ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

பாலியல் புகார்... லாக்கப் மரணம்!

மதுரை அதிர்ச்சி

##~##
பாலியல் புகார்... லாக்கப் மரணம்!

துரையில் ஒரு பாலியல் புகாரும் அதைத் தொடர்ந்து நடந்த மரணமும் அந்த வட்டாரத்தை பதற்றம் அடைய வைத்துள்ளது! 

மதுரை விஸ்வநாதபுரத்தில் உள்ள பால​மந்திரம் மேல்நிலைப் பள்ளியில், ஆதரவற்ற குழந்தைகள் அதிக அளவில் படிக்கிறார்கள். மாவட்டக் கலெக்டரைத் தலைவராகக் கொண்டு செயல்படும் இந்தப் பள்ளியின் செயலாளராக இருந்தவர், ஓய்வு பெற்ற ஆர்.டி.ஓ. கிருஷ்ணன். விடுதிக் காப்பாளராகவும் இருந்ததால், பள்ளி வளாகத்துக்குள்ளே இவருக்கு வீடு இருந்தது.

விடுதியில் சுமார் 25 மாணவிகள் தங்கி இருக்கிறார்கள். இவர்களில் ஐந்து பேர் திடீரென கிருஷ்ணன் மீது பாலியல் புகார் கொடுக்கவே, அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது போலீஸ். 76 வயதான கிருஷ்ணன் சிறையில் அடைக்கப்பட்ட மறுநாளே இறந்து போனதால், பிரச்னை வேறு ரூட்டில் பயணிக்கத் தொடங்கி உள்ளது.

பாலியல் புகார்... லாக்கப் மரணம்!

கிருஷ்ணனின் மகன் ரவீந்திரனிடம் பேசினோம். 'என் தந்தை தவறு செய்பவர் கிடையாது. ஒரு சிலர் திட்டம் போட்டு, அவரைக் கேவலப்படுத்தி இருக்கிறார்கள். ஒரு ஆசிரியையை பணி நிரந்தரம்

பாலியல் புகார்... லாக்கப் மரணம்!

செய்வதற்கு, அவரது கணவர் குறுக்கு வழியில் முயற்சி மேற்கொண்டார். அதற்குத் தலைமை ஆசிரியரும் உடந்தை. என் தந்தை அதற்கு உடன்பட மறுத்ததால், அவரை எப்படியாவது பழிவாங்க வேண்டும், செயலாளர் பதவியில் இருந்து தூக்க வேண்டும் என்று திட்டம் போட்டார்கள். அதற்காக, ஐந்து மாணவிகளிடம் வெற்றுப் பேப்பரில் கையெழுத்து வாங்கி தல்லாகுளம் போலீஸில் பொய்ப் புகார் கொடுத்து இருக்கிறார்கள். புகார் கொடுத்த மறுநிமிடமே, எந்த விசாரணையும் இல்லாமல் என் தந்தையைக் கைது செய்துவிட்டார் இன்ஸ்பெக்டர்.

கைது செய்த சில நிமிடத்திலேயே அந்த ஆசிரியையின் கணவர் ஒரு தனியார் டி.வி-க்கு பேட்டி கொடுத்தார். இதில் இருந்தே புகார் கொடுத்தது அவர்தானே தவிர மாணவிகள் இல்லை என்பது தெரியும். குழந்தைகளின் பெற்றோரோ, பள்ளி ஆசிரியர்களோ புகார் கொடுக்காமல் மூன்றாவது நபர் புகார் கொடுப்பதன் காரணம் என்ன என்று போலீ​ஸார் யோசித்திருக்க வேண்டாமா? புகார் பற்றி குறைந்தபட்ச விசாரணை நடத்தி இருந்தாலே, பின்னணி தெரியவந்து இருக்கும்.  காவல் நிலையத்தில் கடுமையாக நடத்தப்பட்ட அவமானத்தில்தான் என் தந்தை இறந்திருக்கிறார். எனவே, சம்பந்தப்பட்ட அத்தனை பேர் மீதும் கொலை வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார் கண்ணீரோடு.

'1995-ம் ஆண்டு நெல்லை கலெக்டரின் நேர்முக உதவியாளராக இருந்து ஓய்வு பெற்ற என் மாமனாரின் நேர்மையைப் பாராட்டும் விதமாகத்தான் இந்த கௌரவப் பதவியைக் கொடுத்தார்கள். மூன்று ஆண்டுகள்தான் இந்தப் பதவி என்கிற போதிலும், அவரது சிறந்த நிர்வாகத்தைப் பாராட்டி

பாலியல் புகார்... லாக்கப் மரணம்!

பல்வேறு கலெக்டர்கள் மொத்தம் ஐந்து முறை அவரது பதவிக் காலத்தை நீட்டிப்பு செய்தார்கள். சமீபத்தில்கூட அவரது பதவி நீட்டிப்புக்காக, இதே தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் அவருக்கு நன்னடத்தைச் சான்று கொடுத்தார்கள்.

தூரத்தில் இருப்பது அவருக்குச் சுத்தமாகத் தெரியாது. ஆனால், அவர் மாணவிகள் குளிப்பதைத் தொலைவில் இருந்து ரசித்ததாக எஃப்.ஐ.ஆர். போட்டிருக்கிறார்கள். ஒரு சர்க்கரை நோயாளிக்கு நாள் முழுக்க உணவு கொடுக்காமல், விசாரணை என்ற பெயரில் டார்ச்சர் செய்திருக்கிறார்கள். அவ​மானம், வேதனை, வலியோடு அவர்  கொல்லப்​பட்டதற்கு  பதில் சொல்லியே ஆக வேண்டும்'' என்றார் கிருஷ்ணனின் மருமகன் தவமணிராஜன்.

இதுபற்றி தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமாரிடம் கேட்டோம். 'பாதிக்கப்பட்ட மாணவிகள் ஐந்து பேர் நேரடியாக காவல் நிலையத்துக்கு வந்து புகார் கொடுத்தார்கள். அந்த மாணவிகளிடம் விசாரித்தோம். பால்கனியில் இருந்து தான் பார்ப்பதற்கு வசதியாக, பாத்ரூமுக்கு வெளியே நின்று குளிக்க வேண்டும் என்று தங்களை கிருஷ்ணன் கட்டாயப்படுத்தியதாகச் சொன்னார்கள். அவரது எண்ணம் புரியாத அப்பாவி மாணவிகள் சிலர் அப்படியே குளித்திருக்கிறார்கள். கொஞ்சம் பெரிய குழந்தைகள் பாத்ரூம் கதவை மூடிவிட்டுக் குளித்தபோது, அவர்களைக் கூப்பிட்டுக் கண்டித்திருக்கிறார். மோசமான வார்த்தைகளால் திட்டியிருக்கிறார். சில நேரங்களில் பாத்ரூம் கதவை வெளிப்புறமாகப் பூட்டி அவர்களைத் தவிக்க விட்டிருக்கிறார். வார்டன் என்கிற முறையில், தன்னிடம் விடுமுறை கேட்டு வரும் குழந்தைகளைத் தவறான இடங்களில் தொட்டுப் பேசியிருக்கிறார். இவை எல்லாம் உண்மைதான் என்று அங்கு பணிபுரியும் சில ஆசிரியர்களிடமும், கிருஷ்​ணனின் உதவியாளர்களிடமும் விசாரித்து ஊர்ஜிதப்படுத்திய பிறகுதான் கைது செய்தோம். பள்ளியில் பாலிடிக்ஸ் இருக்கலாம். அதற்காகத் தவறு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியுமா?

வயதானவர், அரசுத் துறையில் மிக உயர்ந்த பதவியில் இருந்தவர் என்கிற முறையில் அவரிடம் கண்ணியமாகத்தான் நடந்து கொண்டோம். தனக்கு சர்க்கரை வியாதி, நெஞ்சு வலி இருப்பதாக அவர் எங்களிடம் தெரிவிக்கவில்லை. அப்படிச் சொல்லி இருந்தால், உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்திருப்போம்'' என்றார்கள்.

மதுரை ஜெயில் அதிகாரி ஆனந்த், ''அவர் மாலையில் நன்றாகத்தான் இருந்தார். காலை 5 மணிக்கு நெஞ்சு வலிப்பதாகச் சொன்னதும், சிறையில் இருந்த மருத்துவர் முதல் உதவி சிகிச்சை அளித்தார். அதன்பிறகு மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பரிசோதனை செய்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே உயிர் பிரிந்திருக்க வேண்டும் என்று சொல்லி​விட்டார்கள்'' என்று விவரித்தார்.

யார் சொல்வது உண்மை என்று தெரிவதற்கு முன்னால் கிருஷ்ணன் இறந்து போனது சோகமானது​தான்!

- கே.கே.மகேஷ், படங்கள்: பா.காளிமுத்து