ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

'தானே' துயர் துடைத்தோம்!

'தானே' துயர் துடைத்தோம்!

'தானே' துயர் துடைத்தோம்!

புயலோ, பூகம்பமோ அந்த மக்களைத் தாக்கவே தேவை இல்லை. எப்போதுமே அப்படித்​தான் இருக்கிறார்கள். இருக்க இடம் இல்லாமல்... நகரைவிட்டு விலகி,  ஓரமான ஒரு பகுதியில், மண் வீடுகளும் ஓலைக் குடிசைகளுமாக வாழ்ந்து வருகிறார்கள். 'வாழ்ந்து’ என்று சொல்வதுகூட அடை​யாளத்துக்காகத்தான், நாட்களைக் கழித்து​வருகிறார்கள்!

கடலூரில் இருந்து நெடுஞ்சாலையை விலக்கிச் சென்றால், கொஞ்சம் மேடு, ஆறு... சிறுமலை அடிவாரத்துக்குக் கீழே இருக்கிறது புதுநகர். யார் இந்தப் பெயரை வைத்தது என்று தெரியவில்லை. புதுசு எதற்குமே வழி இல்லாமல் அரதப் பழசான வாழ்க்கைதான் அந்த மக்களுக்கு வாய்த்து இருக்கிறது.

அரை நூற்றாண்டு அடைந்த பலாவையும் கால் நூற்றாண்டைக் கடந்த முந்திரியையுமே 'தானே’ தாக்கித் தகர்த்து விட்டது என்றால், புதுநகர் வாசிகளின் கூரைகள் எம்மாத்திரம்? அந்த நாளில் அத்தனை கூரைகளும் காற்றினால் கடத்திச் செல்லப்பட்டு விட்டன. வானத்தையே கூரையாக்கி வாழ்வதைத் தவிர அவர்​களுக்கு வேறுவழி இல்லை. 'கையது கொண்டு மெய்யது பொத்தி...’ என்பது பெருமையாகச் சொல்லக் கூடியதா என்ன?

'தானே' துயர் துடைத்தோம்!

புதுநகர் மக்களுக்குச் சொந்தமாக மனை கிடையாது. விவசாயம் செய்ய நிலம் கிடையாது. நிரந்தரமான வேலை இல்லை. ஏனென்றால், அதற்கான படிப்பு இல்லை. அன்றாடம் கிடைக்கும் கூலி வேலைக்குச் செல்கி​றார்கள். அதுவும் கிடைக்காத அன்று, குப்பை பொறுக்கப் போகிறார்கள்.

'தானே' துயர் துடைத்தோம்!

இப்படி ஒரு ஊர் இருக்கிறது என்று கேள்விப்பட்ட மறுநாளே, நமது அணி அந்த இடத்துக்குச் சென்றது. அவர்களுக்கு என்ன தேவை என்பதை அவர்களிடம் கேட்காமலேயே அறிய முடிந்தது. பழைய துணி மூட்டையைத் தலைக்கு வைத்து... சாக்குப் பையை விரித்துப் படுக்கிறார்கள். அவர்கள் கட்டி இருந்த துணிகள் மிக மோசமான நிலையில் இருந்தன.  செங்கற்​களை வைத்து விறகு மூட்டி... சமையல் செய்து​கொண்டு இருந்தார்கள். சாப்பிட நல்ல தட்டு இல்லை. தண்ணீர் சேகரித்து​வைக்கும் குடங்கள் ஒட்டுப் போடப்பட்டு இருந்தன. ''ரேஷன் கார்டு... ஸ்கூல் சர்ட்டிஃபிகேட்... கவர்​மென்ட் லெட்டரு... இதை எல்லாம் விடுங்க... எங்க கல்யாணப் பத்திரிகையைக் கூடப் பத்திரமா வெச்சிருக்க எங்களுக்கு எந்த வசதி​யும் இல்ல'' என்று வேதனையைப் பகிர்ந்தார் ஒரு பெண். 'விகடன் துயர் துடைப்பு அணி’ இது​வரை பார்த்த ஊர்களிலேயே மிகமிக மோச​மான நிலையில் புதுநகர் இருப்பதை உணர முடிந்தது.

'தானே' துயர் துடைத்தோம்!

மொத்தம் 212 குடும்பங்கள். அவர்களின் உடனடித் தேவைகள், அத்தியாவசியத் தேவைகள் ஆகியவற்றைப் பட்டியல் இட்டோம். அத்தனை பொருட்களையும் அந்த மக்களுக்கு வாங்கித் தருவது என்று முடிவெடுத்தோம்.

மண்ணெண்ணெய் பம்ப் ஸ்டவ், குடம், வாளி, தட்டு, டம்ளர்கள், தலை​யணை, போர்வைகள், சேலைகள், லுங்கி, பிளாஸ்டிக் பாய்... இவற்றுடன் பெரிய டிரங் பெட்டி ஆகிய பொருட்கள் அடங்கிய ஒரு செட் 3,000 ரூபாய். இந்தப் பொருட்களை சென்னை சரவணா ஸ்டோரில் வாங்கினோம். ''தானே துயர் துடைப்புக்கான சேவை மனப்பான்மையுடன் இந்தப் பொருட்கள் வாங்கப்படுவதால் எங்களால் முடிந்த உதவி'' என்று குறிப்பிட்ட தொகையைத் தள்ளுபடி செய்தது அந்த நிறுவனம். சென்னையில் இருந்து இரண்டு லாரிகளில் இந்தப் பொருட்கள் புதுநகர் எடுத்துச் செல்லப்பட்டு ஏப்ரல் 13-ம் தேதி விநியோகம் செய்யப்பட்டன. அந்த சுபதினத்தில் புதுநகர் மக்களின் முகத்தில் புன்னகை பூத்தது.

''எல்லாரும் வந்து பார்த்துட்டுப் போவாங்க. ஆனா, 'விகடன்’ மட்டும்தான் எங்களுக்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் கொடுத்திருக்கு. தாய் வீட்டுல இருந்து வந்த சீதனம் மாதிரி இருக்கு!'' என்றார் ஜெயந்தி.

''இந்த டிரங்குப் பெட்டி வந்த நேரமாவது நாலு காசு சேரணும்!'' என்று சொல்லிச் சிரித்​தார் கிருஷ்ணவேணி.

''ஒரு குடும்பத்துக்கு எதுவெல்லாம் தேவையோ... அதை எல்லாம் பார்த்துப் பார்த்து வாங்கி இருக்கீங்க. மண்ணெண்ணெய் ஸ்டவ் கொடுத்ததுல எங்களோட முக்கால்​வாசிப் பிரச்னை தீர்ந்துபோச்சு. எங்க வாழ்க்கை நிலை மாறிடும்!'' என்று நம்பிக்கை​யுடன் பேசினார் கண்ணன்.

விகடன் வாசகர்களின் எண்ணமும் அதுதான்!

- விகடன் 'தானே’
துயர் துடைப்பு அணி