ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

கெட்ட வார்த்தை... கோடி புண்ணியம்!

வந்தாச்சு அழுக்கு மூட்டை சாமியார்

##~##
கெட்ட வார்த்தை... கோடி புண்ணியம்!

ம் நாட்டில் வெரைட்டி ரைஸ்களை விட சாமியார் ரகங்கள் ஏராளம். அதில், கரூரைக் கலக்கிவரும் அழுக்கு மூட்டைச் சாமியார், ரொம்பப் புது ரகம். 

கரூரில் முக்கியப் பிரமுகர்கள் குடிஇருக்கும் அண்ணாநகர் ஏரியாவைத் தேடி கடந்த ஒரு வாரமாக மக்கள்வெள்ளம் படை எடுக்கிறது. காரணம், அழுக்கு மூட்டைச் சாமியார் விஜயம்.

அழுக்கு மூட்டை சாமியாரை இரவு நேரத்தில்தான் தரிசனம் செய்ய முடியும் என்று சொல்லப்பட்டதால், நள்ளிரவு 1.30 மணிக்கு ஸ்பாட்டில் ஆஜரானோம். கம்பி கேட் போட்ட ஒரு வீடு. அதன் உள்ளே நின்ற ஆம்னி வேனுக்கு அருகில், ஒரு கட்டிலில் டேபிள் ஃபேன் காற்றில் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இருந்தார். மேலே மட்டும் பச்சை நிற அங்கி... கீழே எதுவும் இல்லை. அந்த நேரத்திலும் கேட்டுக்கு வெளியிலும் வாசலிலும் சாமியாரைப் பார்க்க கிட்டத்தட்ட 200 பேர் கூடி இருந்தனர். சிலர் அக்கம்பக்கத்து வீட்டு வாசலில் அமர்ந்து தியானம் செய்தபடி இருந்தனர். சிலர் அங்கப்பிரதட்சணம் செய்வதும், நெடுஞ்சாண் கிடையாக உள்ளே இருப்பவரை நோக்கி விழுவதும் எழுவதுமாக இருந்தனர்.

கெட்ட வார்த்தை... கோடி புண்ணியம்!

திடீரென்று பக்தர்கள் குரல் ஓங்கி ஒலிக்கவே, திரும்பிப் பார்த்தோம். ''சாமி கண்ணைத் தொறந்துட்​

கெட்ட வார்த்தை... கோடி புண்ணியம்!

டாரு...'' என்றபடி கும்பல் எழுந்து நிற்க... சாமியார் படுத்திருந்த நிலையிலேயே இரண்டு விரலைத் தூக்கிக் காண்பித்தார். அருகில் இருந்த உதவியாளர் ஒரு துணி எடுத்து சுத்தம் செய்தபடி, ''சாமியார் குழந்தை மாதிரி... அதனாலதான் இப்படி'' என்று சகஜமாகப் பேசிக்கொண்டனர்.

சுத்தப்படுத்தும் பணி முடிந்ததும் சாமியார் கத்தியபடி வாயைத் திறக்க... அவரது உதவியாளர் துண்டு புகையிலையைக் கொடுத்தார். அதை வாயில் கடித்து மென்றபடி கேட்டுக்கு வெளியில் நிற்கும் கூட்டத்தைப் பார்த்து பச்சை பச்சையாக தமிழில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தை​களாலும் திட்டினார். ''ஏண்டா நாய்​களா... சொன்னாக் கேக்க மாட்டீங்களா..? உங்க வேலை​யைப் பார்த்துட்டுப் போங்கடா...'' என்பதை மட்டும்தான் பிரசுரம் செய்ய இயலும்.

அதைத் தெய்வ வாக்காக எடுத்துக்கொண்டு, ''எந்தத் திசையில் போகணும் சாமி?'' என்று சில பெண்கள் கேட்க, ''வடக்கால இருந்து தெக்கால போங்கடி'' என்றார். உடனே பக்தர்கள் அனைவரும் 'ஸ்ரீ அழுக்கு மூட்டையார் நமஹ...’ என்று முனகியபடி தெற்கு திசை நோக்கி கொஞ்ச தூரம் நடந்து மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே வந்தனர்.

''அப்புறம் என்ன சாமி செய்றது?'' என்று கேட்​கவும், மீண்டும் தனது கெட்ட வார்த்தை அர்ச்சனையைத் தொடங்கினார்.

''இன்னைக்கு நல்ல தரிசனம்'' என்றபடி கூட்டத்தினர் நெருங்கி நிற்க, ''போங்கடி... போங்கடா'' என்று சாமியார் எகிறத் தொடங்கவே, ''எல்லாரும் கலைஞ்சு​ போங்க'' என்று உதவியாளர் சொன்ன பிறகே பக்தர்கள் நகர்கிறார்கள். கூல்டிரிங்ஸ், பூ, பால், வாழைப்பழம், ஹார்லிக்ஸ் போன்றவற்றை சாமிக்குக் கொடுக்கச் சொல்லி உள்ளே நீட்ட... ''இதை எவனுக்குக்காவது கொண்டுபோய் கொடுங்கடி...'' என்றவர் சோர்ந்துபோய் மீண்டும் கட்டிலில் படுத்தார்.

இதற்கிடையில் நாம் போட்டோ எடுக்க முயல... அதைப் பார்த்த சாமியார் திரும்பவும் கத்த ஆரம்பித்​தார். அவரது மெய்க்காப்பாளர் ஒருவர், ''சாமிக்குப் போட்டோ எடுக்குறது பிடிக்கல. உடனே போட்டோவை அழிச்சிருங்க. சொன்னாக் கேளுங்க... இவர்தான் நம்மைப் படைச்சவர்'' என்றார்.

அவரை ஓரங்கட்டி பேச்சுக் கொடுத்தோம். ''பழநி பக்கத்துல இருக்குற கணக்கம்பட்டியிலதான் சாமி இதுவரை இருந்தார். முந்தி இவருக்கும் சரக்கு, கஞ்சான்னு எல்லா பழக்கமும் இருந்துச்சு. கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. மனைவியைப் போட்டு தினமும் அடிச்சுக் கொடுமைப்படுத்துவாரு. ஒரு காலத்துல, சித்தர் ஒருத்தர் இவருக்கு தீட்சை கொடுத்தார். உடனே இப்படி மாறிட்டார். லேசுல குளிக்கவே மாட்டார். மக்களோட அழுக்கு மூட்டையை எல்​லாம் வாங்கிக்கிடுறார், அதனாலதான் அழுக்கு மூட்டை சாமின்னு சொல்றோம். சாமிகிட்ட கெட்ட வார்த்தையில திட்டு வாங்கினா, அது கோடி புண்ணியம். அதனால, அவரைப் பார்க்க ஊர்விட்டு, நாடுவிட்டு எல்லாம் வர ஆரம்பிச்சிட்டாங்க.

சாமியைப் பார்க்க வர்றவங்க அவர் சொல்றதை எல்லாம் செய்யணும். திடீர்னு கீழே குனிஞ்சு கல் எடுக்கச் சொல்லுவாரு. அதை எல்லாம் ஒரு இடத்துல குவிச்சு வைக்கச் சொல்லி, அந்தக் கல்லை எடுத்தே அவங்களை அடிப்பார். 'நான் எது சொன்னாலும் கேப்பியா முட்டாளே... கல் பொறுக்கச் சொன்ன நான் முட்டாள்னா... ஏன், எதுக்குன்னு கேக்காம அதை அப்படியே செய்யும் நீ எவ்வளவு பெரிய முட்டாப் பய’ன்னு சொல்லி வாழ்க்கையின் தத்துவத்தைப்(?) புரிய வைப்பாரு'' என்று சொல்லிக்கொண்டே போக தலை கிறுகிறுத்துத் திரும்பினோம்.

என்ன, போய்ப் பார்க்கத் தோணுதா?

- ஞா.அண்ணாமலை ராஜா