வேலை நிறுத்தத்தில் நெய்வேலி
##~## |

'வேலை நிறுத்தம் செய்ய மாட்டோம்’ என்று அறிவித்து இருந்த நெய்வேலி அனல் மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளர்கள், 'நெய்வேலியில் உற்பத்தி ஆகும் மொத்த மின்சாரத்தையும் தமிழ்நாட்டுக்கே தரவேண்டும்’ என்பது போன்ற பல கோரிக்கைகளுடன் போராட்டத்தில் குதித்து இருக்கிறார்கள்.
போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் வெங்கடேசனைச் சந்தித்தோம். ''வேலை நிறுத்தம் செய்ய மாட்டோம் என்று ஒப்பந்தம் போட்டது உண்மைதான். இப்போது அதை மீறி இருப்பதும் உண்மைதான். ஆனால் எங்களை மீற வைத்ததே என்.எல்.சி நிர்வாகம்தான். ஒப்பந்தத்தில் சொல்லப்பட்ட எந்த ஒரு முடிவையும் இன்னமும் நிர்வாகம் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கும்போது நாங்கள் மட்டும் எப்படி அதை பொறுத்துக்கொண்டு இருக்க முடியும்.
உதாரணமாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒப்பந்தத் தொழிலாளர்களில் 5,000 பேரை பணி மூப்பு அடிப்படையில் நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது பிரதானக் கோரிக்கை. அதை ஏற்றுக்கொண்ட

நிர்வாகம், இன்னமும் அதில் ஒருவரைக்கூட பணி நிரந்தரம் செய்யவில்லை. அதனால் கடந்த 2010-ம் ஆண்டே 39 நாட்கள் வேலை நிறுத்தம் செய்தோம். அப்போதும் சில உடன்படிக்கைகளைச் செய்துகொண்டது நிர்வாகம். ஊதியத்தில் 1,560 ரூபாய் உயர்த்துவது, பி.எஃப். டிரஸ்ட்டை நெய்வேலிக்கே மாற்றுவது, வாஷிங் அலவன்ஸை 25 ரூபாயாக உயர்த்துவது என்று பலவற்றையும் ஏற்றுக்கொண்ட நிர்வாகம், அதில் ஒன்றைக்கூட இன்னமும் செய்து தரவில்லை. அன்று முதல் இன்று வரை வேலை நிறுத்தம் செய்யாமல் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், மனு கொடுப்பது என்று எல்லாவற்றையும் செய்து பார்த்தும் நிர்வாகம் அசைந்து கொடுக்கவில்லை. அதனால்தான் முறைப்படி அறிவிப்பும் வேலை நிறுத்த நோட்டீஸும் கொடுத்துவிட்டு போராட்டத்தில் இறங்கி இருக்கிறோம்'' என்று சொன்னார்.
போராட்டத்தை ஒருங்கிணைக்கும் ஏ.ஐ.டி.யு.சி. கடலூர் மாவட்டச் செயலாளர் சேகர், ''உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைத் தமிழ்நாட்டுக்கே தரவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இரண்டு ஆண்டுகளில் 480 நாட்கள் பணி முடித்தவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். காலியாக உள்ள 2,000 வீடுகளை ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கே தரவேண்டும். திருமண

மண்டபங்களில் உயர்த்தப்பட்ட வாடகையைத் திரும்பப்பெற வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் புதிய பணி நியமனம் பற்றி வழக்கு இருப்பதால், ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய முடியவில்லை என்கிறார்கள். ஆனால், 2010-ம் ஆண்டு 14,000 என்று இருந்த நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 17,961 ஆக உயர்ந்தது எப்படி? ஒப்பந்தத் தொழிலாளர்களை ஏமாற்றிவிட்டு, புதிய ஆட்களை பணியில் அமர்த்துகிறார்கள். ஒரு நிரந்தரத் தீர்வு ஏற்படும் வரை, இந்தப் போராட்டத்தைக் கைவிடுவதாக இல்லை. தர்ணா, மறியல், அனல்மின் நிலைய முற்றுகை என்று தொடர் போராட்டங்களை நடத்தப்போகிறோம்'' என்று ஆவேசப்பட்டார்.

என்.எல்.சி. நிறுவனத்தின் பி.ஆர்.ஓ-வான ஸ்ரீதரிடம் பேசினோம். ''ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்யத்தான் சீனியாரிட்டி லிஸ்ட்டை வெளியிட்டோம். ஆனால், அவர்களே சொசைட்டி அது, இது என்று பல்வேறு குழப்பங்களைச் செய்து பணி நிரந்தரம் செய்யவிடாமல் குழப்பி விட்டார்கள். 21 மற்றும் 30-வது வட்டங்களில் மின்சார வசதி கேட்டவர்கள் அனைவருக்கும் கொடுத்து விட்டோம். கேட்காதவர்களுக்கு எப்படிக் கொடுக்க முடியும்? அவர்களது மற்ற கோரிக்கைகளும் நிர்வாகத்தால் பரிசீலிக்கப்பட்டு உடனுக்குடன் செய்து தரப்படுகிறது. உற்பத்தியாகும் மின்சாரத்தை தமிழ்நாட்டுக்கே தர வேண்டும் என்பது இங்குள்ள நிர்வாகம் எடுக்கக்கூடிய முடிவு அல்ல. அது, மத்திய அரசு எடுக்க வேண்டிய முடிவு. தொழிலாளர்கள் மற்றும் அவர்களது ஊதிய விகிதங்கள், சலுகைகள் நாடு முழுவதற்குமான பொது விஷயம். அதனால், இங்கு மட்டும் ஒரு முடிவை எடுத்து விட முடியாது. இந்தச் சிக்கல் அவர்களுக்கும் தெரியும். ஆனாலும், போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. வெகுசீக்கிரம் பிரச்னை முடிவுக்கு வந்து விடும்'' என்று நம்பிக்கையுடன் சொன்னார்.
இப்போது நடந்து வரும் வேலை நிறுத்தத்தால் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி பாதியாகக் குறைந்துவிட்டது. இரண்டு அனல் மின் நிலையங்களிலும் உள்ள நிலக்கரி இருப்பும் வேகமாக குறைந்து வருகிறது. அதனால், வெகு சீக்கிரமே மின்சார உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.
ஏற்கெனவே, மின்தட்டுப்பாடு மக்களை வாட்டி எடுக்கிறது. இதுபோன்ற போராட்டங்கள் காரணமாக மேலும் சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை!
- கரு.முத்து