ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

விட்டு விடுங்கள் ராஜினாமா செய்கிறேன்!

கதறிய ஹிகாகா மனம் மாறிய மாவோயிஸ்ட்டுகள்

##~##

டிசா நக்சலைட்டுகளால் கடத்தப்பட்ட ஆளும் பிஜூ ஜனதாதளக் கட்சி எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகா 32 நாட்களுக்குப் பின் விடுதலை செய்யப்​படவே, பெருமூச்சு விடுகிறது நாடு! 

கடந்த மார்ச் 15-ம் தேதி இத்தாலி நாட்டைச் சேர்ந்த, பசுஸ்கோ போலோ, கிளாடியோ களங்​கிலோ ஆகியோர் ஒடிசா மாநில அமைப்பின் மாவோயிஸ்ட்​டுகளால் கடத்தப்பட்டனர். இவர்களைக் கடத்தியவர்கள், மாவோயிட்ஸ்டு இயக்கத்தின் ஐந்து முக்கியத் தலைவர்களை சிறையில் இருந்து விடுவிப்பது உள்ளிட்ட 13 கோரிக்கைகளை முன் வைத்தனர். அரசும் தேடுதல் வேட்டையை நிறுத்திவிட்டு, பேச்சுவார்த்தையைத் தொடங்கியது. அதற்கு ஒரு முடிவு ஏற்படுவதற்குள், ஒடிசா மாவட்டத்தில் இருக்கும் லஷ்மிபூர் தொகுதியின் எம்.எல்.ஏ-வான ஜினா ஹிகாகாவை மார்ச் 24-ம் தேதி ஆந்திர, ஒடிசா எல்லையின் சிறப்புப் பிராந்தியக் குழுவின் மாவோயிஸ்ட்டுகள் பிணையக் கைதியாகப் பிடித்தனர். இவரது விடுதலைக்காக, சசி முலியா ஆதிவாசி சங்கத்தின் 30 முக்கியத் தலைவர்களை விடுவிப்பது உள்ளிட்ட ஏழு நிபந்தனைகளை விதித்தனர்.

விட்டு விடுங்கள் ராஜினாமா செய்கிறேன்!

மாவோயிஸ்ட்டுகள் தரப்பில் ஒடிசாவின் சமூக சேவகர் தண்டபாணி மொஹந்தி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.டி.சர்மா ஆகியோர் அரசிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில், பி.டி.சர்மா​தான் சத்தீஸ்கரில் கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனின் விடுதலைக்காகவும் நக்சல்கள் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்த அமர்த்தப்பட்டு உள்ளார். இதற்கிடையே, கிளாடியோ களங்கிலோ மற்றும் பசுஸ்கோ இருவரும் அடுத்தடுத்து விடுதலை செய்யப்பட்டனர்.

விட்டு விடுங்கள் ராஜினாமா செய்கிறேன்!

ஆனால், மாவோயிஸ்ட்டுகளின் மற்றொரு குழுவின் பிடியில் இருந்த ஹிகாகா மட்டும் சிக்கலில் இருந்தார். இவரது விடுதலைக்காகக் கோரப்​பட்ட 30 பேரில் எட்டு மாவோயிஸ்ட்டுகள் உள்ளிட்ட 25 பேரை மட்டும் விடுவிப்பதாக அரசு ஒப்புக்​கொண்டது. அதன்படி முதல் நடவடிக்கையாக ஐந்து பேருக்கு மட்டும் ஜாமீன் அளித்து விடுதலை செய்தது. மற்றவர்களின் ஜாமீன் மனு நீதிமன்ற நடவடிக்கைகளில் இழுபறியாகவே, ஹிகாகாவின் விடுதலை மேலும் சிக்கலானது. அதனால் இவரை 'பிரஜா கோர்ட்’ எனும் நக்சல்களால் நடத்தப்​படும் மக்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தார்கள். மக்கள் நீதிமன்றத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 26-ம் தேதி காலை ஹிகாகாவை விடுவிக்க இருப்பதாக மாவோயிஸ்ட்டுகளே அறிவித்தனர்.

அதன்படி, கொராபேட் மாவட்டத்தில் உள்ள பலிபேட்டா எனும் இடத்தில் காத்திருந்த ஹிகாகா​வின் மனைவி கௌசல்யா மற்றும் வழக்கறிஞர் நிஹார் ரஞ்சன் பட்நாயக்கிடம் காலை 10.35 மணிக்கு ஒப்படைத்தனர். இவரை அருகிலுள்ள மலைப் பகுதியிலிருந்து சசி முலியா ஆதிவாசி சங்கத்தைச் சேர்ந்த சுமார் 50 பேர் கால்நடையாகவே அழைத்து வந்தனர். அங்கு பேசிய ஹிகாகா, தன்னை மாவோயிஸ்ட்டுகள் நல்ல முறையில் கவனித்துக் கொண்டதாக மட்டும் கூறி​விட்டுக் கிளம்பினார்.

இந்த விவகாரம் பற்றிப் பேசும் ஹிகாகாவின் ஆதரவாளர்கள், ''ஒடிசாவில் மாவோயிஸ்ட்டுகளின் ஆதிக்கத்தில் உள்ள நாராயண்பட்னா பகுதியில்தான் ஜின்னா ஹிகாகா சிறை வைக்கப்பட்டு இருந்தார். 24-ம் தேதி பிரஜா கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்ட ஹிகாகா மீது புகார்​கள் படிக்கப்பட்டன. அதில், ஆதிவாசிகள் முன்னேற்றத்​துக்காகச் சிறிதும் அக்கறை கொள்ளாத ஆளும் அரசின் கட்சியில் எம்.எல்.ஏ-வாக இருப்பதாக குற்றம் கூறப்பட்டது. இதை ஒப்புக் கொண்டார் ஹிகாகா. மேலும், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்கள் நலனுக்காக மட்டும் தொடர்ந்து பாடுபட போவதாகக் கூறி மன்னிப்பை வேண்டி​னார். இதை ஏற்றுக் கொண்ட பிரஜா கோர்ட், ராஜினாமா உள்ளிட்ட சில நிபந்தனைகளை கட்டாயமாக்கி, அவரை விடுவித்து உள்ளது'' என்று தெரிவித்தனர்.

இந்தக் கடத்தல் குறித்துப் பேசிய அரசு அதிகாரிகள், ''சசி முலியா ஆதிவாசி சங்கம் என்பது, நக்சலைட்டுகள் ஆதரவு பெற்றது. அதன் முக்கியத் தலைவரான நாசிக்கா லிங்கா கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே, ஹிகாகாவை மாவோயிஸ்ட்டுகள் கடத்தினர். மாவோயிஸ்ட்டுகளின் பிரஜா கோர்ட் போலியானது. இவர்​களாகவே ஒரு முடிவு எடுத்து அதை மக்கள் நீதிமன்றம் கூறியதாக அறிவிப்பார்கள். அவர்கள் கோரிய 30 பேரில் நான்கு பேர் மாவோயிஸ்ட்டுகளின் முக்கியத் தலைவர்கள். அவர்கள் மீது அருகிலுள்ள ஆந்திர, சத்தீஸ்கர் மாநிலங்களிலும் கிரிமினல் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. மாவோயிஸ்ட்டுகளின் கமாண்டர் சண்ட பூஷண் மீது ஒடிசாவில் மட்டும் 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அரசு உறுதி அளித்தபடி, 25 பேரில் 12 பேரை முதலில் ஜாமீனில் விடுவிக்க உள்ளது. மற்ற 13 பேர் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டு அவர்களும் விடுதலை செய்யப்படுவார்கள்'' என்றனர்.

மாவோயிஸ்ட்டுகளின் உண்மையான பிரச்னை​களைக் கண்டறிந்து, தீர்வு காணாத வரையிலும் இதுபோன்ற கடத்தல்களையும் மிரட்டல்களையும் தவிர்க்கவே முடியாது.

- ஆர்.ஷஃபி முன்னா