அதிர்ச்சியில் மன்னார்குடி
##~## |

'டி.ஆர்.பாலு மீது நேரடியாக மோத முடியாமல் பட்டுக்கோட்டை - மன்னார்குடி ரயில்வே திட்டம் வேண்டும் என்று போராடிய அப்பாவி வியாபாரிகளை ரெய்டு என்றபெயரில் தி.மு.க-வைச் சேர்ந்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் மிரட்டுகிறார்’ என்று கோபத்தில் கண் சிவக்கிறார்கள் மன்னார்குடி மக்கள்.
மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கத்தின் தஞ்சை நாடாளுமன்றத் தொகுதிக்குள்தான், டி.ஆர்.பாலுவின் சொந்த ஊரான தளிக்கோட்டை இருக்கிறது. தன் சொந்தத் தொகுதிக்குள் கால்பதிக்க ஆசைப்பட்ட டி.ஆர்.பாலு தனது மகன் டி.ஆர்.பி.ராஜாவை தி.மு.க சார்பில் போட்டியிட வைத்து, வெற்றியும் பெற வைத்தார். மன்னார்குடி மக்களின் நீண்டகால கோரிக்கையான பட்டுக்கோட்டை - மன்னார்குடி - நீடாமங்கலம் ரயில்வேத் திட்டத்தைக் கொண்டு வந்தார். அதில் முதல்கட்டமாக மன்னார்குடி - நீடாமங்கலம் புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டுவிட்டது. இதனால், டி.ஆர்.பாலுவுக்கு மன்னார்குடி பகுதியில் ஆதரவு பெருகியது. இந்த நிலையில் 'பட்டுக்கோட்டை - மன்னார்குடி புதிய ரயில் பாதைத் திட்டமும் விரைவில் செயல்படுத்தப்படும்’ என்று டி.ஆர்.பாலு அறிவித்தார். இதில்தான் பிரச்னை ஆரம்பமானது.

புதிய ரயில் பாதைத் திட்டத்தால் பாதிக்கப்படுபவர்கள், பழனிமாணிக்கத்திடம் முறையிட்டு, இந்தத் திட்டத்தை நிறுத்தக் கோரினார்கள். இது தொடர்பாக பட்டுக்கோட்டையில் ஏப்ரல் 1-ம் தேதி கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட பழனிமாணிக்கம், 'பட்டுக்கோட்டை - மன்னார்குடி புதிய ரயில் திட்டத்தால் இந்தப் பகுதிக்கு எந்தப் பயனும் இல்லை. அதனால் 99.99 சதவிகிதம் இந்தத் திட்டம் நடக்காமல் நான் பார்த்துக்கொள்கிறேன். இங்குள்ள மக்களுக்கு எது வசதி என்பது உள்ளுர்க்காரனுக்குத்தான் தெரியும். விருந்தாளியாக வந்து போகிறவருக்குத் தெரியாது' என்று டி.ஆர்.பாலுவை மறைமுகமாக குத்திக் காட்டிப் பேசினார். இதை கடந்த 11.4.2012 ஜூ.வி. இதழில் 'விருந்தாளிக்கு என்ன தெரியும்?’ என்ற தலைப்பில் எழுதி இருந்தோம்.

இந்த விவகாரம் குறித்து தி.மு.க. மேலிடத்தில் இருந்து பழனிமாணிக்கத்திடம் விளக்கம் கேட்கப்பட்டதாம். இதில் அப்செட்டான பழனிமாணிக்கம் பட்டுக்கோட்டையில் கடந்த ஏப்ரல் 14-ம் தேதி நடந்த

கலந்தாய்வுக் கூட்டத்தில், ''பட்டுக்கோட்டை - மன்னார்குடி ரயில்வேத் திட்டத்தை நான் ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை. அந்தப் பகுதிகளில் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளைக் கணக்கில்கொண்டு, பொது மக்களின் கருத்தையும் கேட்டு செயல்படுத்த வேண்டும்'' என்று தன் நிலையை மாற்றிக் கொண்டார்.
இதைஅடுத்து, கடந்த ஏப்ரல் 24-ம் தேதி மன்னார்குடியில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட திருவாரூர் பா.ஜ.க மாவட்டத் தலைவர் சிவ.காமராஜ், மன்னார்குடி வர்த்தக சங்கப் பொதுச்செயலாளர் சேதுராமன் ஆகியோர் வீடுகளிலும், அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் திடீரென அதிரடி ரெய்டு நடத்தியது பெரும் விவகாரமாக வெடித்துள்ளது.
இதுகுறித்துப் பேசிய திருவாரூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கத் தலைவர் ஹரேஸ் என்ற சுவாமிநாதன், ''மன்னார்குடி ரயில்வே பாதை என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட 40 ஆண்டு கால கனவு. இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தவர் டி.ஆர்.பாலு. இந்தத் திட்டத்துக்கு முதலில் எங்கள் தொகுதி எம்.பி. பழனிமாணிக்கம் எதிர்ப்பு தெரிவித்தார். அதனால், அனைத்து சங் கங்களும் மற்ற கட்சிகளுடன் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. அன்றைய தினமே பொறுப்பாளர்கள் மிரட்டப்பட்டார்கள்.
பழனிமாணிக்கத்தின் ஆதரவாளர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து, 'அண்ணன் எந்தத் துறைக்கு அமைச்சர்னு தெரியுமா? உங்கள் மீது ரெய்டு வந்தால் என்ன செய்வீர்கள்?’ என்று அதிகாரத் தோரணையில் மிரட்ட ஆரம்பித்தனர். இப்போது அது உண்மையாகி விட்டது. குறிப்பாக போராட்டத்தில் கலந்துகொண்ட பிரமுகர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையாகத்தான் இந்த ரெய்டு நடந்து உள்ளது. கட்சி ரீதியிலான பிரச்னை என்றால் டி.ஆர்.பாலுவிடம் நேரடியாக மோத வேண்டுமே தவிர, சாதாரண மக்களிடம் அதிகாரத்தைக் காட்டக்கூடாது'' என்றார்.
ரெய்டில் சிக்கிய திருவாரூர் பா.ஜ.க மாவட்டத் தலைவர் சிவ.காமராஜ், ''மன்னார்குடியில் எனக்குச் சொந்தமான இடம்கூட இல்லை. நகராட்சிக் கட்டடத்தில் வாடகைக்கு ஒரு கடை வச்சிருக்கேன். அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் நான், 'ஒரு தி.மு.க-வின் எம்.பி. கொண்டுவரும் திட்டத்தை தி.மு.க-வின் இன்னொரு எம்.பி-யே எதிர்ப்பது இங்கேதான் நடக்கிறது. பழனிமாணிக்கத்துக்குப் பிடிக்கலைன்னா அவர் பேசாமல் இருக்கட்டும். நல்லது செய்யா விட்டாலும் கெடுதல் பண்ணாம இருக்கலாம்’ என்றுதான் பேசினேன். ஒரு கருத்து சொல்லக்கூட எனக்கு உரிமை இல்லையா?'' என வேதனைப்பட்டார்.
இதுபற்றி மத்திய தி.மு.க. நிதித்துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கத்திடம் கேட்டபோது, ''அப்படியா... அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது'' என்பதோடு நிறுத்திக் கொண்டார். வருமான வரித்துறை நடத்தி இருப்பது நிதித்துறை அமைச்சருக்கே தெரியாது... என்றால் தன்னுடைய துறையில் என்ன நடக்கிறது என்று அவருக்கே தெரியாதா?
மக்களுக்கான நல்ல திட்டத்தில் அரசியல் உள்குத்து தேவைதானா?
- சி.சுரேஷ், படங்கள் கே.குணசீலன்