கூடங்குள குழப்ப நிலவரம்
##~## |

கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் திறப்பதற்கு வசதியாக, சுற்றுப்புறக் கிராமங்களின் வளர்ச்சிக்காக

500 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியது. இந்த நிதியைப் பெறுவதற்கு ஆளாய் பறக்கும் பஞ்சாயத்து உறுப்பினர்கள், 'மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகளுக்கான பணியையும் உடனே தொடங்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுக்கும் அளவுக்கு நிலைமையில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.
விழி பிதுங்கும் வழக்குகள்
அணு உலைக்கு எதிராகப் போராடி வரும் மக்கள் மீது தினமும் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. போராட்ட ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரன் மீது மட்டும் நூற்றுக்கும் அதிகமான வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. இதுதவிர, போராட்டத்தில் ஈடுபட்ட 55,795 பேர் மீது 199 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. இவர்களில் 3,600 பேர் மீது 'தேசத்துக்கு எதிராகப் போர் தொடுத்தல்’ உள்ளிட்ட 21 பிரிவுகளில் வழக்குப் பதிவாகி இருக்கிறது. இவர்களைத் தவிர, ஒவ்வொரு எஃப்.ஐ.ஆரிலும், 'மேலும் சிலர்’ என குறிப்பிடப்பட்டு இருப்பதால் அதில் அப்பாவி மக்களைச் சேர்க்க வாய்ப்பு இருப்பதாகப் பதறுகிறார்கள், இடிந்தகரை கிராம மக்கள்.

உள்ளூரில் எதிர்ப்பு
அணு உலைக்கு எதிரான தொடர் போராட்டம் நடக்கும் இடிந்தகரை கிராமம், விஜயாபதி பஞ்சாயத்துக்கு உட்பட்டது. இந்தப் பஞ்சாயத்துத் தலைவரான சகாய பெட்லின் எஜித்தின், போராட்டக் குழுவில் இருந்து ஒதுங்கியதுடன், இந்தப் பகுதியின் வளர்ச்சிக்காக அரசு ஒதுக்கி இருக்கும் நிதியை பெறுவதில் தீவிரம் காட்டுகிறார். இதனால் இரு தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது.
இந்தநிலையில், பஞ்சாயத்து தலைவரின் கணவர் சகாயராஜ் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் காவல் நிலையத்துக்கு சென்று சுப.உதயகுமாரன், புஷ்பராயன் ஆகியோரின் தூண்டுதலில் இடிந்தகரை கிராமத்தைச் சேர்ந்த சிலர் தங்களைத் தாக்கி விட்டதாக புகார் கொடுத்தனர். இதன் அடிப்படையில் உதயகுமாரன், புஷ்பராயன் உள்ளிட்டோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவாகி இருக்கிறது. 'இது, போராட்டத்தை ஒடுக்குவதற்காக இடிந்தகரை கிராமத்தில் எதிர்ப்புக் குழுவை உருவாக்கும் உளவுத்துறையின் முயற்சி’ என்று குற்றம் சாட்டுகிறார், புஷ்பராயன்.

அடுத்தடுத்து அணு உலைகள்!
கூடங்குளத்தைச் சுற்றிலும் இருக்கும் 13 பஞ்சாயத்துகளைத் தேர்வு செய்த மாவட்ட நிர்வாகம்

500 கோடியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது. ராதாபுரம், வள்ளியூர் பஞ்சாயத்து உறுப்பினர்கள், 'எங்களுக்கும் அணு உலைகளால் பாதிப்பு ஏற்படும். நாங்கள் போராடாமல் இருந்ததற்காக எங்களைப் புறக்கணிக்கலாமா? எங்களுக்கும் வளர்ச்சி நிதியில் பங்கு வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனர்.
அத்துடன் நிறுத்தாமல், 'அணு உலை 3 மற்றும் 4 ஆகியவற்றுக்கான பணிகளையும் விரைவாகத் தொடங்க வேண்டும்’ என்றும் விநோத கோரிக்கை வைத்தனர். இந்திய அணுசக்தி கழகத் தலைவர் எஸ்.கே.ஜெயின் சமீபத்தில் கூடங்குளம் வந்தார். அப்போது ஆவரைக்குளம் பஞ்சாயத்துத் தலைவர் பாஸ்கர் தலைமையில் 32 பஞ்சாயத்துகளின் தலைவர்கள் அவரைச் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்து நிதி பெறுவதில் முனைப்புடன் இருக்கின்றனர்.
ரஷ்ய விஞ்ஞானியின் நம்பிக்கை
இந்தியாவுடன் அணு உலைக்கான ஒப்பந்தத்தில் ஈடுபட்டு இருக்கும் ரஷ்யாவின் ஆடம் ஸ்டிராய் எக்ஸ்போர்ட் நிறுவனத்தின் தலைவரான லிமெரிகோ வெலரி கடந்த 19-ம் தேதி கூடங்கூளம் வந்தார். அணு உலைகளைச் சுற்றிப் பார்த்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'ஜப்பான் விபத்துக்குப் பிறகும் சீனா, வியட்நாம், பெலாரஸ், துருக்கி, பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் 20 அணு உலைகளுக்கான பணிகளைச் செய்து வருகிறோம். இங்கே விரைவில் மூன்றாவது அணு உலைக்கான பணியைத் தொடங்குவோம்’ என்று நம்பிக்கையுடன் சொன்னார்.
ஆச்சர்யப்பட்ட ஆந்திர மாணவர்கள்
ஆந்திராவில் விஜயவாடா அருகில் அணுஉலை அமைக்கப்பட இருக்கிறது. அதை, சுற்றுப்புற மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். இந்நிலையில், அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கும் கல்லூரி மாணவர்கள் 11 பேர் கூடங்குளம் வந்தனர். இதுபற்றி பேசிய மாணவர்கள் குழுவைச் சேர்ந்த சைலேந்திரா, ''நாங்கள் இந்தப் போராட்டத்தைப் பார்த்து பாடம் படிக்கவே வந்தோம். ஆனால் மக்களின் கஷ்டத்தை நேரில் பார்த்ததும் நாங்களும் 72 மணி நேர உண்ணாவிரதம் மேற்கொண்டு, இடிந்தகரை மக்களுக்கு எங்களுடைய ஆதரவை வெளிப்படுத்தி இருக்கிறோம்'' என்றார்.
குட்டையைக் குழப்பும் உளவுத்துறை
உள்ளூர் மக்களிடம் மோதல் ஏற்பட்டு இருப்பதை பெரிதாக்கினால் ஆதாயம் கிடைக்குமா என்ற ரீதியில் உளவுத்துறை செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுபற்றிப் பேசிய போராட்டக் குழுவினர், 'இடிந்தகரை கிராமத்தைச் சேர்ந்த இரண்டு டி.எஸ்.பி-கள் விடுமுறையில் வந்திருக்காங்க. அவர்கள் உள்ளூரில் இருந்தபடியே போராட்டத்தைத் திசை திருப்பும் வேலையைச் செய்கிறார்கள். மக்களைப் பிரித்தாளும் வேலையைச் செய்து போராட்டத்தை ஒடுக்கும் பணியில் காவல்துறையும் இறங்கி உள்ளது. எங்கள் கோரிக்கைகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை என்பதால், மே 1-ம் தேதி முதல் முழு மூச்சாக மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்க இருக்கிறோம்'' என்றார்கள்.
- ஆண்டனிராஜ், படங்க்ள்: எல்.ராஜேந்திரன்