ பிரிவின் முறையான அனுமதி வாங்கி வந்தால்தான் அனுமதிப்போம்'' என்று அவர்களுக்குத் தடை போட்டுவிட்டுச் சென்​றார் தாசில்தார் வெங்கடேசன்.

''விடுதலை அல்லது மரணம்!''

நம்மிடம் பேசிய மல்லை சத்யா, ''சிறப்பு முகாம் என்ற பெயரில் நம் தமிழர்கள் அடைபட்டுக் கிடக்கிறார்கள்.  அவர்கள் நிரபராதி என்று நீதிமன்றம் சொன்னாலும், இங்கே உள்ள காவல்துறையினர் அவர்கள் மீது பொய்யான வழக்குகளைப் போட்டு வெளியே வரமுடியாத அளவுக்கு உள்ளேயே முடக்கி வைத்து உள்ளனர். விடுதலை கேட்டு 12 பேர் அஹிம்சை முறையில் 16-ம் தேதியில் இருந்து உண்ணாவிரதம் மேற்கொண்டு உள்ளனர். இந்தப் போராட்டத்தை முன் னெடுத்துச் செல்பவர்களைச் சந்தித்து, அவர் களின் குறைகளைக் கேட்பதற்காக தலைவர் வைகோவின் ஆணைப்படி நாங்கள்

''விடுதலை அல்லது மரணம்!''

வந்தோம். 'சிறப்பு அனுமதி வேண்டும். நீங்கள் ரத்த சம்பந்தப்பட்ட உறவா?’ என்று கேட்டு அனு மதிக்க மறுக்கிறார்கள். சோனியா மகள் பிரியங்கா  எப்படி வேலூர் சிறையில் இருக்கும் நளினியைச் சந்தித்தார்? அப்போது அனுமதி எப்படி கொடுத்தீர்கள்? அன்று விடுமுறை தினம்தானே! நளினிக்கும் பிரியங்​காவுக்கும் ரத்த உறவு இருக்கிறதா?

இலங்கையில் பாதுகாப்பு இல்லை என்றுதானே தமிழர்கள் தமிழகத்தை நோக்கி வருகிறார்கள். இங்கேயும் அவர்களை அடைப்பது எவ்விதத்தில் நியாயம்? இப்போதாவது தமிழக அரசு முகாமில் இருக்கும் அப்பாவித் தமிழர்களை விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்'' என்று பொங்கினார்.

மல்லை சத்யா கிளம்பிய சிறிது நேரத்திலேயே முகாமில் உள்ள ஒருவர், மரத்தின் மேலே ஏறிக் குதிக்கப்போகிறார் என்ற தகவல் கிடைக்க... அங்கு விரைந்தோம். முகாமில் இருந்த பெரிய அரச மரத்தின் உச்சியில் இருந்த ஒருவர், ''எங்களை விடுவியுங்கள்'' என்று உரத்த குரலில் சத்த​மிட்டுக் கொண்டு இருந்தார்.

தகவல் அறிந்து மல்லை சத்யாவும் திரும்பி வந்தார். ''என் பெயர் விக்ரம் சிங்கம். நான் களவு செய்தேனா, கற்பழித்தேனா? என்னை ஏன் இந்த முகாமில் அடைத்து சித்ரவதை செய்கிறீர்கள்? தொப்புள் கொடி உறவு, தொப்புள் கொடி உறவு என சொன்னீர்களே... அதைக் கேட்டுத்​தானே இங்கே வந்தோம்? இங்கே சிறையில் வைத்து சித்ரவதை செய்கிறீர்களே? எங்களுக்கு விடுதலை வேண்டும்! இல்லை என்றால் நாங்கள் இந்த மரத்தில் இருந்து குதித்து  தற்கொலை செய்து​ கொள்வோம். எங்களின் வீரமரணம் தமிழ் நாட்டின் கறுப்பு தினமாக இருக்கட்டும். எங்கள் இறப்பு தமிழகத்​தில் உள்ள முகாம்களை மூடுவதற்கான வாசலாக அமைய ​வேண்டும்'' என்று எச்சரிக்கை விடுத்தார். அதைத் தொடர்ந்து இன்னொரு முகாம் வாசியும் மரத்தின் மீது ஏற... பரபரப்பு கூடியது.

கீழே இருந்த சத்யாவோ, ''நான் வைகோவின் பிரதிநிதி சத்யா வந்திருக்கிறேன். தலைவர் உங்கள் விடுதலைக்காகப் பேச்சுவார்த்தை நடத்த என்னை அனுப்பி இருக்கிறார். இன்று விடுமுறை தினம் என்பதால், அதிகாரிகள் வரவில்லை. ஆகவே, நாளை நிச்சயம் அதிகாரிகளிடம் பேசி உங்கள் விடுதலைக்கு வழி ஏற்படுத்துவோம். தயவுசெய்து தலைவர் மீது நம்பிக்கை வைத்து இறங்குங்கள்'' என்றார் உரத்த குரலில் கெஞ்சலாக. அந்த வாக்குறுதியை மதித்து கீழே இறங்கினார்.

வியாழக்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த பலர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உண்ணாவிரதத்தை தொடர்கின்றனர். இப்போது மேலும் சிலர் முகாமில் உண்ணாவிரதத்தில் இறங்கியுள்ளனர்.

- பா.ஜெயவேல்