ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

சட்டச் சிக்கலில் அலெக்ஸ் பால்மேனன்

விடுதலைக்குக் குறுக்கே எட்டுப் பேர்!

##~##

லெக்டர் அலெக்ஸ் பால் மேனனை விடுவிக்க நக்சல்கள் விடுத்​துள்ள கோரிக்கையை ஏற்பதில் ஏராளமான சட்டச் சிக்கல்கள் இருப்ப​தால், விழி பிதுங்கி நிற்கிறது சத்தீஸ்கர் அரசு. 

கலெக்டரின் கடத்தலைத் தொடர்ந்து பிரசாந்த் பூஷண், முன்னாள் கலெக்டர் பி.டி.சர்மா மற்றும் ஆதிவாசிகள் மகாசபாவின் தலைவர் மணீஷ் குஞ்சாம் ஆகியோரைத் தங்கள் தரப்புப் பேச்சுவார்த்தைப் பிரதி நிதிகளாக நக்சல்கள் அறிவித்தனர். இவர்களில் பிரசாந்த் பூஷண், 'நான் தலையிட விரும்பவில்லை’ என்று ஒதுங்கிக்கொண்டார். மணீஷ் குஞ்சாம், கலெக்டர் மேனனுக்கு மருந்துகளை மட்டும் கொண்டுபோய்க் கொடுக்க ஒப்புக்கொண்டார்.

ராய்ப்பூரில் இருந்து சுக்மாவுக்கு அரசு ஹெலிகாப்டரில் சென்று, கலெக்டரின் மனைவியிடம் இருந்து மருந்துகளைப் பெற்றுக்​கொண்டவர், அங்கு இருந்து பஸ்தர் காட்டுக்குள் நக்சல்களின் கட்டுப்​பாட்டில் இருக்கும் தார்மட்டேலாவுக்கு பொலிரோ வாகனத்தில் சென்றார். மணீஷைத் தொடர்ந்து வந்த பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தப்​பட்டனர். அங்கிருந்து மணீஷை இரு நக்சல்கள் தங்கள் பைக்கில் ஏற்றிக்கொண்டு மாற்றி மாற்றி ஓட்டிச் சென்றார்களாம். அதன் பின்னரே மருந்துகளை ஒப்படைத்து விட்டு, இரண்டாம் நாள் (26-ம் தேதி) காலை 10 மணிக்குத் திரும்பினார் மணீஷ். இவர் கலெக்டரை சந்திக்கவில்லையாம்.

சட்டச் சிக்கலில் அலெக்ஸ் பால்மேனன்

நக்சல்களுடன் அரசுத் தரப்பு கடந்த 26-ம் தேதி பேச்சுவார்த்தை தொடங்கி ​விட்டாலும், எட்டு நக்சல்களை விடுதலை செய்வது மற்றும் கொலை வழக்கில் இருந்து  ஆறு பேரை விடுவிப்பது போன்ற கோரிக்கைகளை எப்படி நிறைவேற்றுவது என்று வழி தெரியாமல் தவிக்கிறது சத்தீஸ்கர் அரசு.

சத்தீஸ்கர் மாநிலத்தில் 1,500 நக்சல்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ளனர். இவர்களில் சுமார் 800 பேர் தீவிர நக்சல்கள். இவர்களில் இருந்து எட்டுப் பேரை மட்டும் விடுவிக்கக் கேட்பதில் இருந்தே, அவர்களின் முக்கியத்துவம் புரியும். இந்த எட்டுப் பேரைப் பற்றி விசாரித்தோம்.

மரக்காம் கோபண்ணா என்கிற சத்யம் ரெட்டி:

பல முக்கியத் தாக்குதல்களுக்கு மாஸ்டர் மைண்ட். 2007-ம் ஆண்டு மே மாதம் கரியாபாத்தில் பிடிபட்ட இவர் மீது, சத்தீஸ்கர், ஆந்திரா, மகாராஷ்டிரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

மீனா சௌத்ரி:

44 வயதான இவர் முக்கிய நக்சல் தலைவரான குட்சா உசண்டி என்பவரின் மனைவி. 2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் ராய்ப்பூரில் மாதர்கள் விடுதியில் தங்கி இருந்தபோது, கைது செய்யப்பட்டார். ஆயுதம் கடத்தியதாக இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சட்டச் சிக்கலில் அலெக்ஸ் பால்மேனன்

சாந்தி ப்ரியா ரெட்டி என்கிற மாலதி:

கடந்த 2008-ம் ஆண்டு ஜனவரி 21-ம் தேதி ராய்ப்பூரில் இவர் கைது செய்யப்பட்டார். மகாராஷ்டிராவில் இருந்து பஸ்தருக்கு அதி நவீன ஆயுதங்களைக் கடத்தியதாக இவர் மீது வழக்கு.

அசித்குமார் சென்:

70 வயதான இவர் ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர். புத்தக வெளியீட்டாளர். மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். நக்சல்கள் தொடர்பாக தடை செய்யப்​பட்ட புத்தகங்களை அச்சிட்டதாக 2008-ம் ஆண்டு திக்ராபாடாவில் கைது செய்யப்பட்டார்.

மேற்கண்ட நான்கு பேரும் ராய்ப்பூர் மத்தியச் சிறையில் இருக்கிறார்கள். இவர்கள் தவிர, நிர்மலா அக்கா என்ற விஜயலட்சுமி, தேவபால் சந்திரசேகர ரெட்டி, கோர்சா சன்னி, மரக்காம் சன்னி ஆகிய நான்கு பேர் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்​பட்டு ஜக்தால்பூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் நான்கு பேரும் நக்சல்களுக்கு படை திரட்டுவது, ஆயுதம் சேகரிப்பது, தகவல் தொழில் நுட்பத்தை மேம்படுத்துவது போன்ற பணி​களை செய்தனர் என்கிறது போலீஸ் வட்டாரம்.

இந்த எட்டுப் பேரையும் பிடிப்பதற்காக போலீஸ் படாதபாடு பட்டுள்ளது. இவர்களின் தேடுதல் வேட்டையின்போது, நூற்றுக்கணக்கான போலீஸார் கொல்லப்பட்டு உள்ளார்கள். அதனால், இவர்களை விடுதலை செய்ய மாநிலத்தின் மூத்த போலீஸ் அதிகாரிகள் போர்க்கொடி தூக்குகிறார்கள். தவிர, மீனாசௌத்ரி, அசித்குமார் சென் ஆகியோர் மீதான வழக்குகளில் இருவருக்கும் ஏழு ஆண்டுகள் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. சாந்தி ப்ரியா ரெட்டி மீதான ஆயுதக் கடத்தல் வழக்கில் விசாரணை முடிந்து விரைவில் தண்டனை அறிவிக்கப்பட உள்ளது. விசாரணைக் கைதிகளை வேண்டுமானால் ஜாமீன் மனு போடச் சொல்லி விடுவித்து விடலாம். ஆனால், தண்டனை அறிவிக்கப்பட்டவர்களை விடுவிக்க நிறைய சட்டச் சிக்கல்கள் உண்டு. ஒரே வழி, கவர்னரிடம் கருணை மனு அளித்து அதை ஏற்றுக்கொள்ளும்படி அரசு வற்புறுத்தலாம். அதேபோல், காங்கிரஸ் தலைவர் ஹங்காராம் மரக்காம் கொலை வழக்கில் இருந்து ஆறு பேரை விடுவிக்க வேண்டும் என்று நக்சல்கள் கேட்பதிலும் சட்டச் சிக்கல் இருக்கிறது. அப்படி விடுவிக்கும் நிலையில் நீதிமன்றத்துக்கு என்ன பதில் சொல்வது என்று கேட்கிறார்கள் விசாரணையை நடத்தும் அதிகாரிகள்!

இந்தச் சட்டச் சிக்கல்களைத் தாண்டி, ஒட்டு​மொத்த மக்களின் பிரார்த்தனை, அலெக்ஸ் பால் மேனன் விடுதலைக்கு துணை நிற்கட்டும்.

- ஆர்.ஷஃபி முன்னா

படங்கள்: தீபக் பாண்டே