ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

'பிட்' மாணவர்களுக்குக் கை கொடுத்த கல்லூரி!

கிறுகிறு கிருஷ்ணகிரி

##~##
'பிட்' மாணவர்களுக்குக் கை கொடுத்த கல்லூரி!

திருவண்ணாமலையில் ஆசிரியர்களே பிட் கொடுத்த சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள், அடுத்த ஷாக்! 

கிருஷ்ணகிரியில் உள்ள சிவகாமியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்டது. கல்லூரி மாணவர்கள் தேர்வு எழுதிக்கொண்டு இருந்தபோது, பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் முத்துச்செழியன், இந்தக் கல்லூரிக்கு திடீர் விசிட் செய்து இருக்கிறார். அப்போது, சில மாணவர்கள் புத்தகத்தைப் பார்த்தே  தேர்வு எழுதிக்கொண்டு இருந்ததையும், தேர்வுக் கண்காணிப்பாளர் அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதையும் பார்த்து அதிர்ந்தார். சம்பவ இடத்திலேயே, தேர்வுக்கண்காணிப்பாளராக இருந்த பேராசிரியர்கள் இருவரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார். அதோடு பல்கலைக்கழகத் தேர்வுகள் முடியும்வரை, அந்தக் கல்லூரியைக் கண்காணிக்க தனிப்படையும் அமைத்தார்.

'பிட்' மாணவர்களுக்குக் கை கொடுத்த கல்லூரி!

''பெரியார் பல்கலைக்கழகத்தில் இது​போன்று தவறுகள் நடப்பது மிகவும் சாதாரணமான விஷயம்தான். ஏனென்​றால், விடைத்தாள்களை மாணவர்கள் வீட்டுக்கே எடுத்துச் சென்று, எழுதிக் கொண்டுவந்த சம்பவங்கள் எல்லாம் நடந்து இருக்கிறது. பணம் கொடுத்து ​விட்டால், இங்கே எதுவும் நடக்கும். இப்போது சிக்கி இருப்பது ஒரே ஒரு கல்லூரிதான். பெரும்பாலான கல்லூரிகளில் இப்படித்தான் நடக்கிறது. பல்கலைக் கழகத்துக்குத் தொடர்பே இல்லாத ஒரு குழுவைப் போட்டு விசாரணை செய்தால்தான், அனைத்து உண்மைகளும் வெளிச்சத்துக்கு வரும்'' என்று ஆதங்கத்துடன் சொல்கிறார் பல்கலைக்கழகத்தில் முக்கியப் பொறுப்பு வகிக்கும் பேராசிரியர் ஒருவர்.

சிவகாமியம்மாள் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பிரகா​ஷிடம் பேசினோம். ''தேர்வு எழுதவரும் மாண​வர்களைச் சோதனை செய்த காரணத்தால் ஒரு சிலர் தற்கொலை வரை போயிருக்கிறார்கள். அதனால், மாணவர் களைக் கண்டிப்புடன் சோதனை செய்வது கிடையாது. மாணவர்கள் பிட் அடித்திருந்தால், தவறுகளை விசாரிக்கும் பல்கலைக்கழகக் கமிட்டி முன், மாணவர்களை ஆஜர் செய்து இருக்க வேண்டும். அதைவிடுத்து, எங்கள் கல்லூரி மீது மட்டும் ஏன் இவ்வளவு கோபம் காட்டுகிறார் என்பது புரியவில்லை. நாங்கள் வளர்வதைப் பிடிக்காத சிலர்தான் இப்படி அசிங்கப்படுத்துகிறார்கள்'' என்று நியாயப் படுத்தினார்.

பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முத்துச்செழியனிடம் பேசினோம். ''தவறுகளை நியாயப்படுத்துவது இன்னொரு தவறுக்கு அடித்தளம் இட்டு விடும். பட்டம் பெறுவதற்குக் குறுக்கு வழிகளை நாடும் மாணவர்களையோ, அவர்களுக்குத் துணை நிற்கும் ஆசிரியர்களையோ, கண்டிக்காமல் விட முடியாது. சிவகாமியம்மாள் கல்லூரியில் மாணவர்கள் செய்த காரியம் ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்துக்கும் வெட்கக்கேடானது. இனி வருங்காலத்தில் யாருக்கும் இப்படி ஓர் எண்ணம் ஏற்படவே கூடாது என்பதற்காகத்தான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மற்றபடி யாரையும் பழிவாங்குவது எங்கள் நோக்கம் அல்ல'' என்றார்.

- எஸ்.ராஜாசெல்லம்

படங்கள்: எம்.தமிழ்ச்செல்வன்